Translate

Saturday, 3 November 2012

சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்!


சர்ச்சையைக் கிளப்பியுள்ள ஒரு பெண் போராளியின் வாக்குமூலம்! வித்யாராணி என்ற பெண்விடுதலைப் புலி ஒருவர் அளித்ததாக விகடன் வார இதழில் வெளியான நேர்காணல் குறித்து பலத்த சர்ச்சை எழுந்துள்ளது.

அந்தப் பேட்டியில் பிரபாகரன் இறந்துவிட்டதாகவும்ஈழப் போராட்டம் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கி எறியப்பட்டுவிட்டதாகவும் வித்யாராணி கூறியுள்ளதை,திட்டமிட்ட இன விரோத செயல் என பல்வேறு ஈழ அமைப்புகளும் விமர்சித்துள்ளன.


தமிழ் மக்களின் ஈழ விடுதலைப் போராட்டத்தை குலைக்கும் உளவியல் போர் இது என்று வர்ணித்துள்ளனர்.


ஆனந்த விகடனில் வெளிவந்துள்ள அந்தக் கட்டுரை:

வித்யா ராணி...2009 மே வரை தமிழ் ஈழம் போற்றிய ஒரு பெண் போராளி. ஆனையிறவு முகாம் மீதான தாக்குதல் தொடங்கி ´ஜெயசிக்குறு எதிர் சமர்´ என ஈழத்தின் பெரும் சமர்களிலும் பங்கெடுத்தவர்.

ஈழத்தின் இறுதி யுத்தம் முள்ளிவாய்க்கால் வரை களமாடிய போராளி. ஈழத்துப் பெண் புலிகளின் வீரத்தை உலகுக்குச் சொன்ன ´சோதியா படையணி´யின் முன்னணித் தளபதிகளில் ஒருவர்.

ஜான்சி ராணிவேலு நாச்சியார் போன்ற வீராங்கனைகளுக்கு இணையாகத் தமிழ் ஈழத்தில் ஒரு காலம் புகழப்பட்ட வித்யா ராணி... கால வெள்ளச் சுழலில் இன்று ஒரு பாலியல் தொழிலாளி.

உங்களிடம் கருணை தேடியோபரிதாபம் ஈனவோ வித்யா ராணி இங்கு பேசவில்லை...´இதுதானடா தமிழா... இலங்கையில் இப்போதைய நிலைமை!´ என்று சில உண்மைகளை முகத்தில் அறையவே இந்தப் பேட்டிக்குச் சம்மதித்தார்.

எனது சொந்த ஊர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை. 1995 ஜூலை மாதம் நாம் இடம்பெயர்ந்து நவாலியில் உள்ள தேவாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தோம். நவாலியை அண்மித்த பிரதேசங்களில் இருந்து சுமார் 500 பேரளவில் அங்கு தஞ்சம் புகுந்திருந்தோம்.

ஜூலை மாதம் ஒன்பதாம் திகதி ´புக்காரா´ விமானங்கள் வானத்தில் இருந்து நடத்திய தாக்குதலில் எனது கண்ணுக்கு முன்பாக சுமார் 125 அப்பாவித் தமிழ் மக்கள், ´அவர்கள் தமிழர்கள்´ எனும் ஒரே காரணத்துக்காகக் கொல்லப்பட்டனர்.

என்னுடன் அந்தக் கணம் வரை சிரித்து விளையாடித் திரிந்த எனது இரண்டு வயதுத் தம்பி எனது கண்களுக்கு முன்பாக உடல் இரு துண்டாகி இறந்துபோனான். தம்பி உடல் சிதைந்து இறந்த கணம் எனக்கு நினைவு தப்பியது.

சுமார் ஒரு வாரம் மயக்கமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு இருந்தேன். கண் விழித்துப் பார்த்தபோதுதம்பியோடு தாயையும் அந்தத் தாக்குதலில் பறிகொடுத்ததை அறிந்துகொண்டேன்.

நான் உயிரினும் மேலாக நேசித்த எனது தம்பியைக் காப்பாற்ற முடியவில்லை என்கிற வலி எனக்குள் ஆற்றுப்படுத்த முடியாத கோபத்தைக் கிளப்பியது. சிறு குழந்தை அவன். எனது உதவி இல்லாமல் காலைக் கடன்கூடக் கழிக்க முடியாத குழந்தை. அவன் என்ன பாவம் செய்தான்அவன் உடல் சிதறிக் கொல்லப்பட என்ன காரணம்?


தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக எவ்வளவு காலம்தான் எமது குழந்தைகளை நாம் பலிகொடுப்பதுஎமது அடுத்த சந்ததியைக் காக்க வேண்டிய கடமை எனக்கு இருப்பதாக எனது உள் மனம் சொன்னது. நான் விடுதலைப் புலிகளுடன் போராட்டத்தில் இணைந்தேன்.

பெண்களை முதல்முறையாக மரபு வழியாகப் போராடவைத்த எல்.டி.டி.ஈ. இயக்கத்தில் பெண்கள் படையணி எந்த அளவுக்கு வலிமையாக இருந்தது?

1985 ஆவணி மாதம் 18-ம் திகதி பெண் புலிகளுக்கான உத்தியோகப்பூர்வமான பயிற்சிப் பாசறை ஆரம்பிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஈழப் போரின் இறுதிக் கணம் வரை விடுதலைப் புலிகளின் மிகப் பெரிய தூண்கள் பெண்கள் படையணி.

பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பிரபாகரன் செய்தது மிகப் பெரிய சமூகப் புரட்சி. சாதிக் கொடுமைகளும் பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளும் தாண்டவமாடிய ஈழத்தில் பெண்களைப் போராட்டத்தில் இணைத்ததன் மூலம் பெண்களின் மேல் கலாசாரம் எனும் பெயரால் விதைக்கப்பட்ட அடக்குமுறைகளை எல்லாம் பிரபாகரன் நீக்கினார்.


ஆண்கள் படையணிகள் மேல் வைத்திருந்த அதே நம்பிக்கை அவருக்கு பெண்கள் படையணிகள் மீதும் இருந்தது. பிரபாகரன் ஈழ விடுதலைக்காக மாத்திரம் போராடவில்லை. அவர் பெண் விடுதலைக்காகவும் போராடியவர்.

ஈழ விடுதலையை அவரால் அடைய முடியவில்லை. ஆனால்,பெண் விடுதலை ஈழத்தில் எப்போதோ பெறப்பட்டுவிட்டது!



அவரது படையணியில் இருந்தவர் என்ற முறையில்பிரபாகரன் என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது எது?

இந்த நூற்றாண்டு கண்ட மாபெரும் வீரன் அவர். ஒரே ஒரு துப்பாக்கியுடன் ஆரம்பித்த விடுதலைப் புலிகள் இயக்கத்தை யுத்த விமானம் வரை முன்னெடுத்து வந்தவர். அவர் இறந்தவுடன் ஈழப் போர் முடிவுக்கு வந்துவிட்டது. ஈழத் தமிழர்கள் இப்போது தலைவன் இல்லாத குடும்பம்போல உணர்கிறோம்!


இப்போது நீங்கள் பாலியல் தொழிலாளியா? 

ஆம். இப்போது நான் ஒரு பாலியல் தொழிலாளி. ஆனால்பாலியல் தொழிலாளி ஆக்கப்பட்டவள்!


என்ன நடந்தது? 

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் நான் இருந்தபோது சக போராளி கீரனைக் காதலித்து மணந்தேன். நான்கு வருடக் காதல் அது. நாங்கள் வாழ்ந்த வாழ்வுக்குச் சாட்சியாக இரு குழந்தைகள். இறுதிப் போரின்போது ஆனந்தபுரத்தில் இரசாயனக் குண்டடித்து இறந்துபோன 700 போராளிகளில் அவரும் ஒருவர்.

அவர் இறந்தவுடன் எனக்கு இருந்த ஒரு துணையும் இல்லாமல் போனது. அவர் இறந்துபோகும் கணம் வரை எனது குழந்தைகளின் எதிர்காலம்பற்றி நான் கவலைப்படவில்லை. ஆனாலும்நான் மனம் தளராமல் போராடினேன்.

எமது போராட்டத்தில் தோற்றுப் போவோம் என நாங்கள் கனவிலும் நினைத்தது இல்லை. ஆனாலும்நாங்கள் தோற்று விட்டோம். எமது போராட்டம் தோற்றுப் போனால் என்ன செய்வது என்கிற எந்தவிதமான முன் ஏற்பாடும் எங்களிடம் இல்லை.

முள்ளிவாய்க்காலில் இருந்து நானும் எனது ஆயுதங்களைக் கைவிட்டு இராணுவப் பிரதேசங்களுக்கு எனது இரு குழந்தைகளுடன் வந்தேன். வவுனியா மெனிக்பாம் முகாமில் தங்கியிருந்தபோதுஇராணுவப் புலனாய்வுப் பிரிவால் கைது செய்யப்பட்டேன்.

எனது குழந்தைகள் என்னிடம் இருந்து பிரிக்கப்பட்டனர். வவுனியாவில் இருந்து விசாரணைக்காக அனுராதபுரம் முகாமுக்குக் கொண்டுசெல்லப்பட்டேன்.
அங்கு கொண்டுசெல்லப்பட்ட முதல் நாளே விசாரணை எனும் பெயரில் இராணுவத்தினரால் கூட்டாகக் கற்பழிக்கப்பட்டேன்.

காலைமாலைஇரவு என ஒரு நாளைக்குக் குறைந்தது மூன்று முறையாவது கற்பழிக்கப்பட்டேன்.
எனது கண்களுக்கு முன்னால் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண் போராளிகள் இராணுவத்தினரால் கற்பழிக்கப்பட்டனர்.

பெரும்பாலான பெண் போராளிகள் தற்கொலை செய்துகொண்டனர். எனது குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து நான் உயிருடன் இருந்தேன்.

அழகான பெண் போராளிகள் உயர் அதிகாரிகளால் கற்பழிக்கப்பட்டனர்.
சில போராளிகள் சிங்கள இனவாத அமைச்சர்களாலும் கற்பழிக்கப்பட்டனர்.
சோதியா படையணியில் குறிப்பிடத்தக்க தளபதியாக இருந்தவள் என்ற ஒரே காரணத்துக்காக இராணுவ உயர் அதிகாரி ஒருவரும் சிங்களப் பேரினவாதத்தைத் தனது ஒவ்வொரு வார்த்தையிலும் விஷமாக உமிழும் ஒரு அமைச்சரும் என்னைக் கூட்டாகக் கற்பழித்தனர்.


காமப் பசியாற்றுவதற்காக அவர்கள் கற்பழிக்கவில்லை. ´தமிழ்ப் பெண்களைக் கற்பழிக்கிறோம்´ என்ற மிருக வெறி உந்தித் தள்ளலே அவர்களை முடுக்கியது. எங்கள் வேதனைகளைக் கை கொட்டி ரசிக்கும் மிருகத்தனம் இருந்தது.

கூட்டாகக் கற்பழிக்கப்படும்போதே இரத்தப்போக்கு அதிகமாகி இறந்தார் என் தோழி ஒருவர்.

குதறிக் கிழிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்பில் பெற்ரோல் ஊற்றி அவர்கள் வலியால் துடிப்பதைக் கைகொட்டி ரசித்தனர்.

அவர்களின் மார்பகத்தில் ஊசிகளை ஏற்றிஅவர்களின் மலத் துவாரங்களில் இரும்புக் குழாய்களைச் செலுத்திஅவர்கள் வலியால் துடிப்பதை வெற்றித் திருவிழாவாக ரசித்தனர்.

பெண் போராளிகளை எவ்வளவு தூரம் சிதைக்க முடியுமோ அவ்வளவு தூரம் மிருகத்தனமாகச் சிதைத்தனர்.எனது குழந்தைகளுக்காக நான் எனது உயிரைக் கையில் பிடித்த வண்ணம் இருந்தேன்!

விசாரணை சித்திரவதையில் இருந்து எப்படித் தப்பினீர்கள்? 

சிறிது காலத்தில் அவர்களாகவே விடுவித்தனர். எங்களை மீள் குடியேற்றம் செய்வதாகக் கூறிமுல்லைத்தீவுக் காடுகளுக்குள் கொண்டு போய் விட்டனர்.

அடுத்த வேளை உணவுக்கே திண்டாடும் நிலை. வன விலங்குகள்பாம்பு,பூச்சிகளுக்கு இடையே என் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நான் பட்ட அவலத்தை வார்த்தையில் வடிக்க முடியாது.

பின்ஒருவழியாக அங்கிருந்து தப்பி யாழ்ப்பாணம் வந்தேன். யாழ்ப்பாணம் வந்த கணத்தில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன்!


நீங்கள் பாலியல் தொழிலாளியாக மாறக் காரணம்..?

பசிதான் காரணம் சகோதரா. யாழ்ப்பாணம் வந்த எங்களுக்கு உதவ யாருமே இல்லை. தமிழர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் கட்சிகள் எல்லாமே வெறுமனே பெயர் அளவில்தான் இயங்குகின்றன.

முன்னாள் போராளி எனத் தெரிந்ததும் யாரும் உதவக்கூட முன்வரவில்லை. எங்களை ஏதோ தீண்டத்தகாதவர்கள்போல நடத்தினார்கள். எங்களிடம் பேசினால்கூட அவர்களுக்கு ஏதும் பாதிப்பு வரலாம் என அஞ்சினர்.

நானும் எனது இரண்டு குழந்தைகளும் தனித்து விடப்பட்டோம். பசியால் பிஞ்சுக் குழந்தைகள் வாடுவதை எவ்வளவு காலம்தான் சகித்துக்கொண்டு இருப்பது.

பால் சுரக்காத முலையைச் சப்பியவாறு´பால்... பால்´ என எனது சிறு குழந்தை அழுவதை நான் எப்படித் தம்பி சகித்துக்கொண்டு இருப்பது. எனக்கு வேறு எந்த வழியும் தெரியவில்லை!


ஏன்நீங்கள் வேலை தேடவில்லையா?

எங்களுடன் பேசவே பயந்தவர்கள் வேலை தருவார்களா என்னநான் வேலை தேடிச் சென்ற அனைத்து இடங்களிலும் என்னை உள்ளே விடவே பயந்தனர்.

பசி தாங்காமல் பிச்சை எடுத்தேன். எங்களுக்குப் பிச்சை போடக்கூடப் பயந்தனர். மீண்டும் சொல்கிறேன்... எனக்கு வேறு வழி ஏதுமே இல்லை.

யாழ்ப்பாணம் பழைய புகையிரத நிலையத்தில் பசி வயிற்றைச் சுருக்கப் படுத்திருந்தபோது,அங்கு வந்த ஒருவரிடம் பிச்சை கேட்டேன். அவர் என்னைப் படுக்க அழைத்தார். சென்றேன்.
அவர் வேலை முடிந்ததும் எனக்கும் எனது குழந்தைகளுக்கும் உணவு வாங்கித் தந்தார்.

அன்றில் இருந்துதான் நான் ஒரு பாலியல் தொழிலாளி ஆனேன். தம்பிக்காகப் போராளி ஆன நான்எனது குழந்தைகளுக்காகப் பாலியல் தொழிலாளி ஆனேன்!


யாரெல்லாம் உங்களின் வாடிக்கையாளர்கள்? 

பெரும்பாலும் வயதானவர்கள். சில சிங்கள யாத்திரீகர்களும் வந்து போவார்கள். சில பாடசாலை மாணவர்களும் வருவார்கள். ஆனால்நான் அவர்களை அனுமதிப்பது இல்லை.
தமிழ் அரசியல் கட்சிகள் எதுவுமே உங்களுக்கு உதவ முன்வரவில்லையா?

அவர்கள் வெறும் பேச்சுக்குத்தான் அரசியல் கட்சிகள். அவர்கள் சிங்களப் பேரினவாத அரசாங்கத்தின் ஏஜென்ட் போலவே செயல்படுகின்றனர்.
இந்தியாவில் இருந்துகொண்டு தமிழ் ஈழத்துக்காகப் போராடும் எந்தத் தலைவர்களும் உங்களைப்போன்ற பெண்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வரவில்லையா?

(அதுவரை எந்த உணர்ச்சியும் இல்லாமல் தன்மையாக ஒலித்த குரலில் அனல் ஏறுகிறது)

இந்தியாவில் இருந்துகொண்டு ஈழத்துக்காகப் போராடுவதாகச் சொல்லும் எந்தத் தலைவர்களிடமும் ஈழம் சம்பந்தமான நேர்மையான புரிந்துணர்வே இல்லை.

´ஈழத் தமிழர்களாகிய நாங்கள் தோற்றுவிட்டோம்´ என்கிற நிர்வாண கசப்பான உண்மையைக்கூட இன்னும் ஏற்றுக் கொள்ள முடியாதவர்களாக இருக்கிறார்கள்.
அதனால்தான் இன்றும் ´இனி ஒரு ஈழப் போர் வெடிக்கும். பிரபாகரன் திரும்பி வருவார்´என்றெல்லாம் சும்மா எழுதிக் கொளுத்திப் போடுகின்றனர்.

எமது போராட்டம் ஈழத்தில் இருந்து சர்வதேசத்தின் சதியால் வேரோடும் வேரடி மண்ணோடும் பிடுங்கப்பட்டு விட்டது.

எனது குழந்தைகளுக்கு அடுத்த வேளை உணவு இல்லாமல் பாலியல் தொழில் செய்துவரும் என்னிடம் வந்து, ´எப்போது உங்கள் அடுத்த போராட்டம்என்று கேட்டால்,விளக்குமாறால் அடிப்பேன்.


(சட்டென ஆற்றாமை பொங்ககுரல் உடைந்து அழுகிறார்.)

இந்தியத் தலைவர்களே... உங்களைக் கை கூப்பித் தொழுகிறேன்... எங்களை வைத்து வியாபாரம் செய்வதை இனியாவது நிறுத்துங்கள்.

எமது அடுத்த சந்ததி வாழ வேண்டும். ஒரு நாளேனும் நிம்மதியான உறக்கம்கொள்ள வேண்டும். உங்களுடைய பிள்ளைகள் மட்டும் படித்தால் போதுமாஎமது அடுத்த சந்ததியும் கல்வி கற்க வேண்டும்.


ஈழத்தில் இன்னொரு போர் வேண்டும் என்று கூறும் நண்பர்களே... உங்களுக்குப் போர் எவ்வளவு வலியானது என்று தெரியுமாபோர் எவ்வளவு கொடுமையானது என்று தெரியுமா?

கண் எதிரே ஷெல் பட்டு இறந்துபோன பெற்றோரின் உடல்களைக் கூடத் தகனம் செய்ய முடியாமல் உயிருக்கு அஞ்சி ஓடிய எம்மவர்களின் வாழ்க்கையைப் பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?

தாய் இறந்ததைக்கூட அறியாது தாயிடம் முலைப்பால் குடித்த குழந்தையின் அவலத்தை நீங்கள் கண்டதுண்டா? 

கர்ப்பிணித் தாயின் வயிறு வெடித்துதாயும் நிறைமாத சிசுவும் அருகிலேயே கணவரும் துடிதுடித்த அவலத்தை நீங்கள் கண்டது உண்டா?
கண்டிருந்தால்நீங்கள் ஈழத்தில் மட்டுமல்லஉலகின் எந்த மூலையில் போர் நடந்தாலும் ஆதரிக்க மாட்டீர்கள்!

உங்களால் இந்தப் பேட்டியில் விமர்சிக்கப்படும் நபர்கள் பதிலுக்கு உங்களை ´விபசாரி´ என விமர்சித்...´

(கேள்வியை முடிக்கும் முன்பே சுளீரெனச் சொல்கிறார்...) ´நான் எனது உடலைத்தான் விற்கிறேன். அவர்களைப் போல ஆன்மாவை அல்ல!

No comments:

Post a Comment