Translate

Saturday, 3 November 2012

ஜெனிவாவில் நெருக்கடியைச் சமாளிக்க இலங்கை பகீரதப்பிரயத்தனம்..

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் பூகோள காலக்கிரம மீளாய்வுக் கூட்டத்தொடரில் இன்று வியாழக்கிழமை இலங்கை விவகாரம் குறித்து தீவிரமாக ஆராயப்படவுள்ள நிலையில், இலங்கையின் நீதித்துறைக்கு அழுத்தங்களைப் பிரயோகிப்பதற்கு அரசு முயற்சித்துவருகின்றது..


..எனச் சுட்டிக்காட்டி பல்வேறு மனித உரிமை அமைப்புகளும், அரசசார் பற்ற நிறுவனங்களும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையிடம் புதிய குற்றச்சாட்டுக்களை அடுக்கிவைத்துள்ளன.

இதேவேளை, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்காக இலங்கை இது வரை எதுவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. நான்கு வருடங்களுக்கு முன்னர் இதுபோன்ற மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கை அளித்த உறுதிமொழிகளுக்கு அப்பால் அங்கு அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ளன.

எனவே,இந்த மீளாய்வுக் கூட்டத்தில் இலங்கையின் கருத்துகளை ஏற்றுக்கொள்ளக் கூடாதென்று நாங்கள் வலியுறுத்தியுள்ளோம் என்று ஜெனிவாவில் உள்ள அரச சார்பற்ற அமைப்புகளின் உயர்மட்ட பிரதிநிதி ஒருவர் சுடர் ஒளியிடம் தெரிவித்தார்.

இலங்கையில் பிரதம நீதியரசருக்கெதிராக குற்றப்பிரேரணை ஒன்று கொண்டுவரப்படுவது குறித்து நாங்கள் நவநீதம்பிள்ளை அம்மையாரிடம் மகஜர் ஒன்றின் மூலம் விரிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். நீதித் துறையில் அரசியல் கலப்பது சிறந்த ஜனநாயகத்துக்கு ஒவ்வாதது என்பதால் இந்த விடயத்தை மீளாய்வுக் கூட்டத்தின் போது பேசுவதற்கு ஐ.நா. ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையும் கேட்டிருக்கின்றோம் என்றும் அந்தப் பிரதிநிதி குறிப்பிட்டார்.

இதேசமயம் நேற்று புதன்கிழமை ஐ.நா. மனித உரிமைகள் ஜெனிவா தலைமையகத்தில் நடைபெற்ற மீளாய்வு முன்னோடிக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட அரச சார்பற்ற அமைப்புகளின் பிரதிநிதிகளும், மனித உரிமை ஆர்வலர்களும் இலங்கை தொடர்பில் கடும் விமர்சனங்களை முன்வைத்து கருத்துக்களை வெளியிட்டனர்.

ஜெனிவாவிற்கு வந்துள்ள இலங்கை அரசின் பிரதிநிதிகள் நிலைமையைச் சமாளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். முன்னதாக கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பாகிஸ்தானின் மனித உரிமைகள் மீளாய்வுக் கூட்டத்தின்போது கருத்து வெளியிட்ட பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகள் பாகிஸ்தானில் மனித உரிமைகள் மேம்படுத்தப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி இருந்தனர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment