
தமிழீழ விடுதலைக்காக வித்தாகிப்போன வீர மறவர்களை நினைவுகூரும் மாவீரர் தினமான இன்று பல்கலைக்கழக மாணவர்கள் ஈகச் சுடரேற்றி மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தினர். இவ்வேளையில் அதனைத் தடுக்கும் வகையில் படையினர் பல்கலைக்கழக சூழலில் வெறியாட்டம் நடாத்தியுள்ளனர்.
எத்தடை வரினும் எம்மவர் நினைவுகளை அழித்து விட முடியாது என்று மாவீரர் வார ஆரம்பத்திலிருந்தே மிகவும் முனைப்புடன் எழுச்சி நிகழ்வுகளை யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் நடாத்தி வந்தனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் பிறந்த தினத்தையொட்டியும், துண்டுப்பிரசுரங்களையும் வெளியிட்டிருந்தனர். இன்று காலையும் பல்கலைக்கழக வளாகத்தினுள் உள்ள மாவீரர் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
காலை முதல் இச் செய்தி பதிவேற்றம் செய்யும் வரை இராணுவத்தினரும், பொலீஸாருமாகப் பெருமளவு படையினர் பல்கலைக்கழகச் சூழலில் குவிக்கப்பட்டிருந்ததுடன், சிவில் உடை தரித்த புலனாய்வாளர்கள் பல்கலைக்கழகத்தினுள் பிஸ்டலுடன் சுதந்திரமாக நடமாடித்திரிந்ததையும் காணக் கூடியதாக இருந்தது.
மாலை 06.05 மணிக்கு சுடரேற்றுவதற்கான ஒழுங்குகளுடன் பல்கலைக்கழகத்தின் பாலசிங்கம் விடுதி, ஆனந்தக்குமாரசுவாமி விடுதி ஆகியவற்றில் மாணவர்கள் ஆயத்தங்களைச் செய்த வேளையில் அதிரடியாக ஆயுதங்களுடனும் கொட்டன் தடிகளுடனும் ஆண்கள் விடுதியினுள் புகுந்த இராணுவத்தினர் கையில் அகப்பட்டோர் மீது கண்மூடித்தனமகத் தாக்கத் தொடங்கினர். இவ்வேளையில் மாணவர்களிடமிருந்து வந்த தொலைபேசி மூலம் தகவலறிந்து உதயன் ஆசிரியர் மற்றும் உதயனின் நிர்வாக இயக்குநரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினருமாகிய ஈ.சரவணபவன் மற்றும் ஊடகவியலாளர்கள் பாலசிங்கம் விடுதிக்கு விரைந்தனர்.
பாலசிங்கம் விடுதியில் பெரும் அமளி துமளி இடம்பெற்றுக்கெண்டிருக்க ஆனந்தக்குமாரசுவாமி விடுதியில் குறிப்பிட்ட நேரத்துக்குச் சுடரேற்றப்பட்டது. காரிருளில் சுடர்கள் ஜெகஜோதியாய் ஒளிர்வதைக்கண்ட படைகள் தாங்க முடியாத கோபத்துடன் ஆனந்தக்குமராசுவாமி விடுதி நோக்கிப் பாய்ந்தனர்.
பெண்கள் விடுதியினுள் நுழைந்த படையினர் கையில் அகப்பட்டதையெல்லாம் அடித்து உடைத்துள்ளனர். மாணவிகளின் மூடிய அறைகள் தட்டப்பட்டுள்ளன. திறந்திருந்த அறைகளுக்கெல்லாம் அத்துமீறி நுழைந்துள்ளனர். அச்சமுற்ற பிள்ளைகள் கூக்குரலிட்டு ஓலமிட்டுள்ளனர். விடுதியெங்கும் பதற்றமாக இருக்கும் அதே வேளை மாணவிகள் அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். பல மாணவிகள் நீண்ட நேரமாக அழுகையை நிறுத்தாமல் அழுத வண்ணமிருப்பதாகவும், அதிர்சியுற்ற மாணவி ஒருவர் இதுவரை மயக்கத்திலிருந்து மீளவில்லை என்றும் எமது செய்தியாளர் தெரிவித்திருக்கிறார்.



.jpg)


இவ்வேளையில் தனது கமெராவில் படமெடுத்துக்கொண்டிருந்த உதயன் ஆசிரியரை இராணுவப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரி ஒருவர் கடுமையாகத் தாக்கியிருக்கின்றார். அவரிடமிருந்த கமெராவைப் பறிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும், அவர்களது முயற்சி கை கூடவில்லை. முகத்தைக் கறுப்புத் துணியினால் கட்டியபடி வந்த இருவர் ஊடகவியலாளரைத் தாக்கி விட்டுக் கமெராவை பறித்துக்கொண்டு ஓட முற்பட்ட போதும் முயற்சி பலனளிக்க வில்லை. ஆத்திரமடைந்த புலனாய்வாளர்கள் நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி கற்களால் தாக்கினர். நாடாளுமன்ற உறுப்பினரின் பாதுகாப்புப் பிரிவினரும் ஏனையவர்களுமாக அவரைச் சூழ்ந்து கொண்டு பாதுகாப்பாக வாகனத்துக்குள் கூட்டிவந்தனர்.
பல்கலைக்கழகத்தினுள் படையினர் பிரசன்னம் காரணமாக மாணவர்கள் தாக்கப்பட்ட வேளையில் பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பாராய் முகமாய் இருந்ததைக் காணக்கூடியதாக இருந்தது
No comments:
Post a Comment