Translate

Saturday, 29 September 2012

மகிந்தவை ஜனாதிபதியாக்கியதன் பின்னுள்ள தேசியத் தலைவரின் இராஜதந்திரம் என்ன?

மகிந்தவை ஜனாதிபதியாக்கியதன் பின்னுள்ள தேசியத் தலைவரின் இராஜதந்திரம் என்ன? 

தமிழீழத் தேசியத் தலைவரின் வீடுகளைப் பொது மக்களுக்கு காண்பித்து அதன் மூலம் மகிந்த அரசாங்கம் புதிய அரசியல் நாடகமொன்றை தொடங்கியிருக்கின்றது. தமிழீழத் தேசியத் தலைவர் வன்னியில் சகல வசதிகளுடனும் கூடிய வீட்டில் வாழ்ந்தார் என்று தென்னிலங்கை மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் பிரசாரம் செய்கின்ற சிறீலங்கா அரசாங்கமும் இராணுவமும் இதன்மூலம் தனது இருப்பைத் தக்க வைக்கும் உத்தியில் ஈடுபட்டு வருகின்றன.


யுத்தம் முடிவடைந்ததைத் தொடர்ந்து தினமும் தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் தமிழர் தாயகத்தை நோக்கிப் படையெடுக்கின்றனர். இந்த மக்களுக்கான போக்குவரத்து, உணவு, தங்குமிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் அரசாங்கமும் சிங்கள இராணுவத்தினருமே ஏற்படுத்திக் கொடுக்கின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. ஏன் இவ்வாறு நடைபெறுகின்றது என்று இதுவரை யாருக்குமே தெரியாது. இது மகிந்த ராஜபக்சவின் அரசியல் தந்திரோபாயமாகும்.

சிங்கள மக்களிடம் பெரும்பான்மை ஆதரவில்லாத மகிந்த ராஜபக்ச தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களாலேயே ஜனாதிபதியாக்கப்பட்டார். மகிந்த போர்வெறி கொண்ட காட்டேறி என்பது தமிழீழத் தேசியத் தலைவருக்கு மிக நன்றாகவே தெரியும். மகிந்த ஆட்சிக்கு வந்தால் அவர் யுத்தத்தை தொடங்குவார் என்பதும் தலைவருக்கு தெரியும். ஆனாலும் தலைவர் பிரபாகரன் மகிந்தவை ஜனாதிபதியாக்கினார்.

இதற்கு இரண்டு காரணங்கள் பிரதானமாக இருந்திருக்கலாம் என்பது எனது கருத்து. ஒன்று, பேச்சுவார்த்தை என்ற மாயத் தோற்றத்துடன் செயற்பட்டவாறே விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து துரோகி கருணாவைப் பிரித்து விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்ற சிங்கள நரி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாடம் புகட்டுவது.

இரண்டாவது, சிங்களத் தரப்பிலிருந்து எந்த யதார்த்தவாதி ஆட்சிக்கு வந்தாலும் தமிழ் மக்களுக்குரிய தீர்வை முன்வைக்காமல் தமிழர் தரப்பை அழித்தொழிக்கும் யுத்த மனோபாவத்துடனே செயற்படுவார்கள் என்பதை சர்தேச சமூகத்திற்குத் தெரியப்படுத்துவது. இந்த இரண்டு செயற்பாடுகளிலுமே தமிழீழத் தேசியத் தலைவர் வெற்றியைப் பெற்றார்.

அதாவது ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டாமென்று தலைவர் கேட்டுக்கொண்டதன் பேரில் தமிழர் தாயகம் உட்பட சிங்களப் பகுதிகளிலும் கூட தமிழ் மக்கள் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிக்காமையால் மகிந்த ஜனாதிபதியாகினார். 2005 ஆம் ஆண்டு நடைபெற்ற அந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களித்திருப்பார்களேயானால் நிச்சயமாக ரணில் விக்கிரமசிங்கவே ஜனாதிபதியாகியிருப்பார். ஆனால், சமாதானம் என்ற நாடகமாடி விடுதலைப் போராட்டத்தை பலவீனப்படுத்த முயன்ற ரணில் விக்கிரமசிங்க அன்று மட்டுமல்ல என்றைக்குமே இலங்கைத் தீவில் ஜனாதிபதியாக முடியாது என்ற ஒரு நிலையை தமிழீழ தேசியத் தலைவர் ஏற்படுத்தினார்.

இதன்மூலம் ரணில் விக்கிரமசிங்க மட்டுமன்றி மகிந்த ராஜபக்சவும் ஒரு பாடத்தைப் படித்துக்கொண்டார். அது என்னவென்றால், தமிழ் மக்களின் பலம் அல்லது ஆதரவு இன்றி இலங்கைத் தீவில் எத்தகைய ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாதென்ற பேருண்மையை அவர்கள் அறிந்துகொண்டனர். இதனாலேயே எந்தவொரு தேர்தலாயினும் அவர்கள் வடக்கு - கிழக்கிற்குச் சென்று தமிழ் மக்களின் கால்களில் மண்டியிடுகின்றனர்.

இந்த நிலையிலேயே இன்று மகிந்த ராஜபக்ச தள்ளாடிக் கொண்டிருக்கிறார். ஆனால் லிபியாவில் கடாஃபியைப் போல, ஈராக்கில் சதாம் உசைனைப் போல சிறீலங்காவிலும் மகிந்த என்ற ஆட்சி நீண்ட வருடங்களுக்கு நிலைக்க வேண்டும் என்ற நப்பாசையிலேயே மகிந்தவின் தற்போதைய அரசியல் சென்றுகொண்டிருக்கிறது. சிறீலங்காவில் வலுவான எதிரணி ஒன்று இல்லாமையும் மகிந்தவுக்கு சாதகமாக அமைந்துள்ளது. கடந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் எதிரணியின் பொது வேட்பாளராக ஒய்வு பெற்ற இராணுவத் தளபதியாகிய சரத் பொன்சேகா அல்லாமல் வேறொருவர் நிறுத்தப்பட்டிருந்தால் அன்றுடன் மகிந்தவின் இரண்டாவது தடவை ஜனாதிபதி என்ற கனவு கலைந்திருக்கும். அந்தளவிற்கே மகிந்தவின் மக்கள் பலம் உள்ளது.

தனக்கு மக்கள் ஆதரவு குறைந்து வருகின்றது என்பது தெளிவாகத் தெரிந்த நிலையில் தொடர்ந்தும் போர் வெற்றியைக் காரணம் காட்டி ஆட்சியைத் தக்க வைக்கின்ற மகிந்தவின் மற்றொரு ஏற்பாடாகவே தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் வசிப்பிடம் சுற்றுலா மையமாக்கப்பட்டிருக்கிறது. இதன்மூலம் தமிழ் - சிங்கள மக்களிடையே சில பிரசாரங்களை மேற்கொண்டு அவர்களிடம் நற்பெயர் பெற்றுத் தனது ஆட்சியைத் தக்க வைப்பதற்கு மகிந்த முயற்சிக்கின்றார். தமிழீழ தேசியத் தலைவரின் வீடு என்று வன்னியில் காட்டப்படுகின்ற வீடுகள் மிகவும் நவீன முறையில் பாதுகாப்பாகவும் வசதியானதாகவும் அமைக்கப்பட்டுள்ளன. எத்தகைய பலம்மிக்க ஆயுதத்தாலும் தாக்கி நிர்மூலமாக்கப்பட முடியாத பாதுகாப்புடையனவாக அவை அமைக்கப்பட்டுள்ளன.

அதனை விட நீர்மூழ்கி உள்ளிட்ட நவீன விசைப்படகுகளையும் புதிய ஆயுதங்களையும் தயாரிக்கும் தொழில்நுட்ப பலம் உள்ளவர்களாக விடுதலைப் புலிகள் அமைப்பு பலம் பெற்று விளங்கியிருக்கின்றது. இந்த பலம் பெற்ற அமைப்பை நாங்கள் வளர விட்டிருந்தால் அவர்கள் எதிர்காலத்தில் தென்னிலங்கை நோக்கியும் யுத்தத்தை நடத்தி சிங்கள மக்களுக்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தியிருப்பார்கள். ஆனால் அந்தப் பயங்கரவாத அமைப்பை நாங்கள் அடியோடு அழித்தொழித்துவிட்டோம். ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் தலைமையிலேயே புலிகள் அழிக்கப்பட்டனர் என்ற பிரச்சாரம் தென்னிலங்கை மக்களிடையே மிக வேகமாகப் பரப்பப்படுகிறது.

இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாகிய ஜே.ஆர். ஜேயவர்த்தனவினாலேயே அழித்தொழிக்க முடியாத புலிப் பயங்கரவாதிகளை நாம் அழித்தொழித்துளளோம். இதன்மூலம் இலங்கைத் தீவில் அமைதி நிலைநாட்டப்பட்டிருக்கிறது.சிங்களவர்களின் அதிகாரம் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது என்றெல்லாம் சிங்கள மக்களை உசுப்பேற்றி சிறீலங்காவில் தனது குடும்ப ஆட்சியை நிலைநிறுத்துவதற்கு மகிந்த ராஜபக்ச முயன்று கொண்டிருக்கிறார்.

இதேவேளை, தமிழீழ தேசியத் தலைவரின் வீட்டைக் காட்சிப்படுத்துவதன் மூலம் புலிகளின் தலைவரும் புலித் தளபதிகளும் மிகவும் வசதியான வீடுகளில் வாழ்ந்து கொண்டு அப்பாவி இளைஞர்களை போரிட வைத்துப் பலி கொடுத்தனர் என்றும் தமது ஆடம்பரமான வாழ்வுக்காகவே பிரபாகரன் போராட்டத்தை நடத்தினார் என்றும் தமிழர்களை நம்ப வைப்பதற்கு சிங்களம் முயற்சிக்கின்றது.

தமிழ் மக்களிடையே தலைவர் தொடர்பாகவும் புலிகள் தொடர்பாகவும் தவறான புரிதல்களை ஏற்படுத்தி உண்மையிலேயே புலிகள் பயங்கரவாதிகள் தான் என்ற நச்சு விதையை விதைத்து புலிகளுக்கு எதிரான மனப்பாங்குடையவர்களாக தமிழர்களை மாற்றலாம் என்பது மகிந்தவினதும் சிங்கள இராணுவத்தினதும் கனவாக உள்ளது. அவர்களின் இந்தக் கனவுகளை நனவாக்குவதற்காகவே மகிந்த ராஜபக்ச அரசாங்கம் சிங்கள மக்களுக்குப் பணம் கொடுத்து தலைவரின் வீட்டைப் பார்க்க அனுப்புகின்ற அதேவேளை தமிழ் மக்களும் பார்வையிடுவதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.

சிங்கள மக்கள் இனவெறியுடனும் துவேசத்துடனும் இந்த வீடுகளைப் பார்வையிடுகின்ற அதேநேரம், தமிழ் மக்கள் தாங்கள் நேசித்த, நேசிக்கின்ற தலைவரின் வசிப்பிடத்தைப் பார்ப்பதற்கென்றே செல்கின்றனர். இவற்றைப் பார்வையிடுகின்ற தமிழ் மக்களின் மனங்களில் இனமானம் பிறப்பெடுக்கின்ற அதேவேளை, தமிழரின் போராட்ட உத்திகளைப் பார்த்துப் பெருமைப்படுகின்றனர். இந்தப் பிரதேசத்திற்குச் சென்று பார்வையிடுகின்ற தமிழ் மக்கள் தமிழீழம் என்ற தனியரசை எப்படியாவது நாம் பெற்றுவிட வேண்டுமென்று உறுதியெடுப்பவர்களாக உள்ளனர்.

இது இவ்வாறிருக்க, தமிழீழ தேசியத் தலைவர் வாழ்ந்த வீடுகள் என்று சிங்கள இராணுவம் இதுவரை மூன்று வீடுகளைக் காட்டியிருக்கின்றது. ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியில் முதலாம் வட்டாரத்தில் உள்ள நிலக்கீழ் அடுக்கு வீடொன்றை மக்களின் பார்வைக்கு அனுமதித்த சிங்கள இராணுவம் அங்கேயே பிரபாகரன் வாழ்ந்தார். அதுவே புலித் தலைவரின் வீடு என்று பிரசாரப்படுத்தியது. மிக வசதியாகவும் நவீனத்துவமுடையதாகவும் பாதுகாப்பு மிக்கதாகவும் அமைக்கப்பட்ட இந்த நிலக்கீழ் வீட்டைத் தினந்தோறும் ஆயிரக்கணக்கான சிங்கள மக்களும் தமிழ் மக்களும் பார்வையிட்டனர்.

இதன் பின்னர் பிரமந்தனாறு என்ற இடத்திலுள்ள நிலக்கீழ் பதுங்குகுழி வீடொன்றைக் காண்பித்த இராணுவம் இதுவும் தலைவர் பிரபாகரனின் வீடு என்று கூறியது. தற்போது புதுக்குடியிருப்பு மந்துவில் மகாவித்தியாலயத்திற்கு அண்மையிலுள்ள வீடொன்றைக் காண்பிக்கிறது. இந்த மூன்று வீடுகளும் வசதிகளுடன் கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில்தான் தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் நாடுகளிலுள்ள தமிழ் மக்களும் ஒரு விடயத்தைத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சிறீலங்கா அரசாங்கமும் சிங்கள இராணுவமும் கூறுவதைப் போன்று தமிழீழத் தேசியத் தலைவர் வன்னியில் வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் என்பதை எமது போராட்டத்தையும் தலைவரையும் பற்றி அறியாத சிங்கள மக்கள் நம்பலாம்.

ஆனால், மேற்படி ஆடம்பரமான நிலக்கீழ் மாளிகையில் தலைவர் வாழ்ந்தார் என்பதைத் தமிழ் மக்கள் நம்பத் தயாராக இல்லை. ஏனெனில் தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைகளையும் செயல்களையும் அறிந்த, தெரிந்த, அதனைப் பின்பற்றிய தமிழீழ மக்கள் சிங்களம் கூறுவதைப் போன்று தலைவர் இறுதிவரை நிலக்கீழ் மாளிகையில் தான் இருந்தார் என்பதை நம்புவதற்கு என்ன முட்டாள்களா? தமிழீழத் தேசியத் தலைவர் அவ்வாறு சுகபோகங்களை அனுபவிக்க விரும்பியிருந்தால் 1987 ஆம் ஆண்டு காலப்பகுதியிலேயே வடக்கு-கிழக்கு முதலமைச்சராகியிருப்பார்.

இந்திய, சிறீலங்கா அரசாங்கங்களிடம் கோடிக்கணக்கான ரூபாய்களைப் பெற்றுக்கொண்டு பரம்பரைச் செல்வந்தராக வாழ்ந்திருப்பார். அதற்குரிய சந்தர்ப்பங்கள் பல தடவைகள் வந்தபோதும் தலைவர் அதனை உதறித்தள்ளியவர். இப்படியான தலைவர் வன்னியில் இராஜபோக வாழ்வு வாழ்ந்திருப்பார் என்றால் எவருமே ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த இனத்தின் விடுதலைக்காகத் தலைவர் போராடினாரோ அந்த இனம் வாழ வசதியின்றித் தவிக்கையிலே தான் மட்டும் சுகபோகங்களை அனுபவிக்க தலைவர் விரும்பியவரல்ல. தமிழீழ விடுதலைப் புலிகளின் உயர்மட்டத் தலைவர்களின் கருத்தின் அடிப்படையில், ஒட்டுசுட்டான்-புதுக்குடியிருப்பு வீதியிலுள்ள மூன்றடுக்கு வீட்டில் தலைவர் சில மணிநேரமே தங்கியிருந்திருக்கிறார். இந்த வீடு உட்பட மேற்படி மூன்று வீடுகளும் தலைவர் வசிப்பதற்காகக் கட்டப்படவில்லை.

மாறாக விடுதலைப் புலிகளின் ஆவணக் காப்பகங்களாகவும் தளபதிகளுடனான அவசார கூட்டங்கள் நடத்துவதற்கான களங்களாகவுமே இந்த வீடுகள் பயன்படுத்தப்பட்டன. இதைவிட இங்கு அமைக்கப்பட்டிருந்த தடாகங்கள் கரும்புலிகள் நீச்சலடிப்பதற்காக அமைக்கப்பட்டனவே அன்றி தலைவர் சுகபோகம் அனுபவிப்பதற்காக அல்ல. எனவே, அரசாங்கத்தின் இந்த திட்டமிட்ட செயற்பாடுகள் தொடர்பாக தாயகத்திலுள்ள தமிழ் மக்களும் புலம்பெயர் தமிழ் மக்களும் மிகவும் விழிப்பாகச் செயற்பட வேண்டும். இல்லாவிடின் எமது போராட்டத்தின் நியாயப்பாடுகளை சிங்களம் சர்வதேசத்திற்கு தவறாக பிரச்சாரப்படுத்திவிடும்.

அன்பிக்குரிய உறவுகளே யாருக்கும் விலைபோகாத எங்கள் தலைவரை நாம் யாருக்கும் விட்டுக்கொடுக்க கூடாது. இந்த விடயத்தில் சர்வதேச நாடுகளெங்கும் வாழ்கின்ற தமிழ் மக்கள் மிகவும் விழிப்புடன் செயற்பட்டு எமது போராட்ட நியாயப்பாடுகளை சர்வதேசத்திற்குப் புரிய வைக்க வேண்டும்.


தாயகத்தில் இருந்து வீரமணி.

No comments:

Post a Comment