சீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி?
சீமான், வைகோ, நெடுமாறன்... இன்னும் பலரின் உயிருக்கு குறி? உள்ளே வந்த உளவாளிகள்...! தமிழ்நாட்டில் கொழும்பு திகில்!!!
விகடன் ]
''ஈழத்தில் தமிழினத்தை வேரறுத்த சிங்கள அரசு, வெளிநாடுகளில் இருந்து ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுப்பவர்களை அச்சுறுத்த நினைக்கிறது. உள விலும் அச்சுறுத்தும் சம்பவங்களிலும் கைதேர்ந்த சிலரை இந்த அசைன்மென்ட்டுக்காக தமிழகத்துக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
ஈழப் போராட்டங்களுக்கும் புலிகள் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருக்கும் முக்கியத் தலைவர்கள் சிலர்தான் இந்த உளவு மனிதர்களின் குறி'' என்று அதிரவைக்கும் தகவலைச் சொன்னார் இலங்கையைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர்.
ஈழத்துடன் தொடர்பில் இருக்கும் உணர்வாளர்கள் சிலரிடம் விசாரித்தபோது, ''இலங்கையில் நடந்த நான்காம் கட்ட ஈழப் போருக்குப் பிறகு, புலிகளின் செயல்பாடு அங்கே முற்றிலும் தடுக்கப்பட்டுவிட்டது. ஈழத்தைச் சிதைத்து விட்ட இலங்கை அரசாங்கத்துக்கு, வெளிநாடு வாழ் தமிழர்கள்தான் சிம்ம சொப்பனமாக இருக்கிறார்கள். ராஜபக்ஷ அரசாங்கத்தின் கோர முகத்தை சர்வதேச அரங்கில் தோலுரித்துக் காட்டுவதும், ஈழத்துக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்துவருவதும் வெளி நாடுகளில் வசிக்கும் தமிழர்கள்தான்.
அவர்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் கட்டுப்படுத்தாமல் விட்டால், அது இலங்கைக்கு மிகப்பெரிய ஆபத்தாக முடியும் என்பது ராஜபக்ஷவின் எண்ணம். இதற்காக, இலங்கை ராணுவத்தின் உளவுப்பிரிவான ஆழ ஊடுருவும் அணியிடம் இந்த வேலையை ஒப்படைத்து இருக்கிறார்கள்.
நான்காவது கட்ட ஈழப் போரை இலங் கைக்கு சாதகமாக மாற்றியதில், ஆழ ஊடுருவும் அணியின் பங்கு மிகப்பெரியது. எதிரிகளின் அரண்களுக்குள் நுழைந்து உளவுபார்க்கும் இந்தப் பிரிவு, வாய்ப்புக் கிடைக்கும் நேரத்தில் அங்கு அழித் தொழிப்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும். 2001-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த உளவுப் பிரிவு, அப்போது விடுதலைப் புலிகளின் முக்கியத் தளபதியாக விளங்கிய கேணல் சங்கரைப் படுகொலை செய்தது. இப்போது கடைசியாக பிரான்ஸ் நாட்டில் அத்துமீறி நுழைந்து, விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுக்கான அரசியல் மற்றும் நிதி சேகரிப்புப் பொறுப்பாளராக இருந்த கேணல் பரிதியைப் படுகொலை செய்து இருக்கிறது.
ஆழ ஊடுருவும் பிரிவுக்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் இலங்கை அரசாங்கம் மிகக் கவனமாக இருந்தது. சிங்களர்கள் யாரையும் இந்த அணியில் சேர்க்கவில்லை. மாறாக, நன்றாகத் தமிழ் பேசத் தெரிந்த மலையகத் தமிழர்களையும், புலிகளுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்ட ஒரு சில தமிழர்களையும் மட்டுமே பயன்படுத்தியது. இந்த உளவுப்பிரிவுதான் தமிழகத்துக்கு வந்துள்ளது. தமிழகத்தில் இருந்து இலங்கை அரசுக்குத் தொடர்ந்து எதிர்ப்பைப் பதிவுசெய்துவரும் பழ.நெடுமாறன், வைகோ, கொளத்தூர் மணி, சீமான், வேல்முருகன் போன்றவர்களை ஒடுக்க நினைக்கிறது. அதற்காகத்தான் இந்த ஆபரேஷனைத் தொடங்கி இருக்கிறது. இவர்களின் உயிர்களுக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம்'' என்கிறார்கள்.
''தமிழகத்தில் இந்தப் பிரச்னையை அணையாத விவகாரமாக இவர்கள் ஆக்கி வைத்துள்ளனர். இது, தமிழ் மக்கள் மத்தியில் முக்கியமான விஷயமாக மாறுவது பற்றி எங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை. ஆனால், அது இந்திய அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தீர்மானிப்பதற்குத் தடையாக இருக்கிறது. இவர்கள் மட்டும் ஆர்ப்பாட்டங்கள், போராட் டங்கள் நடத்தாமல் இருந்தால், ஐக்கிய நாடுகள் அவையில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை இந்தியா எடுத்து இருக்காது. இது பல் வேறு அழுத்தங்களுக்குக் காரணமாக அமைந்துவிட் டது. எனவே, தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் ஒரு கூட்டம் நடக்கிறது என்று கவலைப்படாமல் இருக்க முடியாது. இவை அனைத்தும் உலக நாடுகளின் முடிவை மாற்றுவதாக அமைந்துள்ளன'' என்ற ரீதியில் இலங்கை நினைப்பதாகச் சொல்கிறார்கள். இத்தகைய ஈழ ஆதரவுத் தலைவர்களில் யாராவது ஒருவரை அச்சுறுத்தினால் அடுத்து யாரும் இந்தப் பிரச்னை குறித்துப் பேச மாட்டார்கள் அல்லது செயல்பாடுகளைக் குறைத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறார்களாம்.
ஈழத் தமிழர்கள் போர்வையில் இதுபோன்ற உளவாளிகள் இருப்பது சமீபத்தில்தான் தெரிந்தது. 'எனவே இதுபோல வருபவர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள்’ என்று ஈழ ஆதரவுத் தலைவர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து ரகசியத் தகவல்கள் வந்துள்ளன.
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''நீங்கள் சொல்வது உண்மைதான். மிகவும் நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து எனக்கும் இந்தத் தகவல் வந்தது. அஹமது, பண்டாரா, ரோகித் என்ற மூவர் தலைமையில் உளவுப்படைத் தமிழகத்துக்குள் நுழைந்து இருக் கிறது. என்னையும் என்னைப்போன்ற செயல்பாடுகளை உடைய தலைவர்களையும் இந்தப் படை கண்காணிக்கிறதாம்.
கடந்த சில நாட்களுக்கு முன், பல்லாவரத்தில் உள்ள எனது அலுவலகத்தையும் மாடம்பாக்கத்தில் உள்ள வீட்டையும் ஒருவர் புகைப்படம் எடுத்து இருக்கிறார். மற்ற தலைவர்களின் அலுவலகங்களும் வீடுகளும் நோட்டமிடப்பட்டு இருக்கிறது. சிங்கள உளவுப் படையின் இந்தத் தீய நடவடிக்கைகள் இங்குள்ள காவல் துறைக்கும் உளவுத் துறைக்கும் தெரியாமல் இருக்க வாய்ப்பு இல்லை. இதுபோன்ற சதி வேலைகளால், எங்களது பணியையும் புலிகளுக்கு ஆதரவான எங்களது குரலையும் முடக்கிவிட முடியாது. நாங்கள் மக்களை நம்பிப் பணியாற்றிக்கொண்டு இருப்பதால், இதற்கு எல்லாம் அஞ்சி ஒதுங்கி விட மாட்டோம்'' என்றார் தெம்போடு.
சிங்கள உளவுப்படை தமிழகத்தில் ஊடுருவி இருப்பது உங்களுக்குத் தெரியாதா? என்று மத்திய உளவுப்பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''அப்படி இருக்க வாய்ப்பே இல்லையே'' என்று மறுத் தவர், ''இலங்கைத் தமிழர்கள் என்று யார் இங்கே வந்தாலும், அவர்களைத் தீவிர விசாரணைக்கு உட்படுத்திய பிறகே அனுமதிக்கிறோம். அவர்களைத் தொடர்ந்து எங்களது கண்காணிப்பிலேயே வைத்து இருக்கிறோம். நாங்கள் அப்படிக் கண் காணிக்கும் போதும் எங்களுக்கு எதிர்ப்புதான் கிளம்புகிறது. இலங்கை அகதிகள் என்ற பெயரில் வேண்டுமானால், நீங்கள் சொல்வதுபோல சிலர் சதித் திட்டத்துடன் உள்ளே வந்து இருக்கலாம். இந்த விஷயத்தில் கூடுதல் அக்கறை காட்டப்படும்'' என்றார்.
தமிழகத்தில் இருக்கும் தலைவர்களைக் காப்பாற்றும் பொறுப்பு தமிழக அரசுக்குத்தான் இருக்கிறது!
ReplyDeleteThank you for all the info and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.News in tamil
தமிழ் செய்திகளை தெரிந்துக்கொள்ள தொடர்ந்து இணைந்திருங்கள்.Tamil News
ReplyDelete