Translate

Friday 30 November 2012

செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்


செந்தமிழனின் பாலை - யமுனா ராஜேந்திரன்

ஹாலிவுட் சினிமாவின் பிரபல நடிகையான நிக்கோல் கிட்மேன் நடித்த லார்ஸ் வான் டிரையரின் டாக்வில்திரைப்படம் முழுமையானதொரு அரசியல் திரைப்படம். ஸ்டுடியோ செட் ஒன்றினுள் நாடக மேடைச் சட்டக வடிவத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம் அது. செவ்வியல் ஓபரா வடிவத்தை நவீன வாழ்விற்குப் பெயர்த்தால் எப்படி இருக்கும்? நடன அசைவுகளுக்குத் தக்க உச்ச ஸ்தாயியில் பாடல்கள்; சமகால அரசியல் தன்மையுள்ள கச்சிதமான உரையாடல்கள்; நாடக மேடைச் சட்டகம் போன்று திட்டமிட்டபடி கொஞ்சம் விரித்துக் கொண்ட வெளி. இதுதான்டாக்வில் திரைப்படத்தின் கதை நிகழும் களம்.


குடியேறிய மக்களின் இரத்தம் தோய்ந்த அமெரிக்க அரசியல் பற்றியது, கறுப்பு மக்களின் மீதான பூர்வ குடி இந்திய மக்களின் மீதான வெள்ளையினத்தவரின் ஆதிக்கமும் அடிமை அமைப்பின் கொடுமையும் பற்றியது டாக்வில்திரைப்படம். இயக்குனர் லார்ஸ் வான் டிரையர் உலக சினிமாவின் கொடுமுடிகளில் ஒருவர். நிக்கோல் கிட்மென் புகழ்மிக்க பண்பட்ட நடிகை. மிகத் தீவிரமான அரசியலும் சோதனைத் தன்மையும் கொண்ட டாக்வில் திரைப்படம் இதனால் கலை மதிப்பும் வணிக மதிப்பும் பார்வையாளர் வரவேற்பும் பெற்றது.

செந்தமிழனின் பாலை திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது டாக்வில் திரைப்படத்தில் நான் பெற்ற அதே அனுபவத்தைப் பெற்றேன். டாக்வில்லில் நாடக மேடைச் சட்டகம் போன்ற நிரந்தரமான ஸ்டுடியோ காட்சிச் சட்டகம். கைவிரல்களில் எண்ணிவிட முடிகிற நடிக நடிகையர்கள். பிரம்மாண்டமான அரசியல் வரலாற்றுப் பின்புலம். பாலையில் இரண்டாயிரம் ஆண்டுக்கு முன்பான தமிழர்களின் அரசியல் வரலாற்றுப் பின்புலம். ஸ்டுடியோ சட்டகத்திற்கு மாற்றாக இங்கு காடு, நீர்நிலைகள், குடிசை வீடுகள். எண்ணிவிட முடிகிற நடிக நடிகையர். நடனமும் இசையும் செவ்வியல் தமிழும் லயத்துடன் இசைவுறுகின்றன. மிக நீண்ட நடனக் காட்சி போல படம் இருக்கிறது.

படத்தின் வடிவமும் அது தேர்ந்து கொள்ளும் வரலாற்றுப் பிரம்மாண்டமும் சமகால அரசியல் வசனங்களும் தமிழ் சினிமா சட்டகத்தினுள் சோதனையாகவே இருக்க முடியும். திரை நிறைந்த மனிதர்கள், புகழ் பூத்த நடிக நடிகையர், புகழ்பெற்ற பாடலாசிரியர்கள், இசை அமைப்பாளர்கள் என்கிற வணிக அங்கீகாரத்திற்கான பண்புகள் எதுவும் பாலையில் இல்லை. இதனது சொல்முறைக்கும் தமிழ் சினிமாவில் முன்னோடி இல்லை. நமது வெகுஜன சினிமாவின் நேர்த்தியில் தேர்ந்து தோய்ந்த விமர்சகர்களுக்கு இந்த சினிமா உருவாக்கும் ரசனையும் அந்நியமானது. இந்தத் திரைப்படம் எவ்வாறு தமிழ் சினிமாவில் வரவேற்புப் பெறுவது சாத்தியம்?

வெளிப்பாட்டு முறையும் கலையும் சார்ந்த இந்தப் பண்புகளை முன்வைக்க முடியாது வெறும் அரசியல் செய்திக்காக மட்டுமே இந்தப் படத்தினை முன்னிறுத்தும் தமிழ்தேசியர்கள் இந்தப் படத்திற்கான நியாயத்தை வழங்கிவிட முடியுமா? நிச்சயமாக இல்லை. செந்தமிழனின் பாலை முழுமையான வரலாறும் இல்லை. முழுமையாகச் சமகால அரசியலும் இல்லை. வரலாற்றில் விழ்ந்துபட்ட ஒரு மக்கள் கூட்டத்தின் மேன்மையும் கீழ்மையும் சமகால அரசியல் சாயலும் கொண்டது பாலை திரைப்படம். தணிக்கை அமைப்பை ஏமாற்றும் தந்திரம் இந்தத் திரைப்படம்.

ஆயக்குடியில் வாழ்ந்த மக்கள் கூட்டம் வடக்கிலிருந்து வந்தவர்களால் அதனை இழந்து முல்லைக் குடி என புதியதொரு குடியைக் கட்டுகிறது. அந்தக் குடியின் வாழ்வு பண்பாடும் நெறிகளும் கொண்டது. சூது மிக்கவர்களால் இன்று ஆளப்படும் ஆயக்குடியை மீட்கும் போரில் முல்லைக்குடி மக்கள் நீர் நிலைக்கருகில் தமது தலைவனை இழக்கிறார்கள் அல்லது அவர் தடம் காணாது மறைந்துபோகிறார். இந்தக் கதைப் போக்கினுள் இயற்கையோடியைந்த தமிழர் வாழ்வும் காதலும் வீரமும் சொல்லப்படுகிறது. அகநானூறும் புறநானூறும் தொல்காப்பியமும் சொல்லும் தமிழர் வாழ்வு இது.

சிங்கம் ஒரு குடியின் அடையாளம். புலி ஒரு குடியின் அடையாளம். சிங்கம் தற்காலிகமாக வென்றாலும் புலி நிரந்தரமாக வெல்லும் என்பதெல்லாம் சமகால அரசியல். ஆரிய திராவிட முரண்பாடு, வடவர் தென்னவர் முரண்பாடு என இந்திய வரலாறும் அன்மைய திராவிட அரசியலும் அறிந்தவர்க்கு இதன் தமிழ்நிலப் பொருத்தப்பாடு அந்நியமானது அல்ல என அறிய முடியும்.

ஈழ நினைவுகளை இப்படம் எழுப்பும். சிங்கம், புலி எனும் எதிர்மை. நீர்நிலை அருகில் நடந்த போரில் மறைந்த தலைவன் என தமிழகத் தமிழ் தேசிய உணர்ச்சி அரசியலின் நீட்சியாகவும் இப்படம் கொண்டாடப்பட முடியும். ஆனால், இந்தத் திரைப்படம் ஏற்படுத்தும் அனுபவமும் கள்வெறியும் காமமும் இயற்கைத் தோய்வும் கூட்டு வாழ்வின் மேன்மைகளும் அங்கு முடிந்துவிடுவதில்லை. திரைப்படச் சட்டகத்தில் மட்டுல்ல நடன அசைவுகளிலும் வெளி குறித்த பிரக்ஞை என்பது மிகமிக முக்கியமானது. சொல், வெளி, இசை அதிர்வு, உடலின் லயம் என அனைத்தையும் அற்புதமாகப் பன்படுத்திய மிகச் சில உலகத் திரைப்படங்களில் ஒன்றாக என்னால் பாலையை அனுபவிக்க முடிகிறது.

லார்ஸ் வான் ட்ரையரின் டாக்வில், அகிரா குரசோவாவின்யொஜிம்பா அதனோடு செந்தமிழனின் பாலை என மூன்று திரைப்படங்களையும் என்னால் ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கிக் கொள்ள முடிகிறது. இசையினாலும் உடல்களினதும் சொல்லினதும் ஒத்திசைவினாலும் திரை அனுபவமாகவும் திரைப்படம் செந்தமிழனின் பாலைபாலையை ரசிப்பதற்கு முதல் நிபந்தனையாக நிலவும் தமிழ் சினிமாவின் அனைத்து ரசனை சார்ந்த மனோநிலைகளையும் அது உருவாக்கும் யதார்த்தத்தையும் நாம் இழந்துவிட வேண்டும்.

No comments:

Post a Comment