தில்லியில் தாக்குதல் நடத்த "இந்தியன் முஜாகிதீன்' பயங்கரவாத இயக்கம் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக றோ (ரிசர்ச் அண்டு அனாலிசிஸ் விங்) உளவுப் பிரிவுக்குத் தகவல் கிடைத்துள்ளது. முக்கிய பிரமுகர்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத் தகவல் கிடைத்துள்ளதால் பிரதமர் மன்மோகன் சிங், சோனியா காந்தி, அத்வானி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை அதிகாரி ஒருவர் கூறியது: தில்லியில் நவம்பர் மாதத்தில் இந்தியன் முஜாகிதீன் பயங்கரவாத இயக்கம் தாக்குதல் நடத்தக் கூடும் என்று சவூதி அரேபியாவில் இருந்து இந்திய உளவுத் துறைக்கு மர்ம தொலைபேசி அழைப்பு கடந்த சில நாள்களுக்கு முன்பு வந்தது. அதையடுத்து தில்லி பயங்கரவாத தடுப்புப் படை அதிகாரிகள் குழுவும் இந்திய உளவுத் துறை அதிகாரிகளும் சவூதி அரேபியா சென்று தொலைபேசியில் பேசிய நபரைக் கண்டுபிடித்து விசாரித்தனர்.
அதைத் தொடர்ந்து இந்தியாவுக்குள் கடந்த சில மாதங்களில் ஊடுருவிக் கைது செய்யப்பட்ட இந்தியன் முஜாகிதீன்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அதில், பிகாரில் பதுங்கியுள்ள இந்தியன் முஜாகிதீன்கள் மூலம் தலைநகரில் தாக்குதல் நடத்த சவூதியில் உள்ள அந்த இயக்கம் உத்தரவிட்டுள்ளதாகத் தெரிய வந்தது.
தில்லியின் முக்கிய இடங்கள் மட்டுமின்றி முக்கியப் பிரமுகர்களையும் பயங்கரவாதிகள் இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தக் கூடும் என்று தகவல் கிடைத்துள்ளது. அதனால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லியில் பாதுகாப்பை அதிகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முக்கிய பிரமுகர்களைக் குறி வைத்துத் தாக்குதல் நடத்த வாய்ப்பிருப்பதால், தேசிய பாதுகாப்புப் படை மற்றும் சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்பைப் பெற்றுள்ள பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, ஹரியாணா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா, உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி உள்ளிட்ட தலைவர்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி கூறினார்.
http://www.seithy.co...&language=tamil
No comments:
Post a Comment