அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்யுங்கள் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் பகிரங்க மனுவில் கையெழுத்திடும் இயக்கம், மனித உரிமை செயற்பாட்டாளர் அமைப்பினால் நாளை கொழும்பில் ஆரம்பிக்கப்படுகிறது. நாடு முழுக்கவும் முன்னெடுக்கப்படவுள்ள இந்த இயக்கத்திற்கு மக்கள் கண்காணிப்பு குழு முழுமையான ஒத்துழைப்பை வழங்குகின்றது.
நாளை 27ம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு எதிரில் ஆரம்பமாகும் நிகழ்வில் அனைத்து தமிழ் கைதிகளின் குடும்ப உறுப்பினர்கள்-நண்பர்களும், மக்கள் பிரதிநிதிகளும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டு மனுவில் கையெழுத்திட வேண்டுமென மக்கள் கண்காணிப்பு குழுவின் அழைப்பாளரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
மனோ கணேசனின் தனது அழைப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
அரசியல் கைதிகளின் மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல்களில், நிமல்ரூபன் என்ற கைதி சமீபத்தில் மரணித்துள்ளார். இன்னும் பலர் படுகாயங்களுடன் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு அவசியமான மருத்துவ வசதிகள் கிடைப்பது இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அத்துடன் நாடு முழுக்க தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று பூசா முகாமில் ஒன்று திரட்டி அடைத்து வைக்க அரசாங்கம் திட்டமிடுவதாகவும் செய்தி கிடைத்துள்ளது.
இந்நிலையில் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினையை தென்னிலங்கை உட்பட நாடு முழுக்க கொண்டு செல்ல வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இந்த பின்னணியில், மனித உரிமை செயற்பாட்டாளர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, அரசியல் கைதிகளை விடுதலை செய்க என்ற கோரிக்கையை முன்னெடுக்கும் இந்த பகிரங்க மனுவில் கையெழுத்திடும் நிகழ்வில் கலந்து கொள்ளுவது நமது கடமை என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment