Translate

Friday 10 August 2012

பௌத்தர்களிடமும் மகா சங்கத்திடமும் மன்னிப்புக் கோரிய ஹக்கீம்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சில நாள்களுக்கு முன்னர் கிழக்கு மாகாணசபைத் தேர்தல் பிரசாரத்தின் போது வெளியிட்ட சர்ச்சைக்கு உரிய கருத்துத் தொடர்பாக மகா சங்கத்திடமும் ஜாதிக ஹெல உறுமயவிடமும் மன்னிப்புக் கோரியுள்ளார். இது தொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையின் முழு விவரம் வருமாறு:

கல்முனை சாய்ந்தமருதுவில் அண்மையில் நான் கூறிய கருத்து, பௌத்த தலைவர்கள் மற்றும் ஜாதிக ஹெல உறுமய உட்பட பௌத்த குருமார் இடையே மிகவும் கடுமையான விசனத்தை தோற்றுவித்துள்ளது.
இழுத்தடிக்கும் முயற்சிகளில் ஈடுபடாமல், நான் இலங்கையில் உள்ள சகல பௌத்த மக்களிடமும் தயக்கம் ஏதும் இன்றி மன்னிப்புக் கேட்கின்றேன். நான் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் இதற்கு முழுப்பொறுப்பையும் ஏற்றுக்கொள்கின்றேன். எனவே இந்த மன்னிப்பை ஏற்றுக்கொள்ளும்படி இலங்கை மகாசங்கத்திடம் விசேடமாகக் கேட்டுக்கொள்கின்றேன்.
முஸ்லிம்களின் மனத்தாங்கல்கள் பற்றி நான் குறிப் பிட்டது குறித்த ஒரு இடத்தில் காணப்பட்ட உள்ளூர் விவகாரத்தோடு மட்டுப்படுத்திய பிரச்சினை பற்றியதாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாகக் குறித்த பின்னணியிலிருந்து விலகிய எனது சொற்பிரயோகம், எமது மக்களின் பிரதான சமயமான பௌத்தத்தின் பாதுகாவலர்களான மகாசங்கத்தினர் பற்றி தரக்குறைவான கருத்துரைத்தது போன்று அமைந்துவிட்டது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் என்ற வகையில் நான் எப்போதும் முஸ்லிம்கள் இலங்கை தேசத்தின் ஒன்றிணைந்த பகுதியினர் என்பதை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சிங்கள அரசர்கள் காலத்திலிருந்து சிங்கள மக்களின் அரவணைப்பையும் தாராள மனப்பான்மையையும் அனுபவித்துள்ளோம்.
போர்த்துக்கேய ஆக்கிரமிப்பாளர்களால் துன்புறுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு ஆதரவு வழங்கிய செனரத் அரசனின் காலத்திலிருந்து சிங்கள பௌத்தர்கள் கடைப்பிடித்துவரும் பன்மைவாதக் கொள்கையைப் பற்றி சில மாதங்களின் முன் சர்வதேச தாராண்மை கவுன்ஸிலில் பேசியபோது நான் எடுத்துரைத்தேன்.
பௌத்தர்களுடனும் ஏனைய சமயத்தவர்களுடனும் பூரண ஒற்றுமையுடன் வாழ வேண்டும் என்னும் முஸ்லிம்களின் விருப்பம் பற்றி நான் நன்கு அறிவேன். இதுவே ஸ்ரீலங்கா தேசத்தில் முஸ்லிம்கள் முழுமையாக இணைந்துகொள்ளவுள்ள ஒரே பாதையாகும் என்றுள்ளது.

No comments:

Post a Comment