Translate

Friday, 5 October 2012

"அமைச்சர் பசில் ராஜபக்ஸவின் கருத்துக்கு வைகோ கடும் கண்டனம்"

இலங்கை இராணுவத்தினர் என்ன எதிர்ப்பு நடைபெற்றாலும் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள் என அமைச்சர் பசில் ராஜபக்ஸ தெரிவித்த கருத்துக்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

லட்சோப லட்சம் ஈழத் தமிழர்களை, ஈவு இரக்கமில்லாமல் படுகொலை செய்த சிங்கள கொலைவெறி இனவாத அரசின் அமைச்சரும், ஜனாதிபதியின் சகோதரனுமான பசில் ராஜபக்ச நேற்று கொழும்பில் மிகவும் திமிராகவும், அகம் பாவத்தோடும் என்ன எதிர்ப்பு இருந்தாலும் சிங்கள இராணுவ வீரர்கள் இந்தியாவில் தான் தொடர்ந்து பயிற்சி பெறுவார்கள், இதுவரை இந்தியாவில்தான் பயிற்சி பெற்றும் வந்தார்கள் என்று அறிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தை நடத்துவது சோனியா காந்தியின் கைப்பாவையான டொக்டர் மன்மோகன்சிங்கா? அல்லது கொலை பாதகன் ராஜபக்ஸயின் குடும்பமா? என்ற கேள்வி விசுவரூபம் எடுத்து விட்டது.

ஏனெனில் விடுதலைப் புலிகளுடன் யுத்தம் என்ற பெயரில் சிங்கள அரசும், இராணுவமும் நடத்திய தமிழ் இனக்கொலை யுத்தத்தை இயக்கியதும் இந்திய தளபதிகளை அனுப்பி திட்டம் வகுத்து கொடுத்ததும் இந்தியாவின் முப்படைகளின் ஆயுதங்களை பயன்படுத்தியதும், காங்கிரஸ் தலைமை தாங்கும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுதான் என்பது எள்ளளவும் சந்தேகத்திற்கு இடம் இன்றி வெட்ட வெளிச்சமாகி விட்டது.

இந்த கூட்டணி அரசில் பங்கேற்ற தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் தமிழ் இனக்கொலைக்கு காரணமான குற்றவாளிகளே ஆகும். இதற்கு பின்னரும் காங்கிரசோடு கைகோர்ப்பதும், தமிழ் இனக்கொலை நடைபெற உதவிய இன்றைய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜிக்கு குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களித்தும், தமிழ் இனத்துக்கு செய்த துரோகம் ஆகும். தமிழ் ஈழ விடியலுக்கு உண்மையில் பாடுபடுவோர் யார்? அதற்கு துரோகம் இழைத்துக் கொண்டே தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றும் கபட வேடதாரிகள் யார்? என்பதை முத்துக்குமார் முதல் விஜயராஜ் வரை தங்கள் தேகத்தில் பற்ற வைத்த தியாக நெருப்பின் வெளிச்சம் அடையாளம் காட்டி விட்டது.

சிங்கள கொலைகார கூட்டத்துக்கு இந்தியாவில் யாரெல்லாம் ஆதரவு தருகிறார்களோ, அவர்களை அரசியல் குப்பை தொட்டியில் தூக்கி எறிய வேண்டியது தமிழக மக்களின் கடமை மட்டும் அல்ல, இந்தியாவில் உள்ள மனித உரிமையியல் அக்கறை கொண்ட அனைவரின் கடமையும் ஆகும்.என அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது

No comments:

Post a Comment