இராணுவத்தினராலும், பொலிஸாரினாலும் மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழக மாணவர்களை, புலனாய்வாளர்கள் மிரட்டி வைத்தியசாலையிலிருந்து வெளியேற்றியுள்ளதாக “உதயனுக்கு’ தகவல்கள் கிடைத்துள்ளன.
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் நடத்திய அமைதியான போராட்டத்தை இராணுவத்தினரும், பொலிஸாரும் இணைந்து அடிதடி நடத்திக் கலைத்தனர். இதன்போது மாணவர்கள், மாணவிகள் பலர் இராணுவத்தினரால் கலைத்துக்கலைத்து மூர்க்கத்தனமாகத் தாக்கப்பட்டனர்.
இதில் கடும் காயங்களுக்கு உள்ளான மாணவ, மாணவியர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். நேற்றுமுன்தினம் மாலையே இவர்கள் வைத்தியசாலையின் 24 இலக்க ஆம் விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தனர்.
மாணவர்கள் விடுதியில் சேர்க்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த மூன்றுபேர் தம்மைப் புலனாய்வுப் பிரிவினர் என்று அறிமுகம் செய்து கொண்டு சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட மாணவர்களை மிரட்டியதாகத் தெரிவிக்கப்படுகிறது.
“நீங்கள் பொலிஸ் வந்து கேட்டால் எங்களுக்கு எதிராகத்தான் றிப்போர்ட் கொடுப்பீர்கள். அப்படிக் கொடுத்தால் நீங்கள் வெளியே நடமாட முடியும்; கவனம்.’ என்று கூறி மிரட்டிய புலனாய்வாளர்கள் தொடர்ந்தும் மாணவர்களுடனேயே நின்றுள்ளனர்.
மாணவர்கள் வைத்திய பரிசோதனை முடிந்த பின்னர், பொலிஸாரிடம் பதிவு செய்வதற்காகக் காத்திருந்தனர். பொலிஸாரும் இரவு 8 மணிக்கு வருவதாக முதலில் தெரிவித்துவிட்டு பின்னர் நீண்ட நேரமாகியும் அவர்கள் வரவில்லை.
வாக்குமூலம் புலனாய்வுப் பிரிவினர் தொடர்ந்தும் மாணவர்களை மிரட்டியதால், மாணவர்கள் வைத்தியசாலைக்குத் தெரிவிக்காமல் இரவு 10:30 மணியளவில் வைத்தியசாலையை விட்டு வெளியேறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
இந்த விடயம் தொடர்பாக யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளருடன் பலமுறை தொடர்புகொள்ள முயற்சித்த போதும் அது பலனளிக்கவில்லை.
No comments:
Post a Comment