பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டு சிறைகளுக்கு ஆனுப்பி வைக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கைச் சிறைகளில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய குடியரிமையுடைய சிறைக் கைதிகளை அந்நாட்டு சிறைச் சாலைகளுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீமிடம், சுரேஸ் பிரேமசந்திரன் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். சில காலங்களுக்கு முன்னதாக பயங்கரவாதத் தடைச் சட்டம் மற்றும் அவசரகாலச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட பிரித்தானிய குடியுரிமையுடைய தமிழ் கைதிகளின் சார்பில் அவர் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
1995ம் ஆண்டு பிரித்தானியாவுடன் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரித்தானிய குடியுரிமையுடைய கைதிகளை அந்நாட்டுக்கு பரிமாற்றம் செய்ய முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புகளைப் பேணி குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் குறித்த பிரித்தானிய பிரஜைகளுக்கு தண்டனை மற்றும் தடுப்புக் காவல் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இந்த விவகாரம் குறித்து பிரித்தானிய வெளிவிவகார அமைச்சு கோரிக்கை விடுத்தால் அது குறித்து கவனம் செலுத்த முடியும் என நீதி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
இலங்கை சிறைச்சாலைகளின் நிலைமைகள் திருப்தி அடையக் கூடிய வகையில் இல்லை என தடுத்து வைக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரஜைகளின் பெற்றோர் குறிப்பிட்டுள்ளனர்.
No comments:
Post a Comment