கோலாலம்பூர்: ஈழத் தமிழருக்கு ஆதரவாக இருக்கிறாரோ என்ற சந்தேகத்தில் மலேசியாவுக்கான இலங்கைத் தூதர் கல்யாணந்த கொடஹேவின் பதவியை பறித்து அவரை நாட்டுக்கு திரும்ப அழைத்திருக்கிறது இலங்கை அரசாங்கம்.
இலங்கைக்கான மலேசிய தூதராகப் பணியாற்றியவர் கல்யாணந்த கொடஹே. அண்மையில் வெளிநாட்டில் உள்ள தூதர்களை அழைத்து இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் ஆலோசனை நடத்தியிருக்கிறார். அப்போது கொடஹே, மலேசியாவில் உள்ள தமிழ் குழுக்கள் தற்போது இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக இல்லை. ஆனால் தமிழர் பிரச்சனையில் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று அவர்கள் கேட்கிறார்கள். இதற்கு என்ன பதில் சொல்வது? என்று கேட்டிருக்கிறார்.
இந்தக் கேள்வியால் கடுப்படைந்துவிட்டார் ஜி.எல். பீரிஸ். உடனே இதுபற்றி மகிந்த ராபஜக்சவிடம் போட்டுக் கொடுத்து தற்போது மலேசிய தூதர் பதவியையும் பறித்து நாடு திரும்புமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமது பதவி பறிக்கப்பட்டது பற்றி கொடஹே கூறியுள்ளதாவது:
ஜெயவர்த்தனாவின் அனைத்துக் கட்சிக் கூட்டம், திம்பு பேச்சுவார்த்தை, பிரேமதாச- விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தை, சந்திரிகா மற்றும் ரணில் விக்கிரமசிங்கவின் அமைதி முயற்சிகள் ஆகியவற்றை தொடர்ந்து, தற்போதைய அரசாங்கம் அனைத்துக் கட்சிக் குழு மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஆகியவற்றை காண்பித்தது. நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் அடுத்தது என்ன என்று தமிழ் மக்கள் கேட்கிறார்கள். அதற்கு என்ன பதில் கூறுவது என்று அமைச்சரைக் கேட்டேன். இதற்கு அமைச்சர் சத்தம் போட்டதுடன் அதற்கான பதில் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் சீறினார். நானும் பதிலுக்கு மக்களுக்கு நம்பகத்தன்மையில்லாத பதிலைக் கூறமுடியாது என்றும், நம்பகத்தன்மையுடனான பதிலைத்தான் தான் கூறமுடியும் என்றும் கூறினே. இதனால்தான் அவர் தம்மை திரும்ப அழைத்துவிட்டார் என்றார் கொடஹே.
No comments:
Post a Comment