யாழ் பல்கலைக்கழகத்திற்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதலில் ஈடுபட்ட இராணுவம் மற்றும் பொலிசாரின் செயலைக் கண்டித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் உத்தியோகபூர்வ பேச்சாளரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
கடந்த 27 மற்றும் 28ஆம் திகதிகளில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள்மீது இலங்கைப் பொலிசாரும் இராணுவமும் நடத்திய கொடூரமான தாக்குதல்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிக வன்மையாகக் கண்டிக்கின்றது. எந்த மக்களுக்கும் இடையூறு இல்லாமல் பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தும் பல நிகழ்வுகளில் இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் பொலிசாரும் அத்துமீறி நுழைவதும், மாணவர்களை ஆத்திரமூட்டுவதும் தொடர்கதையாகி வருகின்றது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் உரிமைக்காகப் போராடி உயிர்நீத்த போராளிகளுக்கும் யுத்தத்தில் தம் உயிரைக்கொடுத்த தமிழ் மக்களுக்கும் ஒரு மெழுகுதிரி ஏற்றி ஒரு நிமிடம் அஞ்சலி செலுத்துவதை இராணுவமோ பொலிசாரோ எந்த விதத்திலும் தடைசெய்ய முடியாது. இறந்துபோன தமது மக்கள் தொடர்பாக அவர்களுக்காக அஞ்சலி செலுத்துவதென்பது மக்களின் அடிப்படை உரிமை. ஆனால், அதனைக்கூடச் செய்யவிடாமல் தடுப்பதானது மிகவும் காட்டுமிராண்டித்தனமான சர்வாதிகாரப் போக்குகொண்ட இராணுவ ஆட்சியின் வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. வடமாகாணத்தை இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதன் நோக்கம் தமிழ் மக்களது ஜனநாயக உரிமைகளைப் பறித்து அவர்களைத் தொடர்ச்சியாக ஒரு இராணுவ அடக்குமுறைக்குள் வைத்திருப்பதுதான் என்பதையும் இத்தாக்குதல்கள் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றன.
இராணுவத்தினரின் இந்த அடாவடிச் செயலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்காக 28.11.2012 புதனன்று அமைதியான வகையில் மௌனமாக தமது ஜனநாயகப் போராட்டத்தை முன்னெடுத்தவர்கள்மீது மீண்டும் மூர்க்கத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவங்களை நேரில் பார்வையிட்டுப் பதற்றத்தைத் தனிப்பதற்காகச் சென்ற யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.சரணவபவன் அவர்கள்மீதும் இராணுவத்தினரால் கல்வீச்சு நடத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி, குவிக்கப்பட்டிருந்த பொலிசார் முன்னிலையில் அவரது வாகனம் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டுள்ளனர். மௌனமான முறையில் தமது குறைந்தபட்ச எதிர்ப்பைக் காட்டுவதற்குக்கூட மாணவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கு ஒரு சட்டம் தென் பகுதிக்கு வேறு சட்டமோ என்ற ஐயப்பாட்டையும் இது தோற்றுவிக்கின்றது. பலபேர் முன்னிலையில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் மீதானதும் அவரது வாகனம் நொறுக்கப்பட்டமையும் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டமையையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது.
இலங்கை அரசாங்கத்தின் இத்தகைய நடவடிக்கைகளானது தமிழ் மக்கள் என்பவர்கள் அரசினால் வெறுத்தொதுக்கப்பட்ட ஒரு இனம் என்ற அடிப்படையிலேயே இதனையும் நாங்கள் நோக்க வேண்டியுள்ளது. யாழ்ப்பாண்த்தில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தை அரசாங்கம் கண்டிக்காமல் இருப்பதும் சம்பந்தப்பட்ட பாதுகாப்புத் தரப்பினரை விசாரணைக்குட்படுத்தாமல் இருப்பதும் இலங்கை அரசாங்கத்தின் இனவாதக் கண்ணோட்டத்தைத் துலாம்பரமாக வெளிப்படுத்தி நிற்கின்றது.
இனங்களுக்கிடையில் நல்லிணக்கம் என்று பேசும் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இவ்வாறுதான் அமைகின்றது. இராணுவ நடவடிக்கைகளினூ;டாக தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகளை அடக்கிவிடலாம், முறியடித்துவிடலாம் என்று சிந்திப்பது தவறான போக்காகும். இலங்கையை ஆட்சி செய்த பல்வேறு அரசாங்கங்களின் தமிழர் விரோதப்போக்கே இங்கு ஒரு பாரிய யுத்தம் உருவாகக் காரணமாக இருந்தது. யாழ்ப்பாணம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பும் இலங்கைப் படைகளின் ஜனநாயகவிரோத நடவடிக்கைகளும் தமிழ் மக்களை மீண்டும் ஒருமுறை யுத்த சகதிக்குள் தள்ளும் உள்நோக்கம் கொண்டதோ என ஐயுறத்தோன்றுகின்றது.
எனவே, அரசாங்கம் இவ்வாறான அராஜகப் போக்குகளையும் வன்முறைப் போக்குகளையும் கைவிட்டு தமிழ் மக்களுக்கான ஜனநாயக சூழலையும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோருகின்றது.
அடக்குமுறைகள் வென்றதாக உலகெங்கிலும் வரலாறில்லை. இதனைப் புரிந்துகொண்டு அரசாங்கம் செயற்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்பார்க்கின்றது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment