Translate

Tuesday 14 August 2012

பசில் தலைமையிலான மூவரணியுடனான சந்திப்பை திடீரென இடைநிறுத்தியது புதுடெல்லி


சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தலைமையிலான மூவரணியுடன் எதிர்வரும் 24ம் நாள் நடத்தவிருந்த சந்திப்பை இந்திய அரசாங்கம் திடீரென- காரணம் ஏதுமின்றி இடைநிறுத்தியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
ஜெனிவா தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு அளித்த பின்னர் சிறிலங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகளில் நெருக்கம் குறைந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் ஜெனிவாவில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர், சிறிலங்கா அதிபரோ அல்லது அமைச்சர்களோ இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ளவில்லை.

இந்தநிலையில் இந்தியாவுடனான சிக்கலைத் தீர்ப்பதற்கு, இரண்டு மாதங்களுக்கு முன்னர் சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, புதுடெல்லி செல்வதற்கு அனுமதி கோரியிருந்தார்.
இந்தப் பயணத்தின் போது வடக்கு,கிழக்கு அரசியல் விவகாரம், சிறிலங்கா அரசின் தீர்வு போன்ற விடயங்கள் குறித்து இந்தியாவின் உயர்மட்டத்துடன் கலந்துரையாட அவர் திட்டமிட்டிருந்தார்.
வரும் நவம்பர் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் நடைபெறவுள்ள சிறிலங்கா தொடர்பான பூகோள மீளாய்வுக்குப் பொறுப்பாக உள்ள மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்று என்பதால், அதற்கு முன்னர், இந்தியாவுடனான உறவுகளை புதுப்பித்துக் கொள்ள சிறிலங்கா முயற்சிகளை மேற்கொண்டது.
ஆனால் இந்த வேண்டுகோளுக்கு புதுடெல்லி உடனடியாகப் பதிலளிக்கவில்லை. சட்டமன்ற தேர்தல் பரப்புரைகளைக் காரணம் காட்டி, சந்திப்பதற்கு நேரம் ஒதுக்க முடியாது என்று பசில் ராஜபக்சவுக்கு மிகவும் தாமதமாகவே, இந்தியா பதில் அனுப்பியது. இது சிறிலங்கா அரசுக்கு அதிர்ச்சியாக அமைந்தது.
இந்தநிலையில், கடந்தவாரம் இந்திய அரசாங்கம் தமது திடீரென மௌனத்தைக் கலைத்து விட்டு பசில் ராஜபக்சவை சந்திப்பதற்கு ஓகஸ்ட் 24ம் நாள் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் அனுப்பியது.
இதையடுத்து பசில் ராஜபக்ச தலைமையில், சிறிலங்காவின் பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச, சிறிலங்கா அதிபரின் செயலர் லலித் வீரதுங்க ஆகியோர் புதுடெல்லி செல்வதற்குத் திட்டமிடப்பட்டது.
வடக்கு, கிழக்கு பிரச்சினைக்கான தீர்வு, போர் பாதித்த பகுதிகளில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்களை உள்ளடக்கிய அறிக்கை ஒன்று இந்தியாவிடம் கையளிப்பதற்காக தயாரிக்கப்பட்டது.
ஆனால், முன்னைய கலந்துரையாடல்களில் வடக்கு, கிழக்கு பிரச்சினை, அரசியல் தீர்வு, சம்பூர் அனல் மின்திட்டம், மீனவர்கள் பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்திய இந்தியா இம்முறை சீனா பற்றிய விவகாரத்தையே முன்ன்லைப்படுத்துமாறு கூறியது.
சீனப் பாதுகாப்பு அமைச்சர் சிறிலங்காவுக்கு மேற்கொள்ளவுள்ள பயணம் குறித்தும், கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளில் சீனாவின் உதவியுடன் அமைக்கப்படும் இராணுவ வீடமைப்புத் தொகுதிகள் குறித்தும் கலந்துரையாட வேண்டும் என்றும் இந்தியா வலியுறுத்தியது. அத்துடன் வடக்கு,கிழக்கு பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்தும் வடமாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கான காலவரம்பை நிர்ணயிப்பது குறித்தும் இந்தியா பேசவிரும்புவதாக தகவல் அனுப்பியது.
இருந்தபோதிலும், கடந்தவாரம் பசில் ராஜபக்ச குழுவினருடனான சந்திப்புகளை திடீரென இந்தியா நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதற்கு எந்தக் காரணமும் கூறப்படவில்லை என்றும் கொழும்பு ஆங்கில ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

No comments:

Post a Comment