Translate

Friday 7 September 2012

கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? - யதீந்திரா

கிழக்கின் பிரதான அரசியல் சக்தி என்னும் இடத்தை கூட்டமைப்பு கைப்பற்றுமா? 

யதீந்திரா
கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் பிரச்சாரங்கள் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்கிக் கொண்டிருக்கின்றன. தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதான அரசியல் முன்னணியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இத் தேர்தலில் எத்தகைய வெற்றியைப் பெறும் என்பதே பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2008ம் ஆண்டு இடம்பெற்ற கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் த.தே.கூட்டமைப்பு பங்குபற்றாத சூழலில், அரசு தான் விரும்பியவாறான ஓர் ஆட்சியை செய்ய முடிந்தது. ஆனால் இம்முறை அத்தகையதொரு நிலைமை இல்லை. ஏற்கனவே முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் சூழலில், அரசு பெரும்பான்மை பலத்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே நடைபெறப்போகும் கிழக்கு மாகாணசபை தேர்தல் ஆளும் மகிந்த அரசாங்கத்தைப் பொறுத்தவரையில் ஒரு சவால் என்றே கருதலாம்.


கிழக்கு மாகாண சபைக்கான ஆசனங்களை நான்கு பிரதான கட்சிகள் பங்குபோடப் போகின்றன. இதில் அதிகமான ஆசனங்களை பெறப்போகும் கட்சி எது? இதுவே இன்று பலரதும் எதிர்பார்ப்பாக இருக்கின்றது. தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலை பிரதிநிதித்துப்படுத்தும் முதன்மையான அரசியல் தலைமையான த.தே.கூட்டமைப்பு - முதல் முதலாக மாகாணசபை தேர்தலில் பங்குகொண்டிருக்கும் சூழலில், தமிழ் மக்கள் மத்தியில் ஒரு தன்னெழுச்சி உருவாகியிருப்பதாக பலரும் கணிக்கின்றனர். இதன் காரணமாக மக்களின் வாக்களிப்பு விகிதம் வழக்கத்துக்கு மாறாக அதிகரிக்கலாம் என்றும் அவ்வாறானவர்கள் கணிக்கின்றனர். இதன் மூலம் அதிக ஆசனங்களை பெறக் கூடிய வாய்ப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கே அதிகம் உண்டு என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

உண்மையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்பு எவ்வாறுள்ளது? கூட்டமைப்பு கிழக்கு மாகாணசபையில் முதன்மைக் கட்சியாக இடம்பெறுமா? இவற்றுக்கான பதில் செப்டம்பர் ஒன்பதாம் திகதிதான் கிடைக்கும். ஆனால் த.தே.கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்புக்களை ஓரளவிற்கு மதிப்பிட முடியும். கிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் மக்களின் வாக்குகளை அரசு எந்தளவிற்கு பெற முடியும் என்பதையும், தமிழ் மக்கள் எந்தளவு தூரம் வாக்களிப்பில் ஆர்வத்துடன் பங்குகொள்வர் என்பதையும் கொண்டு த.தே.கூட்டமைப்பின் வெற்றியை மதிப்பிடலாம். அதாவது பிரதான சக்தி என்னும் இடத்தை தக்கவைப்பதற்கான வெற்றி.

கிழக்கு மாகாண அரசியல் சூழலைப் பொறுத்தவரையில் த.தே.கூட்டமைப்பின் மக்கள் ஆதரவை கேள்விக்குள்ளாக்கக்கூடிய ஒரு தமிழ் அரசியல் சக்தி இல்லை. 2008ல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் கூட்டமைப்பு பங்குபற்றாமையின் காரணமாக விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிரிந்து அரசுடன் இணைந்து கொண்ட சந்திரகாந்தன் (பிள்ளையான்) அணியினர், மட்டக்களப்பு மக்கள் மத்தியில் ஓரளவிற்கு தங்களை ஓர் அரசியல் அமைப்பாக அடையாளம் காட்ட முயற்சித்திருந்தாலும், ஆளும் அரசுடன் இணைந்து நிற்பதால் அவர்கள் இம்முறை மக்கள் மத்தியில் குறிப்பிடத்தகு ஆதரவைப் பெறுவது கடினமானதாகவே இருக்கும்.

அரசு தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்கான ஒரேயொரு வழியாக இருப்பதும் பிள்ளையானின் கட்சிதான். இந்தப் பின்புலத்தில் பார்த்தால் கடந்த முறை பிள்ளையான் பெற்ற ஆதரவை இம்முறை பெறுவது முயல் கொம்பாகவே இருக்கும். எனவே அளிக்கப்படும் தமிழ் மக்களின் வாக்குகளில், ஒரு சிறு தொகையை தவிர்த்துப் பார்த்தால் ஏனையவை அனைத்தும் த.தே.கூட்டமைப்பிற்கே போய்ச் சேரக்கூடிய வாய்ப்புள்ளது. அரசுக்கான தமிழ் வாக்குகள் குறைவடையும் சூழலில் அரசு முழுக்க முழுக்க தனது வெற்றிக்காக முஸ்லிம் வாக்குகளையே நம்பியிருக்க நேரிடும். முஸ்லிம் மக்களின் அதிகமான வாக்குகளை அரசு பெற முடியுமா?

உண்மையில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் இணைந்து போட்டியிட்டிருக்குமாயின் இத்தகையதொரு கேள்விக்கு அவசியம் இல்லாமல் போயிருக்கும். ஆனால் இப்போது நிலைமை தலைகீழாகியுள்ளது. இந்த பத்தியாளாரின் கணிப்புப்படி, முஸ்லிம் மக்களின் வாக்குகளை இலக்கு வைத்து அரசாங்கமும் முஸ்லிம் காங்கிரசும் இந்தளவிற்கு தீவிரமான பிரச்சாரங்களை மேற்கொண்டிருப்பது இதுதான் முதல் தடவை எனலாம். அதிகமான முஸ்லிம் மக்கள் தங்களுடன்தான் இருக்கின்றனர் என்பதை முஸ்லிம் காங்கிரஸ் நிரூபிக்க வேண்டியுள்ளது. அவ்வாறு நிரூபித்தால்தான் மு.காங்கிரஸ் முஸ்லிம் மக்களின் பிரதான அரசியல் சக்தி என்பதையும் நிரூபிக்க முடியும்.

முஸ்லிம் காங்கிரசைப் பொறுத்தவரையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலானது, முஸ்லிம்கள் அரசுடனா அல்லது தங்களுடனா என்பதை நிரூபிப்பதற்கான ஒரு பலப்பரீட்சையாகும். இதில் முஸ்லிம் காங்கிரஸ் பிரதான சக்தியாக வர வேண்டுமென்பது இரண்டாவது தெரிவே. முஸ்லிம் காங்கிரஸ் அரசுடன் மல்லுக்கட்டும் அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியுடனும் போட்டி போட வேண்டியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் முஸ்லிம் வேட்பாளர்களும் கணிசமான வாக்குகளை எடுக்கக்கூடிய ஆற்றலுள்ளவர்களாக இருக்கின்றனர். எனவே மேற்படி இருதரப்பையும் தாண்டியே முஸ்லிம் காங்கிரஸ் பிரதான இடத்தைப் பெற முடியும்.

அரசுடன் இணைந்து நிற்கும், முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம் காங்கிரஸ் ஓரம் கட்டுமாயின் அரசு கிழக்கு மாகாண சபையில் பிரதான இடத்தை பெறுவது கடினமான ஒன்றாகவே அமையும். தமிழ் மக்களின் வாக்குகளை பெற முடியாத சூழலில், முஸ்லிம் மக்களின் பெருவாரியான ஆதரவும் அரசுக்குக் கிடைக்காது போனால், அரசால் கிழக்கு மாகாணசபையில் பிரதான சக்தியாக வர முடியாது. சிங்கள வாக்காளர்களைப் பொறுத்தரையில் அவர்களின் பெரும்பான்மையான ஆதரவு அரசுக்கே உண்டு. எனினும் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஓரளவு ஆதரவு இல்லாமலில்லை. ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள முஸ்லிம் வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை எடுக்கும் பட்சத்தில், சிங்கள மக்களின் ஆதரவுடன் சில ஆசனங்களை ஐக்கிய தேசியக் கட்சி கைப்பற்றும்.

இத்தகைய பின்னணியை கருத்தில்கொண்டு, தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கான வெற்றி வாய்ப்புக்களை நோக்குவோமாயின் நிலைமைகள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கிறது. அரசு, முஸ்லிம் காங்கிரஸ் போன்றவற்றுக்கு இருக்கும் எந்தவொரு நெருக்கடியும் கூட்டமைப்பிற்கு இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை பிரித்தாளக் கூடிய பிரதான எந்தவொரு சக்தியும் கிழக்கில் இல்லாததால் கூட்டமைப்பிற்கே தமிழ் மக்களின் வாக்குகள் கிடைக்கும். இன்றைய சூழலில் கூட்டமைப்பு தவிர்ந்த எந்தவொரு அரசியல் அமைப்பையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளாமையும் இதற்கான காரணமாகும். எனவே இத்தகையதொரு சூழலில், அவர்கள் வாக்களிக்கச் சென்றால் வீட்டுச் சின்னத்தையே தெரிவு செய்யக் கூடிய நிலைமை காணப்படுகிறது.

இதற்கு சிறந்த உதாரணம் - பாராளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பை எதிர்த்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அணியினர் களத்தில் இறங்கிய போதும், மக்கள் அவர்களை முற்றாகவே நிராகரித்தனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் 1949ம் ஆண்டு தந்தை செல்வாவினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட, பின்னர் பல்வேறு இயக்கங்களால் கையாளப்பட்ட, இறுதியில் விடுதலைப்புலிகளின் அரசியல் ஆகியவற்றின் தொடர்ச்சியாகவே தமிழ் தேசிக் கூட்டமைப்பை பார்க்கின்றனர். காலத்திற்கு காலம் ஏற்பட்ட அரசியல் ஏற்ற இறக்கங்களால் கிடைத்த அனுபவங்களின் தொடர்ச்சியாகவே இன்றைய அரசியலை பார்க்கின்றனர். உண்மையில் த.தே.கூட்டமைப்பில் இடம்பெறும் நபர்கள் என்பது கூட இங்கு முக்கியமான ஒன்றல்ல. நபர்கள் வரலாம் போகலாம் ஆனால் ஒரு அரசியல் தொடர்ச்சியை தக்கவைப்பதற்கான குறியீடாகவே மக்கள் த.தே.கூட்டமைப்பை பார்க்கின்றனர். இந்த அரசியல் தொடர்ச்சியை தக்கவைப்பதன் ஊடாகவே ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைப் பெற முடியுமென்பதே அவர்களது நம்பிக்கை. இப்பத்தியாளர் அரசியல் விடயங்களில் ஆர்வமுள்ள பலருடன் உரையாடிபோது இவ்வாறானதொரு பதிலே அவர்களிடமிருந்து கிடைத்தது. அதில் பலரும் கூட்டமைப்பின் மீது விமர்சனம் உள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
எனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் பிரதான அரசியல் சக்தியாக இடம்பெறுமா என்னும் கேள்விக்கு - சுலபமாக இல்லை என்று பதில் சொல்ல முடியாது. அதற்கான வாய்ப்புக்கள் அதிகம் கூட்டமைப்பிற்கு உண்டு. உரிமைசார் அரசியலில் தமிழ் மக்கள் காட்டிவரும் ஈடுபாடும், தற்போது கிழக்குத் தேர்தலில் முஸ்லிம் வாக்குகளை இலக்கு வைத்து நடத்தப்படும் போட்டியும் கூட்டமைப்பிற்கு பிரதான சக்தி என்னும் நாற்காலியை வழங்கக் கூடும். கிழக்கு மாகாணத்தில் வாழும் பெருவாரியான தமிழ் மக்கள் மத்தியில் வாக்களிப்பு தொடர்பான எழுச்சியொன்று ஏற்படின் இது ஒன்றும் நிறைவேற முடியாத ஆசையுமல்ல.


http://www.pongutham...7f-2a5de5d04dc4 

No comments:

Post a Comment