சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் விரல்களால் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் கண்களையே குத்திக் குருடாக்கிய பல சம்பவங்கள் நடந்தேறியுள்ளன. பயங்கரவாதச் தடைச் சட்டத்தைத் தயாரித்த ஜே.ஆர். ஜயவர்தன தமிழ் புத்திஜீவிகளை கொண்டு அங்கீகரிக்க வைத்து தமிழ் அரசியல் தலைமைகளின் ஆசீர்வாதத்துடன் நாடாளுமன்றத்தில் அரங்கேற்றி வெற்றி கண்டார்.
மண்ணுக்குள் தலையைப் புதைத்துக் கொண்டது போன்று பாவனை காட்டி தமது அரசியல் நலன்களுக்காக பேசாமடந்தயாய் இருந்த தமிழ்த் தலைமைத்துவங்களால் தமிழினம் பட்ட இன்னல்கள் பல.
தமிழ்த் தேசிய போராட்டத்தையே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் மூலம் பயங்கரவாத முத்திரை குத்தி அடக்கி ஒடுக்க தமிழ்த் தலைமைத்துவங்களே காரணமாக இருந்துள்ளன.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கோர முகத்தை ஆரம்பத்திலேயே இனங்கண்ட சட்டத்தரணி சி.வி. விவேகானந்தனின் சொற்கள் அவ்வேளையில் தமிழ்த் தலைமைத்துவங்களின் சட்டமேதை முறைக்கு ஏறவில்லை.
இதற்கு அவர்கள் கூறிய காரணம் ஜே.ஆர். நிறைய செய்வதாக வாக்குறுதியளித்துள்ளõர் என்பதேயாகும். இறுதியில் ஜே.ஆரிடம் தமிழ்த் தலைமைகள் பெற்ற வாக்குறுதிகள் தமிழ் மக்களுக்கு துணையாக வரவில்லை·பயங்கரவாதத் தடைச்சட்டம் என்ற போர்வையிலான இயமனே உருவெடுத்து வந்தான்.
இறுதியில் இந்தக் கோர முகத்தைக் கண்ட தமிழ் தலைமைத்துவங்கள் ஜே.ஆர். ஏமாற்றிவிட்டார் என்று தமக்குள்ளே கூப்பாடு போட்டதைத் தவிர வேறொன்றும் நடைபெறவில்லை.
இதுபோன்று பல சம்பவங்களை சிங்களத் தலைமைகள் தமிழ்த் தலைமைகளின் துணையுடன் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளன. இதனை இரண்டு வருடங்களுக்கு முன் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் போர்வரை நாம் பார்க்கலாம்.
இந்தப் பாடத்தை தமிழ்த் தலைமைகள் திரும்பத் திரும்ப சிங்களத் தøமைகளிடமிருந்து கற்றுக் கொண்டிருக்கின்றனரே ஒழிய திருந்தியதாக வரலாறு இல்லை. முள்ளிவாய்க்கால் போருடன் ஆயிரமாயிரம் தமிழ் மக்களுடன் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் அரசியற் அபிலாஷைகளையும் குழி தோண்டிப் புதைத்து விட்டதாகத் தென்னிலங்கை ஏகாளமிட்டுக் கொண்டிருக்கிறது.
அது குறித்த கொண்டாட்டங்களும் நல்லிணக்கத்தை மென்மேலும் கூறுபோடும் வகையில் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. ஆனால் சர்வதேச சமூகம் முள்ளிவாய்க்காலுடன் தமிழ் மக்களின் அபிலாஷைகள் குழிதோண்டிப் புதைக்கப்படவில்லை என்று உரத்து குரல் எழுப்புகின்றது. முள்ளிவாய்க்காலில் உயிர் துறந்தும், அபிலாசைகளை உலகத்தின் மனசாட்சிக்கு முன் விட்டுச் சென்றுள்ள அந்த ஆத்மாக்களின் பெயரில் சர்வதேச சமூகம் இந்தக் குரலை எழுப்பிக் கொண்டிருக்கிறது.
இவ்வேளையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத் தரப்புடன் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷை குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளது.பேச்சுவார்த்தை எவ்வித இலக்குமின்றி முன்னேற்றமுமின்றி நடைபெறுவதாக கூறும் கூட்டமைப்பினர் சளைக்கõது அரசாங்கத் தரப்புடன் பேச்சுவார்த்தைக்கு செல்கின்றனர். பேச்சுவார்த்தை நடத்தும்வரை இந்தியா கூட்டமைப்புக்குத் தொடர்ச்சியாக ஆலோசனை வழங்குவதாகத் தெரிகிறது. இந்தியாவை நம்பும் கூட்டமைப்பு சீனாவிடமிருந்து வந்த அழைப்பைக் கூட நிராகரித்து விட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா மறுபுறம் ஐ.நா. நிபுணர் குழுவின் அறிக்கையால் எழுந்துள்ள சர்வதேச நெருக்கடிகளையும் அழுத்தங்களையும் குறைப்பதற்கு முதலில் உள்வீட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று இலங்கைக்கு ஆலோசனையும் வழங்கியுள்ளது.
வெறுங்கையுடனும் வெற்று மனதுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் இலங்கைத் தரப்பு எல்லாமே நன்றாகவே நடக்கின்றது. விரைவில் தீர்வு காண்போம் என கிருஷ்ண பகவான் போன்று வசனங்களை செய்தியாக்கி கூறுகின்றது. இலங்கையின் வார்த்தைகள்வெற்று வார்த்தைகள் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும். அதேபோல் இந்தியாவின் இலங்கைக்கான உபதேசமும் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கின்றதோ இல்லையோ, இலங்கைக்கு நிச்சயமாக கடந்த காலங்களைப் போன்று கை கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.
விரைவில் மனித உரிமைக் குழுவில் இலங்கையின் போர்ப் குற்ற விவகாரங்கள் பேசப்படவுள்ளன. தற்போது இந்தியா இலங்கைக்கு வழங்கியுள்ள உபதேசத்தைக் காட்டி மனித உரிமைக் குழுவில் இலங்கைக்கு அவகாசம் வழங்குமாறு இந்தியா கேட்கக்கூடும்.
இந்த வகையில் இந்தியா தமிழ் மக்களுக்கல்ல, தனது ஆப்த நண்பனான இலங்கையைக் காப்பாற்றுவதாகவே இது அமையும். இலங்கைக்கும் இந்தியாவுக்கும் துரும்புச் சீட்டாக அமையப் போவது கூட்டமைப்பினரே.
எனவே கூட்டமைப்பினருடனான பேச்சுவார்த்தையை இலங்கை இப்போதைக்கு கைவிடாது. பேச்சுவார்த்தையில் பயனில்லை என்று கூறுகின்ற கூட்டமைப்பினரை இந்தியா பேச்சுவார்த்தை மேசையிலிருந்து எழும்பவும் அனுமதிக்கப் போவதில்லை.
மொத்தத்தில் இரு சாத்தான்கள் ஓதுகின்ற வேதத்துக்கு கூட்டமைப்பு மயங்கி மீண்டும் தமிழ் மக்கள் தனித்து விடப்படுவதற்கே வழிவகுப்பதாக அமையும். உண்மையில் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்தின் தயவிலேயே தமது அரசியல் அபிலாஷைகளை வென்றடுக்கக் கூடியதாக இருக்கும். சர்வதேச நெருக்கு வாரங்கள் தணியுமாக இருந்தால் மீண்டும் தமிழ் மக்கள் நட்டாற்றில் கைவிடப்படுவர்.
வி. தேவராஜ்
eDITOR- Virakesari [sunday edition]
No comments:
Post a Comment