பெரும்பான்மை இனத்தவர்களால் வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு ஹெரவப்பொத்தானை வரை கொண்டு செல்லப்பட்டுள்ளார். இவ்வாறான கடத்தல்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறு வல்வெட்டித்துறை நகர சபைத் தலைவர் அ.அனந்தராஜ் தெரிவித்தார்.
வல்வெட்டித்துறை ஆதிகோயிலடிப் பகுதியைச் சேர்ந்த ஜெயராஜா ஜனார்த்தன் என்ற இளைஞன் கடந்த 4 தினங்களுக்கு முன்னர் கடத்தப்பட்டுள்ளார்.இவர் வேலை செய்யும் காப்புறுதி நிறுவனத்தை விட்டு பணத்துடன் வெளியே வந்தபோது வான் ஒன்றில் வந்தவர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். வானில் வைத்து அவருக்கு குடிப்பதற்கு ஒருவகைப் பானத்தை அந்த நபர்கள் வழங்கியுள்ளனர். அதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்று தெரியாது.
பின்னர் ஹெரவப்பொத்தானையில் ஒரு வீட்டில் வைத்து அவரை மிகக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். கடத்தியவர்கள் சிங்கள மொழியிலேயே சரளமாகப் பேசியுள்ளனர். பின்னர் அவர்களின் பிடியில் இருந்து தப்பித்த மேற்படி இளைஞர் அங்குள்ள கடையொன்றிலிருந்து வீட்டாருடன் தொடர்பு கொண்டதையடுத்து மீட்கப்பட்டுள்ளார். தற்போது வல்வெட்டித்துறை வைத்தியசாலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்தக் கடத்தல் தமிழ் ஆயுதக் குழுக்கள் மேற்கொள்ளவில்லை. ஆனையிறவு, ஓமந்தை ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ள இராணுவச் சோதனைச் சாவடிகளைத் தாண்டி எவ்வாறு இந்த இளைஞனை அவர்கள் கொண்டு சென்றனர். இவ்வாறான சம்பவங்கள் மக்கள் மத்தியில் மீண்டும் அச்சத்தையே ஏற்படுத்துகிறது என்று அனந்தராஜ் தெரிவித்தார்.
No comments:
Post a Comment