Translate

Sunday 7 October 2012

தனி அலகு கோரும் தகுதியை இழந்து விட்ட முஸ்லீம் கட்சிகள் – இரா.துரைரத்தினம்


அண்மையில் சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தன்னை அறியாமலே கூறிய ஒரு வார்த்தை.

13ஆவது சட்டமூலம் என்பது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் வலது கையால் கொடுத்து இடது கையால் அதை பறித்தெடுப்பதாகும். 13ஆவது திருத்த சட்ட மூலம் என்பது அதிகாரபரவலாக்கலின் உச்ச வடிவம் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.


திவிநெகும என்பது தமிழ் மக்கள் புரிந்திருக்காத அறிந்திராத ஒரு சொல். சர்ச்சையையும் சட்ட சிக்கல்களையும் ஏற்படுத்தியிருக்கும் இந்த சொல்லைப்போலவே அதன் உள்ளடக்கமும் நோக்கமும் எளிதில் யாரும் புரிந்து கொள்ளக் கூடாத வகையில் இச்சட்டமூலம் அமைக்கப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.
திவிநெகும என்பதன் தமிழ் பதம் வாழ்வாதார அபிவிருத்தி என கூறப்படுகிறது. தமிழர்களால் விளங்கிக்கொள்ள முடியாத திவிநெகும என்ற சிங்கள சொல்லைப் போலவே இந்த சட்ட மூலமும் பெரும் சர்ச்சையை தோற்றுவித்து விட்டது.
அண்மையில் சிறிலங்கா அமைச்சரவை பேச்சாளர் கெகலிய ரம்புக்வெல தன்னை அறியாமலே கூறிய ஒரு வார்த்தை. 13ஆவது சட்டமூலம் என்பது ஜே.ஆர்.ஜெயவர்த்தனாவால் வலது கையால் கொடுத்து இடது கையால் அதை பறித்தெடுப்பதாகும். 13ஆவது திருத்த சட்ட மூலம் என்பது அதிகாரபரவலாக்கலின் உச்ச வடிவம் அல்ல என்பது எல்லோருக்கும் தெரியும்.
திவிநெகும என்ற இந்த புரியாத சொல்லின் பின்னால் பல உண்மைகள் மறைந்து கிடக்கின்றன.
பல அரசியல் தலைமைகளின் உண்மை முகங்களையும் இனங்கண்டு கொள்வதற்கு திவிநெகும உதவியாக அமைந்து விட்டது. முக்கியமாக இலங்கையில் தங்களையும் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டும் என கோரி வரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் தலைமைகளின் இரட்டை வேடங்களையும் இந்த சட்ட மூலம் இனங்காட்டியிருக்கிறது.
நீதித்துறைக்கும் அரசுத்துறைக்கும் இடையிலான பலப்பரீட்சையாகவும் இந்த திவிநெகும அமைந்து விட்டது. மூன்றில் இரண்டு பெரும்பான்மை தங்களிடம் இருக்கிறது என்ற மமதையில் இச்சட்டமூலத்தை பாராளுமன்றில் சமர்ப்பித்த பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷீல் ராசபக்ச அதனை ஒரே நாளில் நிறைவேற்றி விடலாம் என எண்ணியிருந்தார்.
இந்த சட்ட மூலம் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறித்தெடுக்கிறது. இதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு தடை உத்தரவு போடுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கில் பாராளுமன்றில் சமர்ப்பித்த திவிநெகும சட்ட மூலத்தை மாகாணசபைகள் அங்கீகரித்தால் மட்டுமே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தை பெற முடியும் என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு அரசுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிட்டது.  13ஆவது திருத்த சட்ட மூலம் மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பறித்து பஷில் ராசபக்சவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கு வழங்குவதற்கான ஏற்பாடே திவிநெகும சட்ட மூலமாகும்.
மாகாணத்திற்குரிய அதிகாரங்கள் எதனையும் திவிநெகும திட்டத்தின் மூலம் மத்திய அரசு கையகப்படுத்தவில்லை என பஷில் ராசபக்சவும், அதற்கு ஆதாரவளித்த ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் கட்சியும், கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையானும் கூறிவருகின்ற போதிலும் அச்சட்ட மூலத்தை நன்கு ஆராய்த உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.
திவிநெகும சட்ட மூலம் மாகாண சபைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களுடன் தொடர்பு பட்ட விடயம். மாகாணசபைகளின் சம்மதம் இன்றி பாராளுமன்றத்தில் இச்சட்ட மூலத்தை வாக்கெடுப்புக்கு விட முடியாது என உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் மூலம் மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களில் மத்திய அரசு கைவைக்க முற்படுகிறது என்ற எச்சரிக்கை மணியும் அடிக்கப்பட்டுள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கும் நீதித்துறைக்கும் இடையில் பலப்பரீட்சை பல நாடுகளில் காணப்படுகிறது. பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களை கடிவாளத்திற்குள் வைத்திருக்கும் பலத்தை நீதித்துறை கொண்டிருக்கிறது. தலைமை அமைச்சரை நீக்கும் அளவிற்கு நீதித்துறை பாகிஸ்தானில் தனது பலத்தை காட்டியிருக்கிறது.
அவ்வாறான ஒரு நிலை இலங்கையில் ஏற்பட வாய்ப்பில்லை என்ற போதிலும் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு சவாலாக அண்மைக்காலத்தில் அமைந்த தீர்ப்புக்களில் திவிநெகும தொடர்பாக வழங்கப்பட்ட தீர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
இனப்பிரச்சினை தீர்வுக்காக முக்கியமாக வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரங்களை பகிர்ந்தளிப்பதற்காக இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 13ஆவது திருத்த சட்ட மூலத்தின் கீழ் மாகாணங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரும் ஒரு முயற்சியே திவிநெகும.
அது போல திவிநெகும சட்ட மூலத்திற்கு எட்டு மாகாணசபைகள் அங்கீகாரம் அளித்துள்ள நிலையில் வடமாகாணத்தில் ஆளுநரின் அங்கீகாரம் பெற்றால் போதுமானது என எண்ணியிருந்த அரசுக்கு மாவை சேனாதிராசா அண்மையில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கும் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநரை வடமாகாண மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க கூடிய மக்கள் பிரதிநிதியாக ஏற்றுக்கொள்ள முடியாது எனவே ஆளுநரின் கருத்தை வடமாகாண மக்களின் கருத்தாக ஏற்க கூடாது என உத்தரவிடுமாறு மாவை சேனாதிராசா மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவும் கலைக்கப்பட்ட மாகாணசபையில் ஆளுநருக்கு இருக்க கூடிய அதிகாரம் தொடர்பான சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மாகாணசபை கலைக்கப்பட்ட பின் ஜனாதிபதியின் பிரதிநிதியாக இருந்து மாகாணசபை நிர்வாகத்தை கவனிக்கலாமே ஒழிய அம்மாகாண மக்களின் விரும்பத்தை பிரதிபலிப்பவராக இருக்க முடியாது என்பதே மனுதாரரான மாவை சேனாதிராசாவின் வாதமாகும்
மாகாண சபை ஒன்றின் கருத்து நிலைப்பாட்டை அரசமைப்பின் 154(எ)3 பிரிவின் கீழ் வெளிப்படுத்தும்படி கோரப்படும் பட்சத்தில், அதனை அந்த மாகாண மக்களால் சட்டபூர்வமாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைக் கொண்ட மாகாண சபையே செய்ய முடியும். மாகாண சபையைக் கலைத்த நிலையில் அந்த அதிகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டதாகிவிடாது என மனுதாரார்கள் சார்பில் வாதிக்கப்பட்டுள்ளது.
பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கு பிடித்த கதையாகி மின்னாமல் முழுங்காமல் மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு கையகப்படுத்த நினைத்த ஜனாதிபதிக்கும் அவரின் சகோதரர் பஷில் ராசபக்சவுக்கும் பெரும் சவாலாகவே அமைந்து விட்டது.
ஜனாதிபதியின் பிரதிநிதியான ஆளுநர் மட்டுமல்ல ஜனாதிபதி கூட வடமாகாண மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் தகுதியை கொண்டவர் அல்ல. ஏனெனில் அண்மைக்காலத்தில் நடத்தப்பட்ட ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் ஆகியவற்றில் ஜனாதிபதியின் தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவே வடபகுதி மக்கள் வாக்களித்துள்ளனர்.
முக்கியமாக ஜனாதிபதி தேர்தலில் வடபகுதி மக்களின் பெரும்பாலானவர்கள் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர். ஜனாதிபதி தேர்தலில் யாழ் மாவட்டத்தில் ஒருஇலட்சத்து 85ஆயிரத்து 132பேர் வாக்களித்த நிலையில் மகிந்த ராசபக்சவுக்கு 44154 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தது. எதிராக ஒரு இலட்சத்து 40ஆயிரத்து 978 வாக்குகள் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவே அளிக்கப்பட்டிருந்தது. அது போல வன்னி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 7680 வாக்குகள் அளிக்கப்பட்ட நிலையில் மகிந்த ராசபக்ச 28ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார். 78940 வாக்காளர்கள் மகிந்த ராசபக்சவுக்கு எதிராகவே வாக்களித்திருந்தனர்.
அதை தொடர்ந்து நடைபெற்ற பாராளுமன்ற தேர்தல், மற்றும் உள்ளுராட்சி தேர்தல்களில் மகிந்த ராசபக்ச தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வடமாகாணத்தில் கிடைத்த வாக்குகளை விட எதிராக கிடைத்த வாக்குகளே அதிகம்,
எனவே வடமாகாண மக்களின் விருப்பத்தை இந்த நாட்டின் ஜனாதிபதியால் பிரதிபலிக்க முடியாது என்பதே யதார்த்தமாகும். ஜனாதிபதியே வடபகுதி மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் தகுதியை கொண்டிருக்காத போது எப்படி ஜனாதிபதி நியமித்த ஆளுநர் அம்மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்க முடியும்?
இந்த சிக்கலான விடயத்தை தீர்மானிக்கும் அதிகாரம் அரசியல் யாப்பிற்கு வியாக்கியானம் செய்யும் சட்ட அதிகாரம் கொண்ட உயர்நீதிமன்றிற்கே உண்டு என்பதால் இதற்கான விளக்கத்தை வழங்குமாறு உயர்நீதிமன்றை மேன்முறையீட்டு நீதிமன்றம் கோரியிருக்கிறது.
உயர்நீதிமன்றம் வழங்கப்போகும் தீர்ப்பு ஆளுநரின் அதிகாரம் பற்றிய கேள்விகளுக்கும் விடை கிடைக்க கூடும். வடபகுதி மக்களால் தெரிவு செய்யப்படாத ஆளுநரால் வடபகுதி மக்களின் விருப்பத்தை வெளிப்படுத்த முடியாது என்ற வாதம் வெற்றி பெற்றால் எட்டு மாகாணசபைகளாலும் ஒப்புதல் வழங்கப்பட்ட திவிநெகும பாராளுமன்றில் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்படலாம்.
1988ஆம் ஆண்டு மாகாணசபை உருவாக்கப்பட்ட போது 13ஆவது திருத்த சட்டத்தின் மூலம் மாகாணசபைகளுக்கு கல்வி, சுகாதாரம், காணி, பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டன. ஒரு வருடத்தில் வரதராஜபெருமாள் தலைமையிலான வடகிழக்கு மாகாண ஆட்சி கலைக்கப்பட்ட கையோடு அரசாங்கம் மாகாணசபைக்கு வழங்கப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரத்தை உடனடியாகவே மத்திய அரசாங்கம் கையகப்படுத்தி கொண்டது.
அதன் பின்னர் கல்வி துறையிலும் கையை வைத்த மத்திய அரசாங்கம் தேசிய பாடசாலைகள் என்ற திட்டத்தை கொண்டுவந்து ஒவ்வொரு மாவட்டத்திலும் முன்னணியில் உள்ள பாடசாலைகளை தேசிய பாடசாலைகள் திட்டத்தில் சேர்த்து கொண்டன. அந்த தேசிய பாடசாலைகள் மத்திய அரசின் கீழ் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் மாகாண கல்வித்துறையின் பாதி அதிகாரங்களையும் பிரபலமான பாடசாலைகளையும் மத்திய அரசாங்கம் பறித்து கொண்டது.
இந்த தேசிய பாடசாலை திட்டம் மாகாணங்களுக்கு இருக்கும் அதிகாரங்களை பறிக்கும் நடவடிக்கை என தெரிந்து கொண்டு கொண்டும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தங்கள் மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக்குமாறு மத்திய கல்வி அமைச்சுக்கு சிபார்ச்சு செய்த வரலாறும் உண்டு.
அதிகாரப்பரவலாக்கல் வேண்டும் என கோரி வந்த அப்போதைய தமிழர் விடுதலைக்கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தேசிய பாடசாலைகளாக்குமாறு பிரபல பாடசாலைகளை சிபார்ச்சு செய்தார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.
அதேபோன்று சுகாதார துறையிலும் போதனா வைத்தியசாலைகள், தேசிய வைத்தியசாலைகள், உட்பட சிறந்த வைத்தியசாலைகள் மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மாகாணங்களுக்கு வழங்கப்பட்டிருந்த காணி அதிகாரங்களையும் படிப்படியாக கையப்படுத்திய மத்திய அரசாங்கம் இப்போது காணி தொடர்பான முழு அதிகாரத்தையும் மாகாணசபைகளிடமிருந்து பறித்து விட்டது.
இவ்வாறு மாகாணசபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை கையகப்படுத்தி மாகாணசபை திட்டத்தை பலவீனமாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் நோக்கமாகும். இதை எதிர்த்து நிற்க வேண்டிய சிறுபான்மை இனக்கட்சிகளான முஸ்லீம் கட்சிகள் வெறும் சலுகைகளுக்காகவும் பதவிகளுக்காகவும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி வருவது ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் எதிர்காலத்திற்கும் பெரும் ஆபத்தாகவே முடியும்.
சர்ச்சைக்குரிய இந்த திவிநெகும சட்ட மூலத்திற்கு மாகாணசபைகளின் ஒப்புதலுக்கு வந்த போது கிழக்கு மாகாணசபை உட்பட ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் அங்கம் வகிக்கும் அத்தனை சபைகளிலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாகவே வாக்களித்துள்ளது. மாகாணத்திற்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பறித்து மத்திய அரசாங்கத்திற்கு வழங்கும் இச்சட்ட மூலத்திற்கு ஒப்புதல் வழங்கியதன் மூலம் மாகாணங்களுக்கான அதிகார பரவலாக்கலை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் நிகராகரித்திருக்கிறது.
முஸ்லீம்களுக்கு தனி அலகு வேண்டும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக தமிழர் தரப்பு அரசாங்கத்துடன் நடத்தும் பேச்சுகளில் முஸ்லீம்களும் ஒரு தரப்பாக கலந்து கொள்ள வேண்டும், தமிழர்களுக்கு வழங்கப்படும் எந்த தீர்விலும் தமக்கும் ஒரு பங்கு வேண்டும் என கோரி வரும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஷ் உட்பட முஸ்லீம் கட்சிகள் அந்த கோரிக்கைக்கான தகுதியை இழந்துள்ளனர்.
அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் வழங்கி விட்டு தனி அலகு வேண்டும் என கோரி நிற்பதில் என்ன பலன்? அதிகாரங்களே இல்லாத அலகுகளையா முஸ்லீம் கட்சிகள் கோரி நிற்கின்றன?
ஒரு புறம் மாகாணங்களுக்கு இருக்கின்ற அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திற்கு தாரை வார்க்கும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்து, மாகாணசபை தி;ட்டத்தை பலவீனப்படுத்தி விட்டு மறுபுறம் தனி அலகு வேண்டும், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பாக அல்லது அதிகார பரவலாக்கல் தொடர்பாக நடக்கும் பேச்சில் தாமும் ஒரு தரப்பாக எப்படி கோர முடியும்?
மாகாணசபை என்பது தமிழர்களுக்கு தீர்வாக இல்லா விட்டாலும் தமிழ் மக்கள் பல்வேறு இழப்புக்களின் மத்தியில் முன்னெடுத்த போராட்டத்தின் பலனாக கிடைத்த ஒரு துளி பலனாகும். தமிழ் மக்களின் போராட்டம் இல்லை என்றால் மாகாணசபை கட்டமைப்பு இலங்கையில் உருவாகுவதற்கு வாய்ப்பே இல்லை எனலாம்.
தமிழ் மக்களின் தியாகங்களின் மத்தியில் அந்த தியாகங்களுக்கு கிடைத்த ஒரு துளி பலனாக மாகாணசபை உருவாக்கப்பட்டது என்பதை முஸ்லீம் காங்கிரஷ் உட்பட முஸ்லீம் தலைமைகள் மறுக்க முடியாது.
முஸ்லீம் மக்களின் உரிமைகளை மீட்டெடுக்கப்போவதாக தேர்தல் காலத்தில் மக்கள் மத்தியில் பிரசாரம் செய்த முஸ்லீம் கட்சிகள் சிறுபான்மை இனங்களின் உரிமைகளை வழங்க மறுத்து வரும் ஆளும் தரப்புடன் சலுகைகளுக்காக இணைந்திருப்பதன் மூலம் தமிழர்களுக்கு எந்த தீர்விலும் அதிகாரத்திலும் எங்களுக்கும் பங்கு வேண்டும் என கோரும் தகுதியை இழந்து விட்டார்கள்.
மக்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை விட சலுகைகளும் பதவிகளுமே பெரிது என செயற்படும் முஸ்லீம் கட்சிகளுக்கு வாக்களித்த மக்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள்.

No comments:

Post a Comment