Translate

Wednesday 5 September 2012

தமிழகத்தில் நடைபெற்ற இலங்கை பிரஜைகள் மீதான தாக்குதல் சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது


 ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன்
தமிழகத்தில் நடைபெற்ற இலங்கை பிரஜைகள் மீதான தாக்குதல் சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது
 கடந்த சில தினங்களாக தமிழகத்தில், இலங்கை பிரஜைகளுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட வன்முறை மற்றும் அச்சுறுத்தல் சம்பவங்களை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்தியாவிற்கு புனிதயாத்திரை சென்று இந்த அச்சுறுத்தல்களுக்கு உள்ளான இலங்கையர்கள் மத்தியில், இலங்கை சிங்கள பிரஜைகளுடன், தமிழ் பிரஜைகளும் இருந்துள்ளார்கள் என்ற தகவல்கள் எமக்கு கிடைத்துள்ளன.
இலங்கை தமிழர்களுக்கு உதவுகிறோம் என்ற போர்வையில் சாதாரண இலங்கை மக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட வன்முறை சம்பவங்களினால், இலங்கை தமிழர்களுக்கு எந்தவித நன்மையையும் கிடைக்கப்போவதில்லை.  ஆனால் வன்முறையாளர்களின் இந்நடவடிக்கைகள், இந்நாட்டில் இருக்கின்ற தீவிரவாத இனவாத  வன்முறை முட்டாள்களுக்குத்தான் உதவுகின்றன.
அதேவேளை இலங்கை அரசாங்கம் இத்தகைய சம்பவங்கள் தொடர்பில் அப்பாவி வேடம் புனைந்து, தீக்கோழியைப்போல் மண்ணில் தலையை புதைத்துக்கொள்ளவும்   முடியாது. எமது நாட்டு பிரச்சினைகளுக்கு, குறிப்பாக எமது தேசிய இனப்பிரச்சினைக்கு எமது நாட்டுக்குள் நியாமான தீர்வு காணப்படாததன் விளைவாகவே இத்தகைய சம்பவங்கள் நடைபெறுகின்றன. எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை நீண்ட நாட்களுக்கு முன்னமே கடந்து சென்றுவிட்டன என்ற வெட்கங்கெட்ட யதார்த்தத்தை நமது அரசாங்கம் இனியாவது உணர வேண்டும் என  ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார். 
 
கட்சியின் நிலைப்பாட்டை விளக்கி இந்திய ஊடகங்களுக்கும், இந்நாட்டு சிங்கள ஊடகங்களுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் ஊடக செயலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள  இந்த அறிக்கையில் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக உலகின் பல நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் சம்பந்தப்பட்ட நாடுகளின் ஜனநாயகம், சட்டம் மற்றும் ஒழுங்கு விதிகளுக்கு உட்பட்டவை. ஆனால் எந்த ஒரு எதிர்ப்பு நடவடிக்கையும், மனிதர்கள் மீதும், சொத்துக்கள் மீதும் தாக்குதல் நடவடிக்கைகளாக மாற முடியாது.
எனவே இலங்கையிலிருந்து தமிழகம் செல்லும் சாதாரண மக்கள் மீதான தாக்குதல் எத்தனங்களை நாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டோம். தமிழக கட்சிகளும், அமைப்புகளும் தங்களது  எதிர்ப்பு அரசியல் நடவடிக்கைகளை இலங்கை மற்றும் இந்திய அரசு இயந்திரங்களுக்கு எதிராக முன்னெடுக்கவேண்டும் எனவும், சாதாரண மக்களை விட்டு வைக்க வேண்டும் எனவும் நாம் கேட்டுகொள்கிறோம்.
எமது நாட்டு விவகாரங்கள் நமது கரைகளை கடந்து சென்றுவிட்டன என்பது கண் முன்னே தெரியும் உண்மை. இன்று கூச்சல் இடும் அமைச்சர் விமல் வீரவன்ச போன்றவர்களும் அவரது தீவிரவாத இனவாத  சகபாடிகளும்தான், நமது நாட்டு பிரச்சினைகள் கரைகடந்த விவாதங்களுக்கும், போராட்டங்களுக்கும் உள்ளாக்கப்படுவதற்கு முழுமையான பொறுப்பை ஏற்க வேண்டும். இன்று, இலங்கையில் இந்திய பிரஜைகளுக்கு எதிராக வன்முறை நடந்தால் என்னாவது என  கூச்சலிடும்  இவர்கள் ஒன்றும் உத்தமர்களும் அல்ல. இலங்கையில் இந்தியர்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்காமல் இல்லை. கடந்த காலங்களில்  இந்தியாவிலிருந்து இலங்கை வந்து கதிர்காமத்துக்கு புனிதயாத்திரை சென்ற இந்திய பிரஜை ஒருவர், தென்னிலங்கையில் கோடரியால் வெட்டிக்  கொல்லப்பட்டார். அதேபோல் இந்தியாவின் பிரபல நடிகர் ஷாருக்கான், இலங்கை வந்து அவரது நிகழ்வில் கைக்குண்டு வீசப்பட்டபோது  'தப்பினோம், பிழைத்தோம்' என்று தனது நாட்டுக்கு ஓடியே போனார்.     
 
இன்று நாம் இந்த கறுப்பு வன்முறை வரலாற்றை கடந்து முன்னேற வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றோம்.  எனவே இந்தியாவில் செயற்படும் இந்த தீவிரவாதிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும்படியும், புனித யாத்திரை, சுற்றுலா மற்றும் வர்த்தக நோக்கங்களுக்காக தமிழகம் வரும் சாதாரண இலங்கை பிரஜைகளுக்கு எதிரான போக்கை கைவிட அவர்களை வலியுறுத்தும்படியும் இந்திய அரசை நாம் கோருகிறோம். நமது இந்த கருத்தை இந்திய பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம், திமுக தலைவர் கருணாநிதி ஆகியோருக்கு முறைப்படி தெரிவிக்கும்படி இலங்கையிலுள்ள இந்திய தூதுவர் அசோக் காந்தா அவர்களையும் கோருகிறோம். அதேபோல் நமது உள்நாட்டு விவகாரம் வெளிநாட்டு விவகாரமாக மாறிவரும் சூழலை தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை முன்னேடுப்பதின் மூலமாக முடிவுக்கு கொண்டுவரும்படி இலங்கை அரசையும் நாம் வலியுறுத்தி கோருகிறோம்.   

No comments:

Post a Comment