Translate

Friday 10 August 2012

இரண்டு லட்சம் பேர், இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளனர்


இரண்டு லட்சம் பேர், இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளனர்


இலங்கையில் நடந்த போரால், தமிழகத்துக்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்கள் இரண்டு லட்சம் பேர், இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளனர். தற்போது, ஒரு லட்சம் இலங்கை அகதிகள், தமிழகத்தில் உள்ளனர்.
இலங்கையில், 1983ல் இருந்து நடந்து வந்த போரால், இலங்கைத் தமிழர்கள், தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள, தமிழகத்துக்கு அகதிகளாக வரத் துவங்கினர். இவர்கள், தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்ட முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.

இவர்களுக்கு, ரேஷன் கார்டு, இலவச அரிசி, இலவச கல்வி, மாதந்தோறும் உதவித் தொகையையும், தமிழக அரசு வழங்குகிறது. திரும்பும் அகதிகள்: தமிழக மக்களுக்கு அரசு வழங்கும், திருமண உதவித் திட்டம், ஓய்வூதியம், மருத்துவ வசதி என, அனைத்துத் திட்டங்களும், இலங்கை அகதிகளுக்கும் வழங்கப்படுகின்றன.
இந்த நிலையில், போர் முடிந்து அமைதி திரும்பிய பகுதிகளுக்கு, இலங்கைத் தமிழ் அகதிகள் சென்று கொண்டிருக்கின்றனர் அவரவரின் விருப்பப்படி, திரும்ப அனுப்பி வைக்கப்படுகின்றனர். நாடு திரும்ப, பயணக் கட்டண வசதியும் செய்து தரப்படுகிறது.
இது தவிர, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தூதரகம் மூலமும், சொந்த நாட்டுக்குச் செல்கின்றனர். தூதரகத்தின் மூலம் நாடு திரும்பும் அகதிகளுக்கு, சொந்த ஊரில் வாழ்க்கையைத் துவங்க அனைத்து வசதிகளையும், ஐக்கிய நாடுகள் சபை ஏற்படுத்தித் தருகிறது.
இவ்வாறு செல்லும் அகதிகள், மீண்டும் பிற நாடுகளில் அகதிகளாக ஏற்றுக் கொள்ளப்பட மாட்டார்கள். மொத்தத்தில், இதுவரை இரண்டு லட்சம் அகதிகள், இலங்கைக்குத் திரும்பி விட்டனர். ஐக்கிய நாடுகள் சபை மூலம், 2002 முதல், கடந்த ஜூன் மாதம் வரை, 10 ஆயிரத்து, 700 பேரும்; தமிழக அரசின் மூலம், 99 ஆயிரத்து, 400 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
மேலும் ஒரு லட்சம் பேர், சொந்த செலவில் சென்றுள்ளனர் என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இவ்வாறு செல்பவர்களில் சிலர், மீண்டும் தமிழகத்துக்கு வருவதும் நடக்கிறது. ஆனால், அகதிகளாக இலங்கைத் தமிழர்கள் வருவது, தற்போது முற்றிலுமாக நின்றுள்ளது என, அகதிகள் மறுவாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
1 லட்சம் பேர்: தமிழகத்தில் தற்போது, 110 அகதிகள் முகாம்களில், 67 ஆயிரத்து, 700 பேரும்; இரண்டு சிறப்பு முகாம்களில், 37 பேரும் உள்ளனர். முகாமில் இல்லாமல், போலீசில் பெயர்களைப் பதிவு செய்து, 34 ஆயிரத்து, 400 பேர் உள்ளனர். இவர்கள், பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
முகாம்களில் உள்ள தமிழ் அகதிகளுக்கு மட்டுமே, தமிழக அரசின் திட்டங்கள் வழங்கப்படுகின்றன; மற்றவர்களுக்கு அளிக்கப்படுவதில்லை. இவர்கள், வேலைக்குச் சென்று ஈட்டும் ஊதியத்தில் வாழ்ந்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்கள் 21 ஆயிரம் பேர்: இலங்கைத் தமிழ் அகதிகளின் குழந்தைகள், 21,618 பேர், பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயின்று வருகின்றனர். இதில், 1,200 பேர் கல்லூரிகளிலும், 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பள்ளிகளிலும், பயின்று வருகின்றனர்.
பொறியியல் பட்டப் படிப்புக்கு, பொது இட ஒதுக்கீட்டில், தமிழ் அகதிகள் பிள்ளைகளுக்கு இடம் அளிக்கப்படுகிறது. “மிகக் குறைந்த இடங்களே அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருப்பதால், இவர்களுக்கு அங்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை; தனியார் மருத்துவக் கல்லூகளில் சேர இவர்களுக்கு தடையில்லை’ என, அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

No comments:

Post a Comment