Translate

Wednesday, 15 August 2012

தமிழினம் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ நினைத்திருந்த 30 வருட போராட்டத்திலும் படுகொலை செய்யப்பட்டது


தமிழினம் ஜக்கிய இலங்கைக்குள் இணைந்து வாழ நினைத்திருந்த 30 வருட போராட்டத்திலும் படுகொலை செய்யப்பட்டது
தமிழினம் ஜக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து வாழ நினைத்திருந்த 30 வருடகால ஜனநாயக போராட்ட காலத்திலும் படுகொலை செய்யப்பட்டது
தமிழர்கள் தனிநாடு கோராமல், ஜக்கிய இலங்கைக்குள் ஒன்றிணைந்து வாழ நினைத்திருந்த முப்பது வருடகால ஜனநாயக வழிமுறையிலான போராட்ட காலத்திலும், எங்கள் இனம் படுகொலை செய்யப்பட்டது. எங்கள் இனத்தின் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. இதனை எவரும் மறைத்து விட முடியாதென தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலை படுகொலைகளை கண்டித்தும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையினை வலியுறுத்தியும் தமிழ்தேசிய மக்கள் முன்னணி ஏற்பாடு செய்திருந்த போராட்டத்தினில் கலந்து கொண்டு இன்று உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.; மேலும் அவர் தனதுரையினில் தெரிவிக்கையில், உண்மையில் டெல்றொக்கசனினதோ, நிமலரூபனினதோ படுகொலைகள் விசாரிக்கப்படப்போவதில்லை. எப்படி வெலிக்கடையில் வேறொரு ஆட்சியில், வேறொரு அரசாங்கத்தின் கீழ் எங்கள் தமிழ் அரசியல் கைதிகள் படுகொலை செய்யப்பட்டார்களோ
அப்போதும் நாங்கள் விசாரணைகேட்டு நீதிக்காக போராடினோம். எமக்கு அப்போதும் நீதி கிடைக்கவில்லை. இதன் பின்னர் இன்னொரு அரசு வந்தது, இன்னொரு ஆட்சிவந்தது, பிந்துனுவௌவில் புனர்வாழ்விற்கென தடுத்த வைக்கப்பட்டிருந்தவர்கள் மீண்டும் படுகொலை செய்யப்பட்டனர். அப்போதும் நாங்கள் நீதிக்காக போராடினோம். அப்போதும் நீதி கிடைக்கவில்லை.
இப்போது வவுனியா சிறைச்சாலையில் நிமலரூபன், டெல்றொக்சன் படுகொலை செய்யப் பட்டிருக்கின்றார்கள். இப்போதும் நீதிக்காக போராடுகின்றோம். நிச்சயமாக நீதி கிடைக்கப் போவதில்லை. உள்ளக ரீதியாக எமக்கு நீதி கிடைக்கப்போவதில்லை. இந்த படுகொலைகளுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்படவோ, நீதியின் முன் நிறுத்தப்படவோ போவதில்லை.
எம்முடைய மக்கள் சரியாக நிலைமைகளை புரிந்துகொள்ளவேண்டும். நாங்கள் மீண்டும், மீண்டும் எங்களுக்கு எதிராக நடந்து கொண்டிருக்கும் அநியாயங்களுக்கு எதிராக அழுது புலம்பி பேசிக் கொண்டிருக்கப்போகின்றோமா? அல்லது நிலைமைகளை சரியாக அறிந்து புத்திசாலித்தனமாக எங்கள் நிலைப்பாடுகளை முன்னெடுக்கப்போகின்றோமா? ஏன்பதே இன்று எம்முன்னாலுள்ள கேள்வி.
இதில் யதார்த்தம் என்னவென்றால் தமிழர்கள் தனிநாடு கேட்காமல், ஒற்றுமையாகவும், நியாயமாகவும் ஜக்கிய இலங்கைக்குள் இணங்கி வாழ நினைத்த போதும், எங்கள் இனம் படுகொலை செய்யப்பட்டது. எங்கள் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதுNவு யதார்த்தம் எனவே எங்கள் கடந்தகால படிப்பினைகளை சரியாக புரிந்து கொள்ளவேண்டும். அல்லாது போனால் எங்கள் பிரச்சினைகள் தீரப்போவதில்லை.
எமக்கொரு பொறுப்புள்ளது எங்கள் இனம் அழிந்து, நொந்துபோயிருக்கின்றது. கடந்த காலங்களினில் மக்களை ஏமாற்றியிருக்கின்றோம். இனிமேலும் அவ்வாறிருக்க முடியாது. அவ்வாறிருந்தால் மக்கள் நிச்சயமாக எங்களுக்கெதிராகத் திரும்புவார்கள். நாங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும்.
தமிழ் மக்களுடைய அரசியல் தலைவர்கள் என்ற வகையில் நாம் ஒன்றிணைந்து. எங்கள் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்த முடியாத, அழிக்க முடியாதளவு தீர்வினை பெற்றுக் கொடுக்கவேண்டும். இதற்காக தென்னிலங்கை முற்போக்குவாத சக்திகளுடன் இணைந்து எங்கள் தேசத்தின் அங்கீகாரத்தைப் பெறுவதற்காக போராடுவோம். எங்கள் போராட்டங்கள் நிறைவுபெறாது என்றார்.

No comments:

Post a Comment