Translate

Wednesday 3 October 2012

கோயிலில் பாலியல் தொழில்

[நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!]
 (ஐந்தாம் பாகம்) 
பூப்புனித நீராட்டு வீழா, அல்லது சாமர்த்திய சடங்கு என்றும் அழைக்கப்படும் பருவமடைந்த பெண் பிள்ளைகளுக்கு நடத்தப்படும் சடங்கு, தமிழர் வாழ்வில் பிரிக்கவொண்ணாத ஒன்றாக மாறி விட்டது. புலம்பெயர்ந்து சென்று, மேற்கத்திய நாடொன்றில் வாழ்ந்தாலும், இந்த சடங்குகளை விட்டு விடவில்லை. குறிப்பாக, மேற்கத்திய சமூகத்தில் வாழும் பெண் பிள்ளைகள் இது போன்ற சடங்குகளை விரும்புவதில்லை. ஏனென்றால், வேற்றின சமூகங்களில் அப்படியான பூப்படைந்த சடங்குகள் எதுவும் இல்லாதபடியால், பிற பிள்ளைகளின் கேலிப் பேச்சுக்கு ஆளாகின்றனர். பெற்றோரைப் பொறுத்த வரையில், இது "தமிழரின் கலாச்சாரம். நாங்கள் எந்த நாட்டில் வாழ்ந்தாலும் பின்பற்றப் பட வேண்டும்."


நாங்கள் தமிழ் கலாச்சாரம் என்று சொல்லிக் கொண்டாலும், அது பிற மொழி பேசும் இந்திய இனங்களால் பின்பற்றப் பட்டால், அதனை " இந்தியக் கலாச்சாரம்"  அல்லது "இந்துக் கலாச்சாரம்" என்று கூறிக் கொள்கிறோம். அதையும் கடந்து, ஆப்பிரிக்கர்களும், இந்தியர்களும் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றினால், அதனை எப்படி அழைக்க வேண்டும்? "ஆப்பிரிக்க-இந்திய கலாச்சாரம்"  என்று பெயரிடலாமா? பூப்புனித நீராட்டு விழாவும், நாம் எமது ஆப்பிரிக்க மைத்துனர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரக்கூறு தான். பண்டைய ஆபிரிக்காவில் Kuta சடங்கு என்றொரு வழக்கம் இருந்தது. இன்று பல ஆப்பிரிக்க சமூகங்களில் காணப்படும் பூப்புனித நீராட்டு விழாக்களின் முன்னோடி அது. கிறிஸ்தவ அல்லது இஸ்லாமிய மதங்களைப் பின்பற்றும் ஆப்பிரிக்க இனங்களின் மத்தியில், அந்தச் சடங்கு அழிந்து விட்டது. இத்தகைய உலகமயமாக்கப்பட்ட மதங்களை பின்பற்றும் ஆப்பிரிக்கர்கள் தான் புலம்பெயர்ந்து வருகின்றனர். அதனால், அவர்களுக்கும் தமிழர்களின் பூப்புனித நீராட்டு சடங்கு புதுமையாகத் தோன்றுகின்றது. 

உண்மையில், இன்றைக்கும் பல ஆப்பிரிக்க சமூகங்களில் பூப்புனித நீராட்டும் சடங்கு செய்யும் வழக்கம் உண்டு. ஐரோப்பியமயப்பட்ட ஆப்பிரிக்கர்கள், இலகுவில்  அதனை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால், "அது காட்டுமிராண்டி கால கலாச்சாரம். நாகரிக உலகத்தால் ஏற்றுக் கொள்ளப் படாதது" அதில் அப்படி என்ன தான் உண்டு?  பூப்புனித நீராட்டு விழாவின் பூர்வீகத்தை ஆராய்வதற்கு முன்னர், அது இன்று ஏதாவது ஆப்பிரிக்க நாட்டில் பின்பற்றப் படுகின்றதா என்று பார்ப்போம். ஐரோப்பியர்களால் முழுமையாகக் காலனிப் படுத்தாத நாடுகளில் கானாவும் ஒன்று. கானா ராஜ்ஜியம் சக்தி வாய்ந்ததாக இருந்ததுடன், ஐரோப்பியருடன் வர்த்தகத் தொடர்புகளைப் பேணியது. பிற்காலத்தில் ஆங்கிலேயரின் காலனியாக மாறினாலும், வத்திக்கான் போன்று, கானா மன்னருக்கு குறிப்பிட்டளவு பிரதேசம் ஒதுக்கப் பட்டது. அதனால் அங்கே சில பாரம்பரியப் பழக்க வழக்கங்களும் தொடர்ந்திருக்கின்றன. பூப்படைந்த குமரிகளின் சடங்கும் அவற்றில் ஒன்று. சாமர்த்திய சடங்கு செய்யப்படாத பெண்ணை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள் என்பது ஒரு மரபு. பூப்புனித நீராட்டு விழா ஒரு பெண்ணின் வாழ்வில் எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம். (Puberty Rites from Ghana,  http://www.ghanaweb.com/GhanaHomePage/tribes/puberty_rites.php)

பிற ஆப்பிரிக்க சமூகங்களில், பெரிய விழாவாக கொண்டாடப் படா  விட்டாலும், குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் அது ஒரு குறிப்பிடத் தக்க நிகழ்வு தான். முதலாவது மாதவிடாய் கண்ட சிறுமியை, நீராட்டி, வீட்டுக்கு வெளியே உள்ள குடிசை ஒன்றில் தனிமைப் படுத்தி, விசேட உணவு கொடுப்பது பண்டைய ஆப்பிரிக்க சம்பிரதாயம். குறிப்பாக இந்தியாவில், தாய் மாமன் தண்ணீர் ஊற்றுவதும், திருமணம் முடிக்க தகுதியான முறைமாமன் உறவு கொண்டாடுவதும் தெரிந்தது தான். ஆப்பிரிக்க சமுதாயங்களிலும், தாய் மாமனை மணம் முடிக்கும் வழக்கம் உண்டு.  இன்றைக்கு நாங்கள் நாகரீகமடைந்த உலகில் வாழ்வதால், 18 வயதுக்குப் பின்னர் திருமணம் செய்வதை பொதுவாக ஏற்றுக் கொள்கிறோம். பண்டைய சமுதாயங்களில் அத்தகைய சட்டம் இருக்கவில்லை.

ஒரு பெண் பூப்படைந்து விட்டாலே, அவள் திருமணத்திற்கு தயாராகி விட்டாள் என்று அர்த்தம். இன்று, பூப்புனித நீராட்டு விழாக்களை நிராகரிக்கும் முற்போக்காளர்கள் கூறும் விளக்கம் இது: "நமது வீட்டில் இருக்கும் பெண் கலவிக்கும், மகப் பேற்றுக்கும் தயாராகி விட்டாள்  என்பதை ஊருக்கு அறிவிக்கிறோம்."  பூப்புனித நீராட்டு விழாவின் உண்மையான நோக்கமும் அது தான்.  அன்றைய  தாய் வழிச் சமுதாயத்தில், அது ஒரு  சர்வ சாதாரணமான விடயம். தாய் வழிச் சமுதாயத்தில் மக்களிடையே கட்டற்ற பாலியல் உறவுகள் காணப்பட்டன. ஆனால், தந்தை வழிச் சமுதாயத்தில், அது தலை கீழாக மாற்றியமைக்கப் பட்டது. அந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது, என்பது பற்றிப் பின்னர் பார்ப்போம்.  உண்மையில் நாம் இன்று பின்பற்றும் மதங்கள் யாவும், "ஆண்களின் புரட்சியின்" விளைவாக உருவானவை. அதனால் தான், அவற்றில் ஆணாதிக்கக் கருத்துக்கள் அதிகமாகக் காணப்படுகின்றன.

"பாலியல் கல்வி"  என்ற விடயம் இன்றைக்கும் பல சமூகங்களில் பேசுபொருளாக இல்லை. இன்று சில மேற்கத்திய நாடுகளில் பள்ளிகளில் போதிக்கப் படுகின்றது. பிற உலக நாடுகளும் அதனைப் பின்பற்ற வேண்டும் என்ற அழுத்தம், ஐரோப்பாவிலிருந்து வருகின்றது. அதனால் நாங்கள், "பாலியல் கல்வி ஒரு நவீன ஐரோப்பிய நாகரீகம்" என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். அது தவறு!  ஐரோப்பியர்கள் அதனை மீளக் கண்டுபிடித்தனர் என்று தான் கூற வேண்டும். ஆப்பிரிக்காவிலும், மேற்கு ஆசியாவிலும், இந்திய உப கண்டத்திலும் பாலியல் கல்வி போதிக்கப் பட்டு வந்தது. அது அவர்களது பண்டைய கலாச்சாரங்களில் ஒன்று.

பூப்புனித நீராட்டு விழாவின் பல சடங்குகளை, நாங்கள் இன்று பின்பற்றுவதில்லை. பூப்படைந்த சிறுமிகளை, தனிமைப் படுத்தி, விசேட உணவு கொடுப்பதுடன் மட்டுமே நின்று விடுகிறோம்.  அத்துடன் பாலியல் அறிவு புகட்டுவதும், பண்டைய காலங்களில்  ஒரு சடங்காக பின்பற்றப் பட்டு வந்தது.  வயதான அல்லது மணம் முடித்த பெண்கள், பாலியல் துறை சார்ந்த அறிவைப்  போதிப்பார்கள். தாள வாத்தியங்கள் இசைத்து, கலவி செய்வதைப் போல அங்கங்களை அசைக்கும் நடனம் அங்கே அரங்கேறும்.  இன்றைய ஆப்பிரிக்க கலாச்சார நடனம், அரேபியரின் வயிற்றுக் குலுக்கல் நடனம், இந்தியர்களின் பரத நாட்டியம் போன்ற பல பாரம்பரிய நடனங்களுக்கு அது மூலமாக அமைந்தது. அந்த பாரம்பரிய நடனங்கள் இன்றைய நிலையை அடைவதற்கு முன்னர், தேவதாசிகளால் தனித்துவமான கலையாக வளர்க்கப் பட்டது. 

தாய் வழிச் சமுதாயத்தில் பல பெண் தெய்வங்கள் முக்கியத்துவம் பெற்றிருந்தன.   இந்தப் பெண் தெய்வங்கள், பல நாடுகளில் பல பெயர்களில் அழைக்கப் பட்டாலும், அந்த தெய்வங்களுக்கான கோயில்களில் நடந்த சடங்குகள் ஒரே மாதிரியாக இருந்துள்ளமை ஆச்சரியத்தை அளிக்கின்றது. மூவாயிரம் அல்லது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கூட, பெண் தெய்வ வழிபாடு பிரபலமடைந்து இருந்ததால், அப்போது கூட பல இடங்களில் தாய்வழிச் சமுதாயம் நிலவியது என்பதை அறிந்து கொள்ளலாம். பாபிலோனியர்களின், கிரேக்கர்களின் வரலாற்றுக் குறிப்புகளில் பெண் தெய்வ வழிபாடு பற்றி எழுதப் பட்டுள்ளன. சைப்பிரசில் பிறந்த அப்ரோடித் என்ற தெய்வத்தை வழிபடும் திருவிழாக்களில், பெண்கள் ஆபாசமாக நடனமாடினார்கள்.

கிரேக்க நாட்டுக் கோயில்களில், பெண் பூசாரிகள் பூசை செய்தனர்.  அவர்கள் இடையை நெளித்து நடனமாடி பூசை செய்வார்கள் என்று, கிரேக்க வரலாற்று அறிஞர் Pausanius  எழுதியுள்ளார். இன்றைக்கும் இந்தியாவில், கர்நாடகா மாநிலத்தில், தேவதாசிகளுக்கு என்று விசேடமான கோயில் உள்ளது. எல்லம்மா என்ற பெண் தெய்வத்தை வழிபடும் கோயில், இன்றைக்கும் தேவதாசி வழக்கத்தை நிறுவனமயப் படுத்தி வைத்துள்ளது. இது ஒரு காலத்தில், கிரேக்கம் முதல் இந்தியா வரை பரவியிருந்த கலாச்சாரத்தின் எச்சமாகும். பெண் பூசாரிகள் பூசை செய்த கிரேக்க கோயில்களும், அந்த நாட்டில் தேவதாசிக் கோயில்களாக இருந்துள்ளன. உண்மையில் "தேவ தாசி"  என்று பெயரிடுவது சரியா என்பது தெரியவில்லை. ஏனெனில், ஆணாதிக்க சமுதாயம் ஏற்பட்ட பின்னர் தான் அந்தப் பெண்கள் "தாசிகள்" ஆனார்கள். அதற்கு முன்னர், அவர்கள் சாதாரண குடும்பப் பெண்கள்! அதாவது முழுச் சமூகத்திற்கும் பொதுவாக இருந்த பாலியல் சுதந்திரத்தை, ஒரு குறிப்பிட்ட பிரிவை சேர்ந்த ஆண்கள் தமது பாலியல் இச்சைகளுக்காக பயன்படுத்தத் தொடங்கினார்கள்.  அன்றிலிருந்து தான் விபச்சாரம், கற்பு நெறி, போன்ற சொற்கள் தோன்றின.

விவிலிய நூலை வாசித்தவர்களுக்கு தெரிந்திருக்கும். அதிலுள்ள சுவிசேஷங்களில் பாபிலோனிய நாட்டை பற்றி எதிர்மறையாக எழுதப் பட்டிருக்கும். இயேசுவின் சீடர்கள், அந்த நாட்டில்  நிலவிய கட்டற்ற பாலியல் சுதந்திரத்தை விமர்சித்து எழுதி இருப்பார்கள். அத்தகைய சமுதாயச் சீர்கேடுகளால் தான் பாபிலோன் அழிந்தது என்று வசை பாடியிருப்பார்கள். (கடைசி அத்தியாயத்தை வாசிக்கவும்) கிறிஸ்தவ மத நம்பிக்கையாளர்கள் அதனை உண்மையென்று நம்புவார்கள். ஆனால், உண்மையில் தாய் வழிச் சமுதாயத்தின் வீழ்ச்சியை கொண்டாடும், ஆணாதிக்க சமுதாயத்தின் வெளிப்பாடு தான் அது. முதல் கிறிஸ்தவ  சக்கரவர்த்தி கொன்ஸ்டாண்டின் காலத்தில், பெண் தெய்வ வழிபாடு முற்றாக அழிக்கப் பட்டது. சிரியாவில், லெபனானில் எஞ்சியிருந்த கோயில்கள் இடிக்கப்பட்டு, அங்கே கிறிஸ்தவ தேவாலயங்கள் எழுப்பப் பட்டன.

பிற்காலச் சமயங்கள், தாய் வழிச் சமுதாயத்தை வெறுக்கக் காரணம் என்ன? சொத்துடமை சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சி ஒரு காரணமாக இருக்கலாம். ஏனெனில், தகப்பன் வழியில் சொத்தை பிள்ளைகளுக்கு உரிமையாக்குவது இலகு. அதே நேரம், "ஆண்களின் கலாச்சாரப் புரட்சி" ஒன்றும் நடந்திருக்கலாம். ஆரம்பத்தில் யூத மதமும், அதற்கு அடுத்ததாக கிறிஸ்தவ மதமும், கடைசியாக இஸ்லாமிய மதமும் ஆண்களின் புரட்சியின் விளைவாக தோன்றியுள்ளன.   இந்த வழக்கம் இன்னமும் சில அரபு நாடுகளில், இஸ்லாமிய கட்டுப்பாடு என்ற பெயரில் பின்பற்றப் படுகின்றது. கிறிஸ்தவ மதம் ஒருவனுக்கு ஒருத்தி என்று போதித்தது. இஸ்லாம் பெண்களை திரைக்குப் பின்னால் மறைந்திருக்குமாறு தள்ளி விட்டது. இதற்கு காரணம், அன்றைய கால சமூகம் வேறு வடிவில் இருந்தது. பெண்களுக்கு அதிக சுதந்திரம் இருந்தது. அதுவும், இன்றைய நவ நாகரிக உலகில் கூட கற்பனை செய்து பார்க்க முடியாத அளவு சுதந்திரம்.

பாபிலோன் ராஜ்ஜியத்தில், (இன்றைய ஈராக், ஈரான், குவைத், சிரியா போன்ற நாடுகளில்) தொன்று தொட்டு ஒரு சம்பிரதாயம் நிலவி வந்தது. ஒவ்வொரு குடும்பத்தையும் சேர்ந்த கன்னிப் பெண்கள், வாழ்க்கையில் ஒரு தடவையாவது, பாலியல் தொழில் செய்த பின்னர் தான் திருமணம் செய்து கொள்ளலாம்! இஷ்தார் கோயிலில் தங்கியிருந்து, அங்கு வரும்  அந்நிய ஆடவருடன் உடல் உறவு கொள்ள வேண்டும். அதனை அவர்கள் ஒரு மதக் கடமையாக கருதினார்கள்.  பாபிலோனியாவில்  இஷ்தார் கோயில்கள் போன்று, கிரேக்க நாட்டில் அப்ரோடித் (வீனஸ்) கோயில்களில் அந்த நடைமுறை பின்பற்றப் பட்டது.  அந்த மதக் கடமையை நிறைவேற்றினால் தான், அந்த நாட்டு கன்னிப் பெண்களுக்கு  திருமணம் நடக்கும்! இஷ்தார் கோயிலுக்கு  வரும் அந்நிய ஆடவன் ஒருவன், அங்கே காத்திருக்கும் பெண்ணிடம் பணத்தைக் கொடுப்பான். அந்தப் பணம் காணிக்கையாக, கோயில் உண்டியலில் போடப்படும். அதன் பிறகு இருவரும் உடலுறவு கொள்வார்கள். இந்த மதக் கடமை பூர்த்தியடைந்ததும், அந்தப் பெண் வீட்டுக்குத் திரும்பலாம். அதற்குப் பிறகு திருமணம் செய்து சாதாரண குடும்ப வாழ்க்கை வாழலாம். கோயிலில் பாலியல் தொழில் செய்த பெண்ணை திருமணம் செய்வதற்கு, எந்த ஆண்மகனும் தயங்கியதில்லை.

அன்றைய காலத்தில், பாபிலோனிய பெண்கள் அனைவரும், ஏழை, பணக்காரர் வித்தியாசமின்றி, இஷ்தார் கோயிலில் பாலியல் தொழில்  செய்வது ஒரு சம்பிரதாயமாக பின்பற்றப் பட்டு வந்தது. (The Whores of Babylonhttp://www.bilderberg.org/babylon.htm ) இஷ்தார் கோயிலுக்கு வரும் ஆண்கள் விபச்சாரம் செய்யும் நோக்கத்துடன் சென்றிருப்பார்கள் என்று கூற முடியாது. ஏனெனில், பெண்களை புனிதமானவர்களாக கருதிய சமூகத்தில், இஷ்தார் கோயில் பெண்களுடன் உறவு கொள்வதை, ஆண்கள் ஒரு மதக் கடமையாகவே நினைத்தார்கள். அதற்காக தம்மை வருத்தி விரதம் இருந்தார்கள். அந்தக் காலத்தில், தாராளமான பாலியல் சுதந்திரம் இருந்தது.  ஒரு பெண், தனது வாழ்க்கையில் ஒரே ஆணுடன் மட்டுமே உடலுறவு வைத்திருக்க வேண்டுமென்ற விதிகள் எதுவும் இருக்கவில்லை. "கன்னி" என்ற சொல்லுக்கு திருமணமாகாத பெண் என்ற அர்த்தம் மட்டுமே இருந்தது. யூத, கிறிஸ்தவ மதங்கள் தான், "கற்பு" என்ற சொல்லைக் கண்டுபிடித்தன. ஒரு கன்னிப் பெண் திருமணத்திற்கு முன்னர், யாருடனும் உடல் உறவு வைத்துக் கொள்ளாமல் பத்திரமாக இருக்க வேண்டும் என்று போதித்தன. முதலிரவன்று ஒரு பெண் கன்னியாக இருக்கா விட்டால், அந்தப் பெண்ணை கல்லால் அடித்துக் கொல்லலாம் என்று யூத மதம் அனுமதி வழங்கியது.

கிரேக்கம் முதல் இந்தியா வரை,  "ஆண்களின் கலாச்சாரப் புரட்சி"  நடந்திருக்கலாம்.   மேற்காசியாவில் யூத மதம் தோன்றிய பின்னர், இருபாலாருக்கும் பொதுவான பாலியல் சுதந்திரத்திற்கு சாவு மணி அடிக்கப்பட்டது. ஒரு ஆண் எத்தனை பெண்ணையும் திருமணம் செய்யலாம், ஆனால் பெண்ணுக்கு அந்த சுதந்திரம் கிடையாது என்று, சட்டங்கள் திருத்தப் பட்டன. தெற்காசியாவில் பிராமண மதமும் அதே மாதிரியான சட்டத்தை பின்பற்றியது.  அதற்குப் பிறகு, எல்லா நாடுகளிலும் ஆண் வழிச் சமுதாய அமைப்பு நடைமுறையில் வந்து விட்டது. யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மும்மதங்களும் ஆணாதிக்கக் கருத்துகளை போதிப்பதற்கு காரணமாக, அவை தோன்றிய காலகட்டத்தில் நிலவிய, பெண் ஆதிக்க  சமுதாய அமைப்பு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த மூன்று மதங்களிலும், அத்தோடு இந்து மதத்திலும், இன்றைக்கும் ஒரு பெண் மதகுருவாக வரமுடியாது என்பது குறிப்பிடத் தக்கது. கிரேக்க, பாபிலோனிய நாடுகளில், பண்டைய மதங்கள் கோலோச்சிய காலங்களில், பெண்கள் பூசாரிகளாக, மதகுருக்களாக நியமிக்கப்படுவது சர்வ சாதாரணம்.

இந்தியாவில், ஆதிபராசக்தி, காளிமாதா, கண்ணகி போன்ற தெய்வங்களுக்கு, பெண் பூசாரிகள் பூஜை செய்யும் வழக்கம் இருந்தது. அது காலப்போக்கில் மறைந்து விட்டது. சக்தியை வழிபடும் மதத்தின் பெயர் சாக்தம். இன்று அது இந்து மதத்தின் ஒரு பிரிவாக கருதப்பட்டாலும், முற்காலத்தில் அது ஒரு தனியான மதம். தாய் மொழிச் சமூகத்தில் பரவலாக எல்லா இடங்களிலும் பின்பற்றப் பட்டு வந்தது. இன்று அரிதாகக் காணப்படும், சிவனை காலில் போட்டு மிதித்தபடி நடனமாடும் காளியின் படம் அதனை நிரூபிக்கின்றது. காளியை வழிபடுவோர் ஒரு இரகசிய சமூகம் போன்று இயங்கியதாக, 19 ம் நூற்றாண்டில் எழுதப்பட்ட ஆங்கிலேயர்களின் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  காளி வழிபாட்டாளர்கள் இரகசியம் பேணியதற்கு காரணம், அது ஒரு தாய்வழிச் சமுதாயத்தின் எச்சம் என்பதாலும் இருக்கலாம். 

பிற்காலத்தில், காளி, துர்க்கை போன்ற தெய்வங்கள் எல்லாம் பார்வதியின் அவதாரங்களாக மாற்றப் பட்டன. பார்வதியை சக்தியாக்கி, சிவனின் மனைவியாக்கினார்கள். வெவ்வேறு மத நம்பிக்கைகளாக சிதறுண்டு கிடந்த கதைகளை, பிற்கால இந்து மதம் ஒன்றுடன் ஒன்று தொடுத்து விட்டிருந்தது. அதனால் தான் இன்றைக்கு பல குழப்பங்கள். அன்று நாகரீகமடைந்த உலகம் முழுவதும், தாய் வழிச் சமுதாயத்தை, தந்தை வழிச் சமுதாயம் வென்று கொண்டிருந்தது. யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்கள், தாய் வழிச் சமூகத்தை இருந்த சுவடு தெரியாமல் அழித்து விட்டன. இந்தியாவில் பிராமண மதத்தால் அந்தளவு வெற்றி பெற முடியவில்லை. பிற்கால இந்து மதத்திற்குள் பெண் தெய்வங்களை  உள்வாங்க வேண்டியிருந்தது.  அதனால் தான், இன்றைக்கும் பல பெண் தெய்வ வழிபாடுகள் அழியாமல் பாதுகாக்கப் படுகின்றன.

மேற்கு ஆசியாவில், யூத, கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களும், தெற்கு ஆசியாவில் இந்து மதமும் பிறந்து வளர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில், உலக இனச் சமநிலையில் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருந்தது. அந்த மதங்கள் தோன்றிய காலத்தில் தான்,   வெள்ளையினம் தெற்கு நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது.  இன்றைய ஈரான், ஈராக், அரேபியா, கிரேக்கப் பகுதிகளில் எல்லாம் வெள்ளையினம் ஊடுருவி, அங்கே மேலாதிக்கம் செலுத்த முடிந்தது. ஆனால், இந்தியாவில் அது இலகுவாக இருக்கவில்லை. கறுப்பின இந்தியர்களின் கடுமையான எதிர்ப்பு, வெள்ளையின ஆக்கிரமிப்பாளர்களின் முன்னேற்றத்தை தடுத்திருக்கலாம். அன்றைக்கு நடந்த சமூகவியல் மாற்றம் குறித்து யாரும் எழுதி வைக்கவில்லை. ஏனெனில், அன்று யாருடைய கண்களுக்கும், வெள்ளை-கருப்பு வித்தியாசம் பெரிதாகத் தெரியவில்லை. இன்றைக்கு நாங்கள், யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் போன்ற மதங்களை பின்பற்றும் மக்களை வெள்ளை நிற மேனியைக் கொண்டவர்களாக உருவகித்துக் கொள்கிறோம். இந்து மதத்தவர்களை வெள்ளை-கறுப்பு கலந்த கலப்பின மக்களாக புரிந்து கொள்கிறோம். 

மனித இனம் குறைந்தது ஒரு லட்சம் வருடங்களாவது, நாகரீகம் என்ற பரிணாம வளர்ச்சி கண்டு வந்துள்ளது. நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கும் வெள்ளையின-கறுப்பின வேறுபாடு, குறைந்தது பத்தாயிரம் வருடங்களுக்கு முன்னர் தோன்றியிருக்க வேண்டும். வடக்கே சைபீரியாவில் உள்ள பனிப் பாலைவனங்களில் இருந்து, தெற்கு நோக்கி இடம்பெயர்ந்த வெள்ளையினத்தவர்கள் அரேபியா, வட ஆப்பிரிக்கா வரையில் ஊடுருவினார்கள். அதற்கு முன்னரே,  இன்றைய மத்திய கிழக்கு பிரதேசத்தில் வாழ்ந்த கறுப்பினத்தவரின் ஆப்பிரிக்கா நோக்கிய இடப்பெயர்வு நடந்திருக்க வேண்டும். மத்திய கிழக்கு கறுப்பின மக்கள் நாகரீகத்தில் சிறந்து விளங்கியது மட்டுமல்ல, பரிணாம வளர்ச்சி காரணமாக அவர்களது தோற்றமும் திராவிடர்கள் போன்று மாறியிருந்தது. ஆகவே, யூதர்கள், அரேபியர்கள், சுமேரியர்கள், பாபிலோனியர்கள் ஆகிய இனங்கள் திராவிடர்களாக மாறிய கறுப்பினத்தவராக இருக்க வேண்டும்.

கறுப்பின யூதர்கள் ஆப்பிரிக்காவுக்கு இடம்பெயர்ந்த வரலாறு, From Babylon to Timbuktu (by Rudolph R. Windsor) என்ற நூலில் விரிவாக ஆராயப் பட்டுள்ளது. மேலதிக விபரம் தேவைப்படுவோர் அதனை வாசிக்குமாறு பரிந்துரைக்கிறேன். கறுப்பின - திராவிட மக்களின் இடப்பெயர்வு, தெற்கே ஆப்பிரிக்கா நோக்கியும், கிழக்கே இந்திய உபகண்டம் நோக்கியும் நடந்து கொண்டிருந்தது. அவர்களின் வாழ்விடங்கள், வடக்கே இருந்து வந்த வெள்ளையின - ஆரிய மக்களால் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கப் பட்டு வந்தது. ஒரு கட்டத்தில் அவர்களே அந்தப் பிராந்தியத்தில் பெரும்பான்மையினராக மாறினார்கள். ஆனால், வெள்ளையின - ஆரியர்கள், நாகரீகமடைந்திராத காரணத்தால், கறுப்பினத்தவரின் மொழி, மதம், பண்பாடு ஆகியனவற்றை தமதாக்கிக் கொண்டனர். இன்று வட-தென் அமெரிக்கக் கண்டங்களில் வாழும் கறுப்பினத்தவர்கள், ஐரோப்பியரின் மொழி, மதம், பண்பாட்டை பின்பற்றுவதைப் போன்று தான், அன்று அந்த மாற்றம் நடைபெற்றது. 

ஒரு காலத்தில், அதாவது வெள்ளையின-ஆரியப் படையெடுப்பு நடப்பதற்கு முன்னர், ஐரோப்பியக் கண்டத்திலும் கறுப்பின மக்கள் வாழ்ந்தனர். அதற்கு ஆதாரங்கள் பல உண்டு. பிரிட்டனில் கண்டெடுக்கப்பட்ட ஆதி கால மனிதனின் பதப்படுத்தப்பட்ட உடல் (மம்மி), கருப்பினத்தை சேர்ந்த மனிதனுடையதாக இருக்கலாம். (பிரிட்டனில் ஆங்கிலேய, கெல்ட்டிய இனங்கள் குடியேறுவதற்கு முன்னர் வாழ்ந்த இனம் எதுவென்று போதுமான அளவு ஆராய்ச்சிகள் நடக்கவில்லை.) சுருள் முடி கொண்ட கறுப்பு மனிதத் தலை, கோர்சிகா தீவின் தேசிய சின்னமாகும். ஒரு காலத்தில் அந்த மத்தியதரைக் கடல் தீவில் வாழ்ந்த கருப்பினம் அழிந்து விட்டது. ஆயினும் ஐரோப்பிய கறுப்பினக் கலாச்சாரக் கூறுகள் சில, இன்றைக்கு ஐரோப்பிய வெள்ளையினக் கலாச்சாரமாக மாறியுள்ளது.

பூமித் தாயாக  வழிபடப் பட்ட பெண் தெய்வம், மரியாள் என்ற பெயரில் இயேசு கிறிஸ்துவின் தாயாக மாற்றப் பட்டது. இன்றைக்கும் சில ஐரோப்பிய நகரங்களில், கன்னி மரியாள்  "கறுப்பு மடோனா" என்ற பெயரில் வழிபடப் படுகின்றார்.  புராதன காலத்தில் அது கறுப்பின மக்களின் பெண் தெய்வ வழிபாடாக இருந்தது. சுமேரியர்கள், பாபிலோனியர்களால் முதன்மையான தெய்வத்தை  பிரசவித்த தாய்த்  தெய்வத்தை வழிபடும் மரபு, இன்று கிறிஸ்தவ மதத்திற்குள் தொடர்கின்றது. ஈஸ்டர் தினத்திற்கும், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த சம்பவத்திற்கும் தொடர்பில்லை என்பது ஏற்கனவே  தெரிந்த விடயம்.அதனால் சில புரட்டஸ்தாந்து குழுக்கள் ஈஸ்டர் கொண்டாடுவதில்லை. (Pagan Easter and the Queen of Heavenhttp://www.youtube.com/watch?v=nfcznGq_vaw&feature=related )

எஸ்ட்ரே (Eastre) என்ற, சொர்க்க லோகத்திற்கு அதிபதியான பெண் தெய்வத்தின் தினமே அதுவாகும். (அந்த சொல் ஆங்கில மொழியில் ஈஸ்டர் என்று உச்சரிக்கப் படுகின்றது.)  பண்டைய ஐரோப்பாவில், ஈஸ்டர் தினத்தன்று,  வசந்த காலத்தின்  வருகையை கொண்டாடினார்கள். (Eastrehttp://en.wikipedia.org/wiki/%C4%92ostre ) ஆங்கிலேயரின் ஈஸ்டர் என்ற சொல், பாபிலோனியர்களின் இஷ்தார் என்ற பெண் தெய்வத்தின் பெயர் மருவி வந்திருக்கலாம். பெயரில் ஒற்றுமை இருப்பதைக் கவனிக்கவும். பாபிலோனியாவில் இஸ்தார் சொர்க்க லோக அதிபதியாக கருதப்பட்டார். இஷ்தாரின் கணவன்/காதலன் தமுஸ் இறந்த பின்னர், அவனை உயிர்ப்பிப்பதற்காக பாதாள லோகம் செல்கிறாள். அங்கு பல சோதனைகளை சந்தித்த பின்னர் தான், இறந்த உடலை உயிர்த்தெழ வைக்க முடிகின்றது. ஒவ்வொரு வருடமும், வசந்த காலத்தில், அதாவது ஈஸ்டர் தினத்தன்று தமுஸ் உயிர்த்தெழுவதாக பாபிலோனியரின் புராணக்கதை தெரிவிக்கின்றது. இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த கதையுடன் இது ஒத்துப் போவது கவனிக்கத் தக்கது. 

இஷ்தார் தெய்வ வழிபாடு, விரிவாக ஆராயப்பட வேண்டிய ஒன்றாகும். ஏனெனில், ஒரே மாதிரியான கதைகள் பல நாடுகளில் காணப்படுகின்றன.(Ishtar, http://en.wikipedia.org/wiki/Ishtar ) பெயர்கள் மட்டுமே வித்தியாசமாக உள்ளன. சுமேரியர்கள் காலத்தில் அதன் பெயர் "இனானா". கிரேக்கர்களுக்கு "அப்ரோடித்". ரோமர்களுக்கு "வீனஸ்". அதே மாதிரி இந்தியர்களின் துர்க்கை அம்மனும், இஷ்தார் தெய்வத்தைக் குறிக்கும் இன்னொரு பெயராக இருக்கலாம். துர்க்கை அம்மனின் வாகனமாக சிங்கம் காணப்படுகின்றது. அதே போல இஷ்தாரின் வாகனமும் சிங்கம் என்பது ஆச்சரியத்திற்குரியது! இஷ்தாரின் கையில் உள்ள தீப்பந்தம், துர்காதேவி கையில் உள்ள சூலாயுதம் போலத் தெரிகின்றது.  இஷ்தார் காதல் தெய்வம் மட்டுமல்ல, அது ஒரு யுத்த தேவதையுமாகும். (இந்து மதத்தில் வீரத்திற்கு துர்க்கை இருப்பது போல) பாபிலோனிய அரசர்கள் போருக்கு புறப்படுவதற்கு முன்னர்,  இஷ்தாரை வழிபட்டு விட்டுச் செல்வார்கள். பாபிலோனியரின் இஷ்தார் தெய்வ வழிபாடு, தமிழர்கள் வாழும் பிரதேசங்களில் துர்க்கை அம்மன் வழிபாடாக தொன்று தொட்டு நடைமுறையில் இருந்து வந்துள்ளது. இஷ்தாரை தனியே துர்க்காதேவியுடன் மட்டும் ஒப்பிட முடியாது. பாபிலோனியாவில் இஷ்தார் பற்றிய கதைகள் நிறைய உள்ளன. அவற்றில் சில, பார்வதி தேவியின் கதைகளுடன் ஒத்துப் போகின்றன. பொதுவாக, இஷ்தாரை, ஆதி பராசக்தியுடன் ஒப்பிடலாம்.

தமிழ்ப் பிரதேசங்களில் நிறைய துர்க்கை அம்மன் கோயில்கள் இருக்கின்றன. இன்றைக்கும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் பிரசித்தி பெற்ற கோயில்கள் அவை.  குறிப்பாக திருமணமாகாத கன்னிப் பெண்கள், துர்க்கை அம்மன் கோயிலுக்கு விரதம் இருப்பார்கள். இளம் பெண்கள், தொடர்ந்து ஏழு செய்வாய்க் கிழமைகள், துர்க்கை அம்மன் கோயிலுக்கு சென்று வழிபட்டு வந்தால், அவர்களுக்கு திருமண பாக்கியம் கைகூடும் என்பது ஐதீகம். மேலே இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில், இஷ்தார் கோயில் வழிபாடு பற்றி நான் எழுதியதை மீண்டும் ஒரு முறை வாசித்துப் பாருங்கள். பாபிலோனிய நாட்டில், திருமணமாகாத ஒவ்வொரு இளம்பெண்ணும் கட்டாயமாக ஏழு நாட்கள் இஷ்தார் கோயிலில் சென்று தங்க வேண்டும் என்ற சம்பிரதாயம் பின்பற்றப் பட்டது. அதற்குப் பிறகு அவர்களுக்கு திருமணம் நடக்கும். ஈஸ்டர், இஷ்தார், துர்க்கை அம்மன், இந்த தெய்வங்களின் பெயர்கள், அறுந்து போன பண்டைய தொடர்பை எமக்கு நினைவு படுத்துகின்றன.  கறுப்பின-திராவிட இனம், ஒரு காலத்தில் ஐரோப்பா முதல் இந்தியா வரையில் வாழ்ந்து வந்தது. அவர்கள் இன்று வெவ்வேறு மொழிகளைப் பேசினாலும், ஒரே மாதிரியான பண்பாட்டை பகிர்ந்து கொள்கின்றனர். 

No comments:

Post a Comment