Translate

Tuesday, 2 October 2012

திவிநெகும சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராய கால அவகாசத்தைக் கோருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.


திவிநெகும சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு விசுவாசம் காட்டக்கூடாது - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை.
திவிநெகும சட்டமூலம் தொடர்பில் விரிவாக ஆராய கால அவகாசத்தைக் கோருகிறது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்.
திவிநெகும சட்டமூலம் இன்றைய தினம் கிழக்கு மாகாண சபையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும்போது குறித்த சட்டமூலத்தில் உள்ளடங்கியுள்ள விடயங்களை விரிவாக ஆராய்வதற்கான கால அவகாசத்தைக் கோரவுள்ளதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பில் சிறீ லங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹஸன் அலி கருத்து தெரிவிக்கையில் கிழக்கு மாகாண சபையில் இன்றைய தினம் திவிநெகும சட்டமூலம் கொண்டுவரப்பட்டாலும் தாம் அதனை பிறிதொரு தினத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும் வகையில் கால அவகாசத்தைக் கோருவோம் எனக் குறிப்பிட்டார். 
இச் சட்டமூலத்தில் அடங்கியுள்ள விடயதானங்களின் சாதக பாதகங்கள் தொடர்பில் ஆராய்ந்து முடிவு ஒன்றை எடுப்பதற்கோ அல்லது அதில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் தொடர்பில் முன்மொழிவுகளை மேற்கொள்வதற்கோ எமக்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. 
மூன்று தினங்களுக்கு முன்னர்தான் எமக்கு குறித்த சட்டமூலத்தின் பிரதி கிடைக்கப்பெற்றது. அதனால் இக் குறுகிய காலப்பகுதிக்குள் அதில் அடங்கியுள்ள விடயங்களை ஆராய முடியாது. அதிகாரப் பரவலாக்கல் விடயங்களைப் பொறுத்தவரை அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க முடியாது.  எனவேதான் திவிநெகும சட்ட மூலத்திலும் எமது கட்சி அவசரப்பட்டு முடிவெடுக்காது என்றும் கூறினார்.
திவிநெகும சட்டமூலம் தொடர்பில் முஸ்லிம் காங்கிரஸ் அரசுக்கு விசுவாசம் காட்டக்கூடாது - நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கோரிக்கை. 
மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையில் அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள 'திவிநெகும' சட்ட மூலத்திற்கு நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் தனது ஆட்சேபனையைத் தெரிவித்துள்ளது.
மாகாண சபைகளுக்குரிய அதிகாரங்களை மேலும் குறைக்கும் வகையிலும், நிதி நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மையை முற்று முழுதாக இல்லாமல் செய்து அகற்றும் நல்லாட்சிக்கு விரோதமான அம்சங்களை உள்ளடக்கிய வகையிலும் இந்த சட்டமூலம் அமைந்துள்ளதாக நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாண சபையில் இச்சட்ட மூலம் முன் வைக்கப்படும் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது அரசுக்கு விசுவாசமாகச் செயற்படக்கூடாது எனவும் அவ்வியக்கம் அறிவுறுத்தியுள்ளது.
அத்துடுன் முஸ்லிம் காங்கிரஸை கிழக்கு மாகாணத்தில் தீர்மானிக்கும் சக்தியாக உருவாக்கிய மக்களுக்கு விசுவாசமாகவும், நாட்டின் நல்லாட்சியை உறுதிப்படுத்தும் வகையிலும் செயற்படவேண்டும் எனவும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது. 

No comments:

Post a Comment