Translate

Sunday 18 November 2012

ஐ.நா உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது – பாலித கொஹணே


ஐ.நா உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது – பாலித கொஹணே
 ஐக்கிய நாடுகள் அமைப்பின் உள்ளக அறிக்கைகளினால் இலங்கைக்கு பாதிப்பு எதுவும் ஏற்படாது என அந்த அமைப்பிற்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை ஐக்கிய நாடுகள் அமைப்பினால் வெளியிடப்பட்ட இலங்கை தொடர்பான உள்ளக அறிக்கையினால் பாதிப்பு கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 
ஐக்கிய நாடுகள் அமைப்பு என்பது அதீத அதிகாரங்களைக் கொண்ட ஓர் நிறுவனம் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பானது உறுப்பு நாடுகளினால் கட்டமைக்கப்பட்ட ஓர் நிறுவனமாகும் என அவர் தெரிவித்துள்ளார். பிரகடனங்கள் மற்றும் சில நியதிகளின் அடிப்படையிலேயே ஐக்கிய நாடுகள் அமைப்பு உறுப்பு நாடுகளில் பணியாற்ற முடியும் எனவும், அண்மையில் வெளியிடப்பட்ட உள்ளக அறிக்கையின் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று ஐக்கிய நாடுகள் அமைப்பினால் தன்னிச்சையான தீர்மானங்களை எடுத்து இயங்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் அமைப்புடன் மிக நெருக்கமாக செயற்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் அடிக்கடி இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் அரசாங்கம் காட்டிய அர்ப்பணிப்புக்களை அண்மைய மீளாய்வு அறிக்கை முற்று முழுதாக உதாசீனம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
 
குறிப்பாக பொதுமக்கள் உயிரிழப்புக்கள் தொடர்பிலான கருத்துக்களையும் ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிவிலியன் ஆடைகளில் போராடிய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் மரணங்களை சிவிலியன் இழப்புக்களாக கருத முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
சட்டத்தரணி என்ற ரீதியில் இந்த அறிக்கையின் பல இடங்களில் சிக்கல்கள் இருப்பதாகவும், சட்ட ரீதியாக அந்த தவறுகளுக்கு எதிராக சவால் விடுக்க முடியும் எனவும் டொக்டர் பாலித கொஹணே தெரிவித்துள்ளார்.
 
நன்றி: நியூஸ் பெஸ்ட், நியூஸ் பெஸ்ட் ஆங்கில தொலைக்காட்சி சேவைக்கு வழங்கிய செவ்வியின் முழுத் தமிழ் வடிவமே இது.

No comments:

Post a Comment