Translate

Saturday, 15 September 2012

மக்களின் ஆணை தெளிவாக இருக்கும் போது மு.கா.தலைமை தொடர்ந்தும் தடுமாறுவது ஏன்?எம்-பௌசர்


மக்களின் ஆணை தெளிவாக இருக்கும் போது மு.கா.தலைமை தொடர்ந்தும் தடுமாறுவது ஏன்?எம்-பௌசர்
 கிழக்கு மாகாண சபைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்து ஆறு தினங்கள் கடந்து விட்ட போதிலும், முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தெளிவான முடிவு எடுப்பதில் காலதாமதம் எடுப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் எதிர்வு கூறப்பட்டு வருகின்றன. என்னைப்பொறுத்தவரை மிகவும் சிக்கலானதும்,வரலாற்று முக்கியத்துவமுமான இந்த அரசியல் முடிவினை எடுப்பதற்கு முஸ்லீம் காங்கிரஸ் தலைமை எந்த அவசரமும் இல்லாது ,காலமெடுத்து முடிவுக்கு வருவதில் தவறில்லை.

ஆனால் எடுக்கப்படுகின்ற முடிவு காலதாமதமாக எடுக்கப்பட்டாலும்,முஸ்லீம் மக்கள் முஸ்லீம் காங்கிரசின் உருவாக்கத்தின்பின் கடந்த இருபத்தைந்து வருடங்களாக நடைபெற்ற எல்லாத் தேர்தல்களிலும் அக்கட்சிக்கு தொடர்ச்சியாக வழங்கி வருகின்ற மக்கள் ஆணைக்கு விசுவாசமாகவும், கடந்த மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை கிழக்கு முஸ்லிம்கள் மத்தியில் செய்த தேர்தல் கால பரப்புரைகளுக்கு முழுப்பொறுப்பினையும் ஏற்கும் வகையில் அதன் முடிவு இருப்பது மட்டுமே அவசியமானதும் முக்கியத்துவமானதுமாகும். இதனையே முஸ்லிம் காங்கிரசுக்கு வாக்களித்த மக்களும் எதிர்பார்த்து நிற்கின்றனர் என நான் நம்புகிறேன்.
ஒரு அரசியல் தலைமை வெளிப்படையாக தனது அரசியல் முடிவினை அறிவிப்பதற்கு முன், அத்தலைமையை விமர்சிப்பது இப்பத்தியாளனின் நோக்கமன்று.மு.கா தலைமையின் நிலைப்பாடு ஊத்தியோகபூர்வமாக வெளிவந்தபின் அது பற்றிய கருத்துக்களை முன்வைப்பதே பொருத்தமானதாகும். 
இப்பத்தியினை இப்போது எழுதுவதன் நோக்கமே, இன்றைய இலங்கை அரசியலில் சிறுபான்மை முஸ்லிம் மக்களின் நிலை தொடர்பாகவும், கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் முஸ்லிம் மக்களுக்குள் அது பிரதிபலித்ததன் வெளிப்பாட்டு நிருபணமும், மு.கா வின் தடுமாற்றமும்,தேர்தலின் பின் பதவிகளை முன் வைத்து கட்சி தலமைக்குள்ளும், முஸ்லிம் மக்களுக்குள்ளும் நடந்து வருகின்ற முன்வைப்புகள்,உரையாடல்கள், எழுத்துக்கள்,செய்திகள் ஆகியவை தொடர்பான பிரதிபலிப்புகளை இட்டு எனது அவதானங்களையும் கருத்துக்களையும் பொதுவெளியில் பதிவதும் இது தொடர்பாக அக்கறையுள்ள மக்கள் தரப்பினர்களுடன் கருத்துக்களை சுருக்கமாக பகிர்ந்து கொள்வதுமேயாகும்.
முஸ்லிம் காங்கிரஸ் தலைமை இதுவரை தான் முஸ்லிம் மக்கள் சார்பில் என்ன அரசியல் கோரிக்கைகளை முன்வைத்து பேரம்பேசலில் ஈடுபட்டு வருகிறது என்பதனை அறிவிக்கவில்லை. அரசுடன் பலகட்ட பேச்சுவார்த்தைகள் ஜனாதிபதி மாளிகை தொடக்கம் நட்சத்திர விடுதிகள் வரை நடந்து விட்டன.நடந்தும் வருகின்றன.தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் சம்பிராதயமாகக் கூட, பேச்சுவார்த்தையை மு.கா தொடங்கவில்லை. தமிழ் தேசியக் கூட்டமைப்போ மு,காவை மன்றாட்டமாக அழைத்துக் கொண்டிருக்கிறது. மு.கா அரசாங்கத்துடன் மெனக்கெடுவதில் இருந்து, அரசுடன் சேர்ந்து ஆட்சிஅமைப்பதில் அதற்குள்ள ஆர்வமும் விருப்பும் முதல்தேர்வும் வெளிப் படுகிறது என சொல்வதில் உண்மை இருக்கிறது . 
என்ன காரணத்திற்காக முஸ்லிம் காங்கிரசுக்கு கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் மக்கள் வாக்களிக்க வேண்டுமென மு.கா தலைமை முஸ்லிம் மக்களுக்குள் கோரிவந்ததோ, அவைகளை மறந்து விட்டு மிகப் பரம ரகசியமாக அரசாங்கத்துடன் பேசி வருவது தொடர்கிறது. 
மர்மங்களும் திகைப்பூட்டும் திருப்பங்களும் மிக்க இப்பேச்சுவார்த்தை அணுகுமுறையானது, கட்சிக்கு வாக்களித்த மக்களையும் கட்சியின் கிராம தலைமைகளையும் , அதன் தீவீரமான ஆதரவுத் தளத்தையும் ,கட்சி தலைமைக்கு நெருக்கமான ஒரிரு அரசியல்பீட உறுப்பினர்களையும் தவிர,ஏனைய அனைவரையும் இருட்டுக்குள் வைத்துள்ளது. இதன் காரணமாகவே,மு,காவின் தீவிர ஆதாரவுத்தளமே , என்ன முடிவு எடுக்கப்படும் என தெரியாது பல்வேறு யூக முடிவுகளை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளி விட்டுள்ளது.
இன்றைய இலங்கை அரசாங்கத்தின் நிலை, இலங்கை முஸ்லிம் மக்களது இனத்துவம், அரசியல் மத கலாசார பண்பாட்டு,பொருளாதர , இருப்பிற்கும் நலனுக்கும் அச்சுறுத்தலானது என்பது மிக வெளிப்படையானது. அத்துடன் இன்றைய அரசாங்கமானது எந்த சிறுபான்மை அரசியல் தலைமைகளுடன் ,நான் மேற்காட்டிய விடயங்களை முன்வைத்து திறைமறைவு போச்சுவார்த்தை களின் மூலமான பேரம் பேசல் உடன்பாடுகளுக்கும் மசிந்து கொடுக்க கூடிய அரசாங்கமன்று. 
சிறுபான்மை மக்களின் உரிமைகளை இந்த அரசாங்கத்துடன்,இப்படியான திரைமறைவு போச்சுவார்த்தை வழிமுறை ஊடாக பெற்றுக்கொள்ளமுடியுமென்றால் அது இமாலய அரசியல் மாற்றத்துடன் கூடிய வெற்றியாகவே கணிக்கப்படும். இப்படியான அதிசயங்கள் அரச தலைமை மற்றும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமைக்கு இடையில் நடந்து வருகின்ற பேச்சுவார்த்தையில் நிகழ வாய்ப்புக் குறைவு என்பதே எனது கணிப்பாகும்.
முஸ்லிம் மக்களின் அரசியல் உரிமைகளை காயடித்து பின்தள்ளி, இவற்றிற்குப் பதிலியாக முதலமைச்சர் பதவி,மாகாண அமைச்சுப் பதவிகளுடன்,மத்திய அரசில் முழு அமைச்சு,மேலும் பிரதி அமைச்சுப்பதவி, அரசாங்க நிறுவனங்களில் சில பதவிகள், மற்றும் சில வசதிகளை , மாகாண சபைத் தேர்தலில் முஸ்லிம்கள் அள்ளிப் போட்ட வாக்குகளின் பின் எழுந்துள்ள நிலைமையின் காரணமாக மு .காவிற்கு வழங்க,அரசு தலைமை முன் வரலாம். இதுவும் மலடி பிள்ளைப் பெறும் கஷ்டத்திற்கு ஒப்பானதே.
இந்த மாகாண சபைத்தேர்தலின் பின் ஏற்பட்டுள்ள நிலையை அரசியல் ரீதியாக விளங்க முற்படுவது அவசியமானது. அளவிற்கு அதிகமான மதிப்பிடுகளுடன் (OVER ESTIMATION ) காரியமாற்றுவதோ , செய்ய வலிமையுள்ள விடயங்களை செய்ய தவறுவதோ நடந்து விடக் கூடாது. அரசாங்கத்திற்கும், தமிழ் தேசிய கூட்டமைபிற்கும் ஆட்சி அமைப்பதில் உள்ள அவசரத் தேவை, முஸ்லிம் காங்கிரசுக்கு இல்லை. முஸ்லிம் காங்கிரஸ் இந்த தேர்தலில் இரு தரப்பினருக்கும் *பயன்பாட்டு தேவைக்கு வேண்டிய *அரசியல் பிரதிநிதித்துவத்தினை கைவசம் வைத்துள்ள ஒரு அரசியல் இயக்கம். கிழக்கு மாகாணத்தில் ஒரு கூட்டு மாகாண அரசமைக்க மு.கா வின் அரசியல் பலம் பக்கபலமாக தேவையாக இருக்கிறது .
அதிகாரமும் ஆளும் தலைமையும் முஸ்லீம் காங்கிரஸ் வசம் தனித்து வரப்போவதில்லை. மு.கா தலைமை இத்தேர்தல் மூலம் அடையக்கூடிய அரசியல் இலக்கு இலங்கை முஸ்லிம்களின் அரசியல் சமூக மற்றும் அனைத்து உரிமை, பாதுகாப்பினை உத்தரவாதப்படுத்தக் கூடிய தெளிவான நிகழ்சி நிரலை ,திட்டத்தினை (ROAD MAP) வகுப்பதே ஆகும். இந்த யதார்த்தத்தினை விளங்கிக் கொள்ளுமாறு,மு.கா தலமையையையும் அதன் ஆதரவுத் தளத்தினையும் நேச சக்தியாக நின்று வேண்டுகிறேன்.
*அரசாங்கத்துடன்...
..............................................
உண்மையில் கிழக்கு மாகாணத்தில் மு.கா ஆதரவுடன் யார் ஆட்சி அமைத்தாலும் அதுவொரு கூட்டு மாகாண அரசுதான். இன்று அரசாங்கத்தில் இணைந்து நிற்கின்ற சிறுபான்மை கட்சிகளை அழைக்கும் பங்காளி கட்சிகள் என்கிற அர்த்தத்தில் நான் சொல்ல வில்லை. இச்சொல்லாடல் பொது முன்னணி அரசாங்கத்தைப் பொறுத்தவரைஅரசியல் நீக்கம் செய்யப்பட்ட சொல்லாடலாகும்.
மாகாணத்தை நிர்வகிப்பதிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் அமுல்படுத்துவதிலும் மு.காவிற்கு முக்கிய பாத்திரத்தினை அரசு ஒரு போதுமே தராது. மு.காவிற்கு முதலமைச்சர் பதவி,மாகாண அமைச்சுப் பதவிகள் வழங்கப்பட்டாலும் கூட, அவை வெறும் பெயரலவிளான பதவிகளாகவே இருக்கும். அவர்கள் பதவிகளில் இருப்பார்கள், ஆனால் அந்தப் பதவிகளுக்குரிய அதிகாரம் அவர்களிடம் இருக்காது. மத்தியில் இருக்கும் அமைச்சர்களின் நிலையும் இதுவாக இருக்கும் போது, இந்த உண்மையை சதா சுமந்து கொண்டு,ஏன் இவர்கள் தொடர்ந்தும் இந்த அமைச்சுப் பதவிகளுக்கு மாரடிக்கிறார்கள் என்கிற கேள்வி எழுவது நியாயமானது. இதில் உள்ள ஒரே நன்மை தனிப்பட்ட வகையில் இவர்கள் சில சொகுசுகளையும் நலன்களையும் அந்தஸ்தினையும் அனுபவிக்க முடியும் என்பதே.

முஸ்லிம்களுக்குள் அமைச்சர்களாக உள்ள, மு.கா தலைவர் மற்றும் மு,கா பிரதி அமைச்சர் நீங்கலாக ,மற்றவர்கள் பௌதீக அபிவிருத்தி,மற்றும் தொழில் வாய்ப்பு விடயங்களில் முடியுமானதை மக்களுக்கு செய்துதான் வருகிறார்கள். அவர்கள் தங்களையோ,அல்லது தமது கட்சியையோ முஸ்லிம் மக்களின் உரிமையை பெற்றுத்தர உறுதி கொண்ட அரசியல் வழிமுறையில் ,போராட்ட உணர்வுள்ளவர்களாக வெளிப்படுத்துவதில்லை. ஆனால் மு.காவின் தாரக மந்திரம்,அரசியல் மூலதனம், முஸ்லிம்களின் உரிமைப் போராட்டத்தினை முன்னெடுப்பதே யாகும். மு.காவின் வாக்கு ஆதரவுத்தள மக்களின் உணர்வும் எதிர்பார்ப்பும் முஸ்லிம் இனத்துவ அரசியல் உரிமை சார்ந்ததே.

கிழக்கு முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் அரசியல் உரிமை சார்ந்த எந்த விடயத்தினையும் உறுதிப்படுத்திக்கொள்ள அரசுடன் முடியாத நிலையில், ஆட்சி அமைப்பதற்கான அரசியல் பிரதிநிதித்துவத்தினை ஒரு சில பதவிகளுக்காக மட்டுமே வழங்கி அரசுக்கு ஆதரவு வழங்க மு.கா,முன்வருமானால் இந்த முடிவு அதன் சுய அரசியல் தற்கொலைக்கு வழி அமைப்பதுடன்,முஸ்லிம்களின் உரிமை,இனத்துவப் பாதுகாப்புத் தொடர்பான காப்பீடுகளுக்கு முஸ்லிம்கள் , எதிர்காலத்தில் தமக்குள் புதிய அரசியல் சக்திகளை இனம் காண வேண்டிய நிலைக்கும் ,அவற்றிற்கான தோற்றத்திற்கும் வழி வகுக்கும். இது அரசியலில் தவிர்க்க முடியாத இயங்கு விதியாகும். (இது பற்றி வேறு ஒரு கட்டுரையில் பார்ப்போம்)
மு.கா தலைமைக்கு இந்த உண்மை கடந்த காலத்தினை விட இப்போது நன்றாக தெரிகிறது. உண்மையில் இத்தேர்தல் அபத்த நாடகத்தில் கட்சி வசமாக மாட்டுப்பட்டு விட்டது,இவ்வளவு காலமாக பெயரளவில், உணர்ச்சிப் பேச்சு மேடைஅரசியல் செய்தும், வீரவசனங்கள் கொண்ட அறிக்கைகளை விட்டு வந்த கட்சி,தம்மை செயலளவில் நிருபிக்க வேண்டிய கட்டத்திற்கு இப்போது வந்துள்ளது. நமது சக தேசிய இனமான தமிழ் மக்களுக்குள் மிகப்பெரும் செல்வாக்காக இருந்த பாராளுமன்றத்தினை நம்பிய தமிழ் கட்சிகள், வரலாற்று ஓட்டத்தில் தம்மை மெய்ப்பிக்க முடியாது கைதேசமடைந்த வரலாறு காலம் பிந்தி முஸ்லிம்களுக்குள் இடம்பெறத் தொடங்கி,தமது தலைமைக்கும் அது நடந்து விடுமோ என்கிற அச்சம் இப்போது ஏற்பட்டுள்ளது . இதனால்தான் மு.கா தலைமை தனது அரசாங்கத்திற்கு ஆதரவு அளிக்கும் நிலைப்பாட்டை வெளிப்படுத்த தயங்குகிறது. கிணறு வெட்ட பூதம் கிளம்பி விட்டுள்ளது என்பதே நிலைமையை விளக்குவதற்கான மொழித் தொடராகும்.
*தமிழ் தேசியக் கூட்டமைப்புடன்....
-----------------------------------------------
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மு.கா தலைமை கூட்டு அரசாங்கம் அமைப்பது நான் மேலே சொன்ன,மாகாணத்தை நிர்வகிப்பதிலும் தீர்மானங்களை எடுப்பதிலும் அமுல்படுத்துவதிலும் மு.காவிற்கு முக்கிய பாத்திரத்தினை உச்ச அளவில் உறுதி செய்யும். முஸ்லிம்களின் கிழக்கு அரசியல் பலமும் தனித்துவமும் உறுதிப்படுத்தப்படுவதுடன், சர்வதேசிய அளவில் முஸ்லிம்களின் தவிர்க்கமுடியா பங்ககளிப்பு அதிக கவனத்திகு வரும்.இதில் ஒரு கூட்டு அரசுக்குரிய அனைத்து மதிப்பும் ஈடுபாடும் இருக்கும். 

ஆனால் கூட்டரசாங்கமானது முரண்பாடுகளை களையாத, அதே நேரம் அவற்றினை தீர்ப்பதற்கான எந்த வேலைத் திட்டமும் அற்ற ,சந்தர்ப்பவாத கூட்டாகவே இருக்கும். தமிழர்களும் முஸ்லிம்களும் இலங்கை மைய அரசால் நீண்ட காலமாய் ஒடுக்கப்படுகின்ற இரு தனித் தேசிய இனங்களாக இருந்தாலும், தனித்த பிரச்சினைகளும், தமிழ் முஸலிம் மக்களுக்கும் இடையே இன ரீதியான பகை முரண்பாடும்,கடந்த கால கசப்பான அனுபவங்களும்,வளங்களை பகிர்ந்து கொள்வதில் போட்டா போட்டியும் உள்ளன. முதலில் இவை தொடர்பாகவும், இரு தேசிய இனங்களும் அரசியல்,மற்றும் இனத்துவ ரீதியாக சேர்ந்து வேலை செய்வதில் உடன்பாடு காணப்படல் வேண்டும்.ஆட்சி அமைத்து விட்டு இவற்றை செய்வோம் என்று சொல்வது, முரண்பாடுகளை மேலும் வளர்க்கவே வழி செய்யும்.
ஆட்சி அமைப்பதற்காகவும்,இலங்கை அரசுக்கு உடனடி எதிர்வினையாகவும் கூட்டனி அமைப்பது சந்தர்ப்பவாதமும்,அரசியல் பொறுமை அற்ற அரசியல் செயற்பாடாகவுமே அமையும் என்பதே இப்பத்தியாளனின் கணிப்பாகும். நாளை உண்மையாக புரிந்துணர்வுடன் சமூக சமத்துவத்தினை அவாவி நிற்கின்ற இரு தேசிய இனங்களுக்கு இடைய அமைய வேண்டிய கூட்டு முன்னணியை, இச்சந்தர்ப்பவாத அவசர திருமணத்திற்கு ஒப்பான செயல் தடுத்து விடும்.
*மு.கா.எடுக்க வேண்டிய நிலைப்பாடு
---------------------------------------------------
மு.கா தலைமை எடுக்க வேண்டிய நிலைப்பாடு எது என்கிற கேள்வி உள்ளது. மு.கா .தலைமை ஒரு முடிவினை எடுத்தததன் பின், அது தொடர்பாக விமர்சிப்பதற்கு முன், இப்படியான ஒரு வழிமுறை இருக்கிறது என சொல்வதும் கடமையும் பொறுப்பும் மிக்கது என நினைக்கிறேன்.
மிக சுருக்கமாக சொல்வதானால் மு.கா,தேர்தலில் தனித்து கேட்க,அவர்களை தள்ளிய அரசியல் சூழலும்,அவர்கள் தேர்தல் காலத்தில் மக்களுக்கு முன் வைத்த பரப்புரைகளின் அடிப்படையிலும் அவர்கள் அரசாங்கத்தினை,முஸலிம் மக்களின் அரசியல் சமூக உரிமைகளை உத்தரவாதப்படுத்தும் விடயங்களை கைவிட்டு எடுக்க முடியாது என நம்புகிறேன், தேர்தல் மேடைகளில் அரபு வசந்தத்தினைப் கூர்ந்து நாம் பார்க்க வேண்டுமென பேசிய தலைமை, இப்படியான ஒரு எழுச்சி தமக்கு எதிராக தொடங்குவதை விரும்ப மாட்டாது.
கூட்டமைப்புத் தலைமை முஸ்லிம்கள் தொடர்பாக அண்மைக்காலமாக வெளிப்படுத்தி வருகின்ற கருத்துக்கள் முஸலிம் சமூகத்தால் வரவேற்கக் கூடியதும், நம்பிக்கையை தரவல்லதாகவும் உள்ளது. சம்பந்தன் ஐயா அவர்களின் தலைமை கால கட்டத்தினுள் தமிழ் முஸலிம் மக்களிடையே நம்பிக்கையான அரசியல் எதிர்காலம் ஒன்று கட்டி எழுப்பப்பாடல் வேண்டும். அதற்கான வேலைத் திட்டத்தினை இப்போதிருந்தே போடல் வேண்டும்.
மு.கா.தலைவரும் தமிழ் மக்களின் அபிலாசைக்கு மாற்றாக முடிவு எடுக்கமாட்டோம் என இக்கட்டுரை எழுதப்படும் இறுதிக் கணத்தில்தெரிவித்து உள்ளார். அத்துடன் கிழக்கு தேர்தலில் மு.காவிற்கு விழுந்த வாக்குகள் அபிவிருத்திக்கும், அமைச்சுப்பதவிகளுக்கும் விழவில்லை. அப்படியானால் இருக்கும் ஒரே வழி முஸலிம் காங்கிரஸ் யாருக்கும் ஆட்சி அமைக்க ஆதரவு வழங்காமல்,சுயாதீனமாக கிழக்கு மகாண சபையில் செயற்படுவதுதான்.
ஆட்சி அமைக்கும் காய்நகர்த்தல் அரசியல் விளையாட்டில் பங்காளியாகாமலும்,பலியாகாமலும் இருந்து கொண்டு, முஸ்லிம்களின் நலன்களுக்கும் உரிமைகளுக்கும் சாதகமான தீர்மானங்களை கிழக்கு மாகாண சபையில் முன் மொழிதல் , அவற்றினை தீர்மானங்களாக கொண்டுவருவதுடன், பிற தலைமைகள் தீர்மானங்களை கொண்டு வருகின்ற போது சமூக நலனை முன்னிறுத்தி ஆதரித்தல்.பாதகமான தீர்மானங்கள் வருகின்றபோது அவற்றினை கண்டித்தல் என்கிற பொறுப்புடன்,மைய அரசிடமிருந்து மாகாண அரசுக்கு வர வேண்டிய அதிகாரங்களை கேட்டு,அல்லது அரசியல் ரீதியாக போராடிப் பெறல் என்கிற அரசியல் பாத்திரத்தினை செய்தல்.இந்த அரசியல் நிலைப்பாட்டினை கிழக்கு மாகாண சபையில் *சுயாதீனமாக நின்று* செய்ய முடியுமாக இருந்தால் அது முஸ்லிம்களின் உரிமைப் பாதுகாப்பிற்கும், எதிர்கால அரசியல் வழிமுறைக்கும் மிக அதிக நன்மைகளையும் நம்பிக்கையையும் அக,புற ரீதியாக கொண்டுவரும்.
காலவோட்டத்தில் அரசியல் நிலைமைகளின் மாற்றங்களின் அடிப்படையில் எத்தரப்புடன் சேர்ந்து ஆட்சி அமைப்பதில் சமூக நன்மைகளும், முஸ்லிம்களின் உரிமைக்கான உத்தரவாதங்களும் இருக்கிறதோ அவர்களுடன் சேர்ந்து கூட்டு அரசினை அந்தஸ்துடன் கௌரவமாக அமைத்துக் கொள்ளலாம். இன்றைய நிலைமையில் மு.கா.தலைமை எடுக்கக் கூடிய அரசியல் முடிவு,தூர நோக்கின் அடிப்படையில் இதுதான் என்று நான் நினைக்கிறேன்.
பின்குறிப்பாக இதனை சொல்ல முடியும்
*. அரசாங்கம் தமக்கு ஆதரவு வழங்க மு.கா தலைமை முன்வராத போது, அதன் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் என்பதற்காக, அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கப் போகிறோம் என மு,கா தலைமை காரணம் சொல்வது தொடர்ந்தும் ஏற்கத்தக்கது அல்ல, அது அரசியல் இயக்கத்தின் உறுதியை குலைப்பதுடன்,முஸ்லிம்களின் அரசியல் போராட்டத்தின் ஆன்மாவையும் காயடிக்க வைப்பதாகும்.இந்த நிலமையை கையாள கட்சித் தலைமை அதன் மக்கள் தளத்தினை முன்னிலைப்படுத்துதல் வேண்டும். இது மு,கா மட்டும் எதிர் கொள்ளும் பிரச்சினை அன்று,தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இந்த நிலையை அன்றிலிருந்து எதிர் கொள்கிறது,ஆனால் இந்த நிலையை கையாள அக்கட்சி மு.கா தலைமை போல் அரசாங்கத்துடன் துண்டைக் காணோம்,துணியைக் காணோம் என்கிற வகையில் சேர்வதில்லை.
இறுதியாக பேராசிரியர் நுஹ்மான் அவர்கள் நேர்காணல் ஒன்றில் கேள்வி ஒன்றிற்கு அளித்துள்ள பதிலை மேற்கோள் காட்டுவது பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன்.
கேள்வி“ தமிழ் பேசும் மக்களுக்குரிய அரசியல் எதிர்காலம் என்ன?”
பதில் “ அது பெரிய கேள்விக்குறிதான் .அவர்களின் அடிப்படை வாழ்வே கேள்விக்குள்ளாகி இருக்கிறது.சரியான அரசியல் தலைமைத்துவம் இல்லாது இருக்கிறது. இன்றைய நிலைமையில் சிங்கள தீவிரவாதம்தான் மேலோங்கி உள்ளது.அது சிறுபான்மையினரின் உரிமைக்கு சாதகமாக இல்லை. தோல்வியில் முடிந்த முப்பதாண்டு யுத்தம் சிறுபான்மையினரின் அரசியலை சிக்கலான இடத்தில் கொண்டுவந்து நிறுத்தி இருக்கிறது.அது அண்டிப்பிழைப்போரின் அரசியலாகியிருக்கிறது.மைய நீரோட்டத்தில் மாற்றங்கள் ஏற்படாதவரையில் இது தொடரும் என்றுதான் தோன்றுகிறது“.
நிலைமையினை புரிந்து கொள்ள நுஹ்மான் அவர்களின் மேற்கோள் போதுமென நினைக்கிறேன்.
 நன்றி - பௌசர்

No comments:

Post a Comment