இந்தச் சந்திப்பில் கூட்டமைப்பின் எம்.பிக.களான சுமந்திரன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். இதன்போது கருத்து தெரிவித்த கூட்டமைப்பினர், இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் அரசாங்கம் பாராமுகமாக செயற்பட்டு வருகின்றது. மீள்குடியேற்றத்திலும் பல்வேறு குறைபாடுகள் காணப்படுகின்றன. வடக்கில் இன்னமும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் மீள் குடியமர்த்தப்பட வேண்டியுள்ளனர். வடக்கு கிழக்கில் காணிகள் அபகரிக்கப்பட்டு வருகின்றன. சிங்களக் குடியேற்றங்கள் தொடர்ந்தும் இடம்பெறுகின்றன. யாழ்ப்பாணம் உட்பட வடபகுதியில் ஜனநாயகமற்ற சூழல் நிலவி வருகின்றது. காணாமல் போனோர் விவகாரம் தொடர்பிலும் யுத்தக் குற்றங்கள் தொடர்பிலும் அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் தவறிழைத்து வருகின்றது. யுத்தக் குற்றம் தொடர்பில் இராணுவ விசாரணைகளை மேற்கொள்வதாக அரசாங்கம் கூறுகின்றது. இதன்மூலம் உண்மைகளை கண்டறிய முடியாது.
உண்மைகள் கண்டறியப்படாவிட்டால் நல்லிணக்கம் ஏற்படப் போவதில்லை. எனவே சுயாதீன சர்வதேச விசாரணைக்குழு அமைக்கப்பட்டு இந்த விடயங்கள் குறித்து விசாரணை நடத்தப்படுவதுடன் உண்மைகள் கண்டறியப்பட வேண்டும்.யுத்தம் முடிவடைந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்ட போதிலும் அரசாங்கம் தீர்வு விடயத்திலும் சரி, பொறுப்புக் கூறும் விடயத்திலும் சரி முன்னேற்றத்தினைக் காணவில்லை. 13வது திருத்தச் சட்டத்தினை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படுகின்றது. அரசாங்கம் உண்மையாக தீர்வைக் காண்பதற்கு முயலவில்லை. நாம் தீர்வு தொடர்பில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும் பாராளுமன்ற தெரிவுக்குழு என்ற பொறியைக் காண்பித்து அரசாங்கம் பேச்சுவார்த்தையை குழப்பியது. ஐநா செயலாளர் பான் கீ மூனுக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கும் இடையில் கூட்டறிக்கை ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதுடன் பொறுப்புக் கூறும் விடயங்கள் குறித்தும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அவை ஒன்றுமே நடைமுறைப்படுத்தப்படவில்லை. எனவே சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவினை அமைத்து உண்மைகள் கண்டறியப்படுவதுடன் மூலம் நல்லிணக்கம் ஏற்பட வழி பிறக்கும். இதற்கான நடவடிக்கையினை ஐநா மேற்கொள்ள வேண்டும் என்றும் எடுத்துக் கூறியுள்ளனர்.
|
No comments:
Post a Comment