Translate

Wednesday 5 September 2012

புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!


புலம்பெயர் தமிழர்களுக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுக்கும் அவசர வேண்டுகோள்!

இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து சென்ற தமிழர்களும், மத்தியகிழக்கு நாடுகளுக்கு வேலைவாய்ப்புக்காக சென்ற தமிழர்களுக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
எதிர்வரும் கிழக்கு  மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிழக்கு மாகணத்தில் உள்ள தங்களது உறவுகளை வாக்களிக்க சொல்லுமாறு கேட்டே அந்த அவசர வேண்டுகோளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
அன்பான புலம்பெயர் மக்களே!
இலங்கை அரசாங்கம் மீண்டுமொரு அரசியல் போரை கிழக்கு மாகாண மக்கள் மீது திணித்துள்ளது. அந்தப் போர்தான் எதிர்வரும் 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலாகும்.
இந்தப் போரில் தமிழர்களின் வெற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கைகளில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உண்மையில் தமிழர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பும் இணைந்து கடந்த காலங்களில் பல ஜனநாயகப் போர்க்களங்களை சந்தித்துள்ளோம். அதில் வெற்றியும் பெற்றுள்ளோம்.
இந்தத் தேர்தலை ஏன் நான் ஜனநாயகப் போர் என்கின்றேன் என்றால் இது இரண்டு இனங்களுக்கு இடையிலான 60வது ஆண்டுகால உரிமைப் போராட்டம். அதில் ஆயுதங்களுடனும் போரிட்டுள்ளோம், ஜனநாயக தேர்தல் களங்களின் ஊடாகவும் போரிட்டுள்ளோம்.
இதில் எந்தப் போராக இருந்தாலும் சரி அதில் வடகிழக்கு தமிழர்கள்தான் தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகின்றார்கள்.
மாறி மாறி வருகின்ற அரசாங்கங்கள் எத்தனையோ பிரித்தாளும் தந்திரங்களையும், சூழ்ச்சிகளையும் செய்தபோதும், எத்தனையோ துரோகிகள் ஒன்றிணைந்து எமக்கெதிராக செயற்பட்ட போதும் எத்தனையோ அப்பாவி தமிழர்களின் நெஞ்சுகளில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்த போதும் உச்சிமீது வானிடிந்து வீழ்கின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்ற நெஞ்சுறுதியுடன் உரிமைக்காக போரிட்டும் வென்றுள்ளோம், உரிமைக்காக வாக்கிட்டும் வென்றுள்ளோம்.
இன்றும் அதே போராட்டம் தொடர்கின்றது. தமிழர்களாகிய நாங்கள் ஆயுதங்களை மௌனமாக்கியுள்ளோம். இன்று எங்களுக்கான உரிமைகளை தாருங்கள் என்று கேட்டோம். இல்லை தரமுடியாது. நீங்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் அல்ல என்று சொல்லி அதை கிழக்குமாகாண தேர்தல் களத்தில் நாங்கள் நிரூபித்துக் காட்டுகின்றோம் என்று மீண்டும் ஒருமுறை சிங்கள அரசும் அவர்களது கைக்கூலிகளும் நெஞ்சை நிமிர்த்தி மார்புதட்டி நிற்கின்றனர்.
தமிழர்களாகிய நாம் தமிழ் தேசிய உரிமைக்கான போராட்டத்தில் பல தடவைகள் வீழ்த்தப்பட்ட போதும் மீண்டும் மீண்டும் எழுச்சி கொண்டு எழுந்த வரலாறு ஜனநாயக தேர்தல் களத்தில் பல தடவைகள் நிகழ்ந்துள்ளது.
இந்நிலையிலேயே மீண்டும்ஒரு தடவை சிங்கள தேசம் தமிழர்களின் உரிமையை பறிப்பதற்காக, தமிழர்களின் தாயக மண்ணை இரண்டாக பிரித்து கிழக்கு தமிழர்கள் அரசியல் தீர்வு கேட்கவில்லை என்று சர்வதேசத்திற்கு சொல்வதற்காக கிழக்கு மாகாணத்தில் பல கோடி நிதிகளை செலவளித்து பல சுயேச்சைக் குழுக்களை களமிறக்கி தமிழர்களின் வாக்குகளை சிதறடித்து தமிழர்களின் வெற்றியை தமிழர்களை வைத்தே தடுத்து நிறுத்துவதற்கு மிகப்பெரிய அமைச்சர் பட்டாளங்களுடன் களமிறங்கிச் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறான காலகட்டத்தில் கிழக்கில் உள்ள சிலர் யதார்த்தத்தை அறியாதவர்களாய் அபிவிருத்தியின்பால் ஆசைகொண்டு தமிழர்களின் உரிமைகளை சிங்கள தேசத்திடம் அடகு வைப்பதற்காக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.
இவ்வாறானவர்களை தமிழ் தேசியத்துடன் இணைத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பை கிழக்கு மாகாண தேர்தல் போர்க்களத்தில் வெற்றிபெற வைப்பதற்கு புலம்பெயர் தேசத்தில் உள்ள தமிழர்களும், மத்திய கிழக்கு நாடுகளில் தொழில் புரியும் தமிழர்களும் கிழக்கு மாகாணத்தில் வாழும் தங்களது உறவுகளுக்கு தொலைபேசி மூலமாகவும், ஸ்கைப் ஊடாகவும், மின்னஞ்சல் ஊடாகவும் இந்த விடயங்களை தெளிவுபடுத்தி, வருகின்ற 8ம் திகதி நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்குமாறு தெரிவித்து தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க துணைநிற்குமாறு அனைத்து புலம்பெயர் தமிழர்களுக்கும் உரிமையுடன் இந்தச் சந்தர்ப்பத்தில் அவசர வேண்டுகோளை விடுக்கின்றோம்.
“நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் எத்தனை தேர்தல் போர்க்களம் வரினும் தமிழ் தேசியம் வெல்லும்.”
நன்றி
தமிழ் தேசியக் கூட்டமைப்பு,
மட்டக்களப்பு மாவட்டம்.

No comments:

Post a Comment