கிழக்கில் முதலமைச்சர் பதவியுடன் ஏனைய அமைச்சுப் பதவிகளையும் நீங்களே எடுத்துக் கொள்ளுங்கள் என எதுவித நிபந்தனைகளும் இன்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் தரப்பினருக்கு அழைப்பு விடுத்தது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பையேற்று அதற்கு ஆதரவு வழங்காதது முஸ்லிம் காங்கிரஸ் செய்த பெரும் துரோகமாகும். இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாநகரசபை மேயர் முஸம்மில் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று முன் தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு குற்றம் சுமத்தியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறியவை வருமாறு:
கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் மக்கள் நான்கு இலட்சம் வாக்குகளை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசுக்கு எதிராக அளித்துள்ளனர். இதன்படி,கிழக்கில் ஆட்சியமைக்கும் ஆணையை மக்கள் அரசுக்கு வழங்கவில்லை. இருப்பினும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், கிழக்கு முஸ்லிம் மக்களைக்காட்டிக் கொடுத்து அரசுக்குத் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.
18ஆவது அரசியல் சீர்திருத்தத்துக்கு ஆதரவு வழங்கியதுதான் இவர் செய்த மிகப்பெரிய காட்டிக் கொடுப்பாகும். கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவி சுழற்சி முறையில் நஜீப் ஏ. மஜீத்துகு இரண்டரை வருடங்களும், தமக்கு இரண்டரை வருடங்களும் என ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது என முஸ்லிம் காங்கிரஸ் கூறுகிறது.
ஆனால் எமக்குத் தெரிந்தமட்டில் ஜனாதிபதி மஷிந்த ராஜபக்ஷ எந்த அரசியல் கட்சியுடனும் ஒப்பந்தம் செய்ததில்லை. இந்த உடன்படிக்கையைத் தமக்குக் காட்டுமாறு முஸ்லிம் காங்கிரஸிடம் ஊடகவியலாளர்கள் கேட்டபோது, “அது இரகசிய ஒப்பந்தம், ஊடகங்களுக்கு அதைக் காட்டமுடியாது’ என்று அக்கட்சி மறுத்துவிட்டது’ என்றார்
No comments:
Post a Comment