Translate

Wednesday, 25 May 2011

ஈழம்.. கொடூரமும் கொலையும்! -அம்பலமாக்கும் ஐ.நா. அறிக்கை - திடீர் தொடர் 06

 றுதிக் கட்டப் போரில், திசை தெரியாமல் தவித்த அபலைப் பெண்களை எள்ளி நகையாடிய சிங்கள வீரர்கள், அவர்களை இழுத்துச் சென்று துப்பாக்கி முனையில் பலாத்காரம் செய்தனர். 'தம் சமூகத்துக்கு உரிய பண்பாடு மற்றும் அச்சம் காரணமாக, இந்தக் கொடூரங்கள் தங்கள் குடும்பத்தினருக்குக்கூட தெரிந்துவிடக் கூடாது!’ என்று மனதுக்குள் புழுங்கித் தவித்தனர் பெண்கள். 



சிங்கள ராணுவத்தினருக்கு இது சாதகமாகிவிட... பெற்றோரைப் பிரிந்து தனியாக முகாம்களில் சிக்கிய சிறுமிகளை, கைம்பெண்களை, அநாதைப் பெண்களைக் குறிவைத்து, நாக்கில் எச்சில் வழியத் தேடி அலைந்தனர். எதிர்ப்பு தெரிவித்த பெண்களை, 'புலிகளின் ஆதரவாளர்’ என முத்திரை குத்தி, பொதுமக்கள் முன்னிலையில் அடித்துத் துவைத்தனர். அப்படி கொண்டுசெல்லப்பட்ட பல பெண்களும், சிறுமிகளும் திரும்பி வரவே இல்லை.


முகாம்களில், உணவுத் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்தது. அதைப் போக்க, அரசு நிர்வாகம் கொஞ்சம்கூட அக்கறை காட்டவில்லை. 'ஒட்டிய வயிற்றுடன் பசி தாங்காமல் கதறிய குழந்தைகளுக்கு ஏதாவது உணவுப் பொருள் கிடைத்துவிடாதா?’ என்று ராணுவத்தினரிடம் தாய்மார்கள் கையேந்தும் நிலைமை தொடர்ந்தது. மனம் பொறுக்காமல், உணவுக்காக பால் பவுடர் கேட்டுக் கதறும் பெண்களிடம், சிங்களச் சிப்பாய்கள் மானத்தை விலை பேசினர்.
அதே சமயம், 'இந்தக் கொடூரங்களால் அச்சப்பட்ட மக்கள், தங்களது கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதியில் இருந்து வெளியேறினால், எல்லாம் வெளி உலகத்துக்கு தெரிந்துவிடுமே?’ என்கிற கவலையும் ராணுவத்துக்கு இருந்தது. அதனால், மக்களை வெளியேறவிடாமல் தடுத்தனர். அந்த இடங்களைச் சுற்றிலும் முள் வேலிகள் அமைக்கப்பட்டன.

காடுகளின் நடுவில் தார்ப்பாய் மூலமாக அமைக்கப்பட்ட குடில்கள்... சுட்டெரிக்கும் வெயில்... தகிக்கும் அனல்... தாகம்... கொடும் பசி என இந்தச் சூழலில் குடிலுக்குள் முடங்கிக்கிடந்தவர்கள் பலர், தொற்று நோய்களால் மாண்டனர். உடல் உபாதையைத் தணிக்க வெளியே செல்லும்போதும், குளிக்கும்போதும், உடைகளை மாற்றும்போதும், பக்கத்​திலேயே பல்லை இளித்தபடி வஞ்சகத்​தோடு நின்றது சிங்களப் படை.

தட்டிக் கேட்க யாரும் இல்லை என்கிற தைரியத்தில் ஈழப் பெண்களைச் சிதைத்தனர். முகாம்களில் ராணுவத்​துக்கு ஆதரவாக நடந்துகொள்ளும் முகம் அறியா நபர்களோ, ஏஜென்ட்டுகள்போல செயல்பட்டதால், அவர்கள் சிறு சிறு உதவிகளை செய்து கொடுத்துவிட்டு, அதற்குப் பிரதிபலனாக பாலியல் தொல்லைகளில் ஈடுபட்டனர்.

இதுபோன்ற வன்கொடுமைகள் பெண்களின் மனதில் ஆறாத வடுவை ஏற்படுத்த, 'இந்த வேதனைகளை சகிப்பதற்குப் பதிலாக, ராணுவம் வீசிய கொத்துக் குண்டு​களுக்கும், பாஸ்பரஸ் குண்டுகளுக்கும் இரையாகி மடிந்து இருக்கலாமே’ என்ற ஆற்றாமையில் தவித்தனர். மன அழுத்தத்துக்கு உள்ளான பெண்கள், சிறுமிகள் பலர் தற்கொலை மூலம் தங்களின் இறுதி முடிவை வலிந்து தேடிக்கொண்டனர். அவர்களின் உடல்களை காடுகளுக்குள் வீசி எறிந்தது ராணுவம்.

முள் வேலிகளைக் கடந்து தப்பிச் செல்ல முயன்றதில் பிடிபட்டவர்கள், தீவிர விசாரணை என்ற பெயரில் வதை முகாம்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். செஞ்சிலுவை சங்கத்தினரும், தொண்டு நிறுவனத்தினரும் கடுமையான நிபந்தனைகளுக்குப் பின்னரே, வதை முகாம்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் மக்களிடம் பேசுவதற்கும், அனுபவங்கள்பற்றி விசாரிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. இவற்றை ராணுவத்தினர் தீவிரமாகக் கண்காணித்தனர்.

இதை எல்லாம் மீறி முகாம்​களின் கொடுமையான நிகழ்வுகள் ஊடகங்களில் வெளிவந்தன. குறிப்பாக, சர்வதேச ஊடகங்கள் இந்த விவகாரங்களில் அதிக அக்கறை எடுத்துச் செயல்பட்டன. இது ராணுவத்துக்கு எட்டிக்காயாக இருந்தது. ஆகவே, அவர்கள் தங்கள் ஆத்திரத்தை மக்களிடமே சுமத்தினர். தமிழர்கள் யாராவது, தொண்டு அமைப்பினருடன் பேசிக்கொண்டு இருந்ததைக் கண்டுபிடித்தால், 'புலிகளுக்கு உதவியவர்கள்’ என்று குற்றம் சாட்டப்பட்டு, உடனடியாக அவர்களை வதை முகாமுக்கு அனுப்பினர். இதனால், முகாம்களில் இருந்தவர்கள்கூட, ஒருவருக்கு ஒருவர் பேசுவதற்கு அஞ்சி நடுங்கினர்.

அத்துடன், முகாம்களில் லஞ்ச ஊழல் தலை விரித்து ஆடியது. ஒவ்வொருவரும் தங்களிடம் இருக்கும் சொற்பப் பணத்தையும் ராணுவத்தினரிடம் கொடுத்து​விட்டு சலுகைகளை எதிர்நோக்கினர். முள் வேலியைச் சுற்றி இரவும் பகலும் ராணுவத்தினர் காவல் காத்து நின்றபோதிலும், லஞ்சம் கொடுத்துவிட்டு சிலர் முகாம்​களில் இருந்து தப்பித்தனர்.
செய்திகள் கசிவதற்கான அனைத்து வழிகளையும் ராணுவம் அடைத்த பிறகும்கூட, வெளி உலகுக்குத் தகவல்கள் போய்க்கொண்டே இருந்தன. இதற்கு சர்வதேச உதவி அமைப்புகள் காரணமாக இருப்பதாக நம்பியதால், கோபம் அடைந்த ராணுவம், முகாம்களில் பணியாற்றிய செஞ்சிலுவைச் சங்கத்தினரை வெளி​யேற்றுவதில் குறியாக இருந்தது. இதைத் தவிர, தவறுகளைச் சரிப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

போரினால் பாதிக்கப்பட்ட இலங்கையைப் புனரமைப்பு செய்யும் பணிக்காகப் பல்வேறு நாடுகள் நிதி உதவி செய்தன. 'இலங்கை அரசு, முகாம்களின் நிலை​மையை மாற்றாவிட்டால், நிதி உதவியை நிறுத்துவோம்’ என அவை எச்சரித்தன. அதன் பிறகு, கண்துடைப்பு நடவடிக்கையாக முள் வேலி முகாம்களில் சீரமைப்புப் பணிகளை மேற்கொண்டது, ராணுவம்.


அப்பாவி மக்கள் மீது குண்டு மழை பொழிந்து கொன்று ஒழித்தது, மருத்துவமனைகள் மற்றும் உதவி மையங்கள் மீது திட்டமிட்டுத் தாக்குதல் நடத்தியது, போரின்போது பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு அத்தியாவசிய உதவிப் பொருட்கள் கிடைக்க​விடாமல் தடுத்தது என மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதன் மூலம், இலங்கை ராணுவம் சட்டத்துக்கு புறம்பாகச் செயல்பட்டு இருக்​கிறது. சர்வதேச விதிமுறைகளை ராணுவம் காற்றில் பறக்கவிட்டது எப்படி?

- துயரங்கள் தொடரும்...           நன்றி   ஜூனியர் விகடன்
தமிழன் குரல் - தமிழகத்திலிருந்து

No comments:

Post a Comment