Translate

Tuesday, 2 October 2012

"இராணுவத்தால் நடுத்தெருவிற்கு தள்ளப்பட்ட மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு நிதியுதவி"


இராணுவத்தால் சீனியா மோட்டைப் பகுதியில் அநாதரவாக விடப்பட்ட கேப்பாபிலவு மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா மற்றும் சி.சிறீதரன் ஆகியோர் சென்று பார்வையிட்டுள்ளனர்.

அடிப்படை வசதிகளான சீரான இருப்பிடம், குடிநீர்வசதி, உணவுகள் எதுவும் வழங்கப்படாத நிலையிலும், மீண்டும் இராணுவத்தின் கழுகுப்பிடிக்குள்ளும் வைக்கப்பட்டிருந்த 165 குடும்பங்களில் 115 குடும்பங்கள் எந்தவித ஆரம்ப நிதியுதவிகளும் அரசால் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மாவை சேனாதிராசா மற்றும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் ஊடாக 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா நிதியை பகிர்ந்தளித்து உதவியுள்ளது.

அத்துடன் தற்காலிக வீடு ஒன்று முற்றாக எரிந்த நிலையில் தமது உடமைகளை இழந்து நின்ற குடும்பம் ஒன்றிற்கு 5,000 ரூபாவினையும் வழங்கியிருந்தனர்.

இந்நிகழ்வில் தமது இன்னல்களை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் தெரிவித்த மக்கள், தாம் இந்த மீள்குடியேற்றத்தை ஏற்றுக் கொள்ளாத போதும் சொந்தக் காணிகளில் குடியேற்றுவதாக பொய்ப்பிரசாரம் செய்து இராணுவம் வலுக்கட்டாயமாக தம்மை வாகனங்களில் ஏற்றிவந்ததாகவும், எனினும் தம்மை சொந்தக்காணிகளில் குடியேற்றாது தனியார் காணி ஒன்றினை ஆக்கிரமித்து அதில் குடியேற்றுள்ளதுடன் தமக்கான அடிப்படை வசதிகளோ, போதிய வாழ்வாதார வசதிகளோ தரப்படவில்லை என கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

இதேவேளை தமது சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு ஆவன செய்யுமாறும் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

மக்களின் குறைகளைக் கேட்டறிந்து அவர்களின் நியாயமான கோரிக்கையை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா,
அம்மக்களை சொந்த இடங்களில் குடியேற்றுவதற்காக ஆவன செய்வதாக கூறியதோடு, இக்கட்டான இந்த சூழ்நிலையில் மக்களுக்கு கனடா வாழவைப்போம் அமைப்பு செய்த உதவிக்காக நன்றிகளைத் தெரிவித்ததோடு புலம்பெயர் மக்களுக்கும் நன்றியைத் தெரிவித்தார். அத்துடன், உதவிகளைப் பெற்றுக்கொண்ட மக்களும் தமது நன்றிகளை பகிர்ந்து கொண்டனர்.

தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பிர் சி.சிறீதரன் அவர்கள் இப்பிரச்சினையை சர்வதேசத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாகவும், எம்மக்களின் காணிகளை வன்பறிப்பு செய்ய ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் தெரிவித்தார்

No comments:

Post a Comment