யாழ்ப்பாணத்தில் கடந்த பல வாரங்களில் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட 45 பேர் பூசா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரிஷாந்த ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட அனைவரும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் என்றும், நீண்டகாலமாக சேகரித்து வந்த புலனாய்வுத் தகவல்களின்படியே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இராணுவத்திடம் சரணடையாமல் மறைந்து வாழ்ந்த இவர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் நடத்தப்படும் என்றும், அதன் பின்னர் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், புலனாய்வுப் பிரிவினரின் தகவல்களின் படி இன்னும் கைது செய்யப்பட வேண்டியவர்கள் வடபகுதியில் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, இதுவரை கைதுசெய்யப்பட்டுள்ள 45 பேர் தொடர்பில் அவர்களின் உறவினர்கள் தம்மிடம் முறைப்பாடு செய்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும் 19 வயதான பாடசாலை மாணவர் ஒருவரும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் அனைவரும் போருக்கு முன்னர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வாழ்ந்தவர்கள் என்றும், போர் முடிந்த பின்னர் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணத்தில் 2010ம்- ஆண்டளவில் மீளக்குடியேறியவர்கள் என்றும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது
No comments:
Post a Comment