Translate

Saturday, 28 July 2012

பாதுகாப்பு வழங்க பிரித்தானியா மறுத்ததை அடுத்து, லண்டன் விஜயத்தை ரத்துச்செய்தார் மகிந்த!!


லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு வழங்க பிரித்தானியப் பொலிஸார் மறுத்ததை அடுத்து, அவரின் லண்டன் விஜயம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்குமாறு பிரித்தானியாவுக்கான இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்திருந்ததாக தெரிய வருகின்றது.
இந் நிலையில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு தனிப்பட்ட முறையில் பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க முடியாது என பிரித்தானியாவின் ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதனை பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய பணியகமும் அரசாங்கத்துக்கு அறிவித்திருந்தது.
இதனையடுத்தே ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளும் தமது முடிவை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாற்றிக் கொண்டதாக தெரிய வந்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின் போது மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள மகிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை வழங்க பிரித்தானிய ஸ்கொட்லன்ட்யாட் பொலிஸார் மறுப்புத் தெரிவித்தமை, இலங்கை அரசாங்த்தின் ஒரு இராஜதந்திரத் தோல்வியாகவே கருதப்படுகின்றது.
லண்டனில் நடைபெறுகின்ற ஒலிம்பிக் போட்டிகளின் தொடக்க விழாவில் கலந்து கொள்ள வரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிராக புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பாரிய போராட்டத்தை நடத்தவுள்ளதாக 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை நேற்று முன்தினம் செய்தி வெளியிட்டிருந்தது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விரைவில் இலண்டனுக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவரின் பேச்சாளர் பந்துல ஜெயசேகர உறுதிப்படுத்தி இருந்ததாக 'தி இன்டிபென்டன்ட்' பத்திரிகை குறிப்பிட்டிருந்தது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பிரித்தானிய மகாராணியின் வைரவிழா நிகழ்வுகளில் கலந்து கொள்ள வந்திருந்த போதும், அதற்கு முன்னதாக 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வந்திருந்த போதும் புலம்பெயர்ந்த தமிழ் மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களால் அவர் உரையாற்றவிருந்த நிகழ்வுகள் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment