டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் - ஈழம் என்ற சொல்லும் வரும் - கருணாநிதி அதிரடி அறிவிப்பு! |
டெசோ மாநாட்டுக்கு அனுமதி வழங்க சென்னை பெருநகர காவல்துறை மறுத்து விட்டது. இதற்கான உத்தரவை நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகனிடம் பொலிஸார் வழங்கினர். எனினும் திட்டமிட்டபடி மாநாடு நாளை (12) நடைபெறும் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.
|
முன்னதாக தமிழக டி.ஜி.பி. கே.ராமானுஜத்துடன் ஆணையர் திரிபாதி, கூடுதல் ஆணையர் பி.தாமரைக்கண்ணன் ஆகியோர் இரவு ஆலோசனை நடத்தினர். இதைத் தொடர்ந்து அனுமதி மறுப்பு உத்தரவு அளிக்கப்பட்டது.
திட்டமிட்டபடி மாநாடு நடைபெறும்: கருணாநிதி
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
ஈழம் என்ற வார்த்தையை மாநாட்டின் தலைப்பில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியிருக்கிறது.
தமிழக அரசும் டெசோ மாநாட்டை சென்னையில் நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. இதற்கிடையில் மாநாட்டுப் பந்தல் போடும் பணிகளை வெள்ளிக்கிழமை மாலை பார்வையிட்ட கருணாநிதி, நிர்வாகிகளுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடைபெறும். அமைதியான முறையில் மாநாடு நடக்க உதவிபுரிய காவல் துறைக்கும் பொறுப்பு இருக்கிறது. அந்தப் பொறுப்பை அவர்கள் தட்டிக் கழிக்க மாட்டார்கள் என்று கருதுகிறேன். யாருடைய உத்தரவுக்காகவோ, கட்டளைக்காகவோ தேவையில்லாமல் ஓர் அவப் பெயரை அவர்கள் தேடிக் கொள்ளமாட்டார்கள் என்று நம்புகிறேன் என்றார் கருணாநிதி.
காவல்துறை அனுமதி மறுத்துவிட்டால் - என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு, தடைக் கற்கள் உண்டெனினும், தடந்தோள்கள் உண்டு என்று பாரதிதாசன் பாடியிருக்கிறார் என்றார் கருணாநிதி. காங்கிரஸ் தலைவர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கப் போவதில்லை என்று கூறியுள்ளதைப் பற்றி நான் ஒன்றும் கருதவில்லை. அப்படி அவர்கள் சொல்வார்கள் என்றுதான் எதிர்பார்த்தோம் என்றும் கருணாநிதி கூறினார்.
ஈழம்' வார்த்தையைப் பயன்படுத்த திமுக முடிவு :
"ஈழம்' வார்த்தைக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்தாலும் டெசோ மாநாட்டில் அந்த வார்த்தையைப் பயன்படுத்த திமுக முடிவு செய்துள்ளது. டெசோ மாநாட்டில் தமிழீழத் தீர்மானத்தைக் கைவிட வேண்டும் என்று முதலில் மத்திய அரசு அறிவித்தது. இதனையேற்று தீர்மானத்தைக் கைவிடுவதாக கருணாநிதி அறிவித்தார்.
ஈழத் தமிழர் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாடு என அறிவிக்கப்பட்டுள்ள டெசோ மாநாட்டில், ஈழம் என்ற வார்த்தையைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. "ஈழம்' என்ற வார்த்தை தொடர்பாக செய்தியாளர்களிடம் தி.மு.க. தலைவர் கருணாநிதி வெள்ளிக்கிழமை கூறியது:
ஈழம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாது என்று உள்துறை அமைச்சர், பிரதமரிடம் இருந்து கடிதம் வரவில்லை. ஈழம் என்ற வார்த்தை தமிழ் இலக்கியங்களிலேயே ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இடம்பெற்றிருக்கிறது. பட்டினப்பாலை என்ற இலக்கிய நூலில் பூம்புகார் கடற்கரையில் வந்து நின்ற படகுகளில் இறக்குமதி, ஏற்றுமதிக்காக வந்த பொருள்கள் என்ன என்பதைக் குறிக்க ஈழத்து உணவும் காழகத் தாக்கமும் என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.
எனவே ஈழம் என்பது இல்லாத சொல் அல்ல, கற்பனை சொல்லும் அல்ல. வரலாற்றிலேயே இடம்பெற்ற சொல் என்றார் கருணாநிதி.
|
மே 18 ஈழத் தமிழர்கள் வாழ்வில் மட்டுமன்றி உலகத் தமிழர்கள் அனைவராலும் மறக்கமுடியாத அளவிற்கு இரத்தம் தோய்ந்த நாளாக பதிவாகியுள்ளது.
Translate
Friday, 10 August 2012
டெசோ மாநாடு திட்டமிட்டபடி நடக்கும் - ஈழம் என்ற சொல்லும் வரும் - கருணாநிதி அதிரடி அறிவிப்பு!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment