பேரினவாத சிங்கள அரசுகளால், ஈழத் தமிழினத்தின் மீது நிகழ்த்தப்பட்டது இன அழிப்புத்தான் என்கிற வகையில் அமைந்துள்ளது,…
…கசிந்துவரும் ஐ.நா.நிபுணர் குழு சமர்ப்பித்த அறிக்கை. சிறீலங்கா அரசினால், தமக்குச் சார்பான ஊடகங்களினூடாகக் கசிய விடப்பட்ட அறிக்கையின் சில பக்கங்களின் நம்பகத்தன்மை குறித்தும் சிலர் கேள்வி எழுப்புகின்றார்கள்
இந்த அறிக்கையை மகிந்த ராஜபக்ச அரசு, ஊடகங்களினூடாக வெளிப்படுத்தியதன் சூத்திரத்தை இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. இதை வெளியிடுவதனூடாக சிங்கள மக்களை இதற்கெதிராக அணிதிரட்டலாம் என்பதுதான் மகிந்தரின் திட்டம். அரசின் மந்திரி பிரதானிகள், பௌத்த, கத்தோலிக்க மதகுரு தலைவர்கள் இவ்வறிக்கையினைப் பார்வையிட்ட பின்னரே, கண்டன அறிக்கைகளை வெளியிடுகின்றார்கள்.
பந்திக்கு முந்தும் அரசியல் நகர்வொன்றினையே சிங்களம் தற்போது முன்னெடுத்துள்ளது.
கசியவிடப்பட்ட அறிக்கையின் சில பக்கங்கள், சிங்கள மக்களை கிளர்ந்தெழச்செய்யுமென்கிற உத்தி, இங்கு நன்றாகவே பயன்படுத்தப்பட்டுள்ளதென்பதைப் புரிந்துகொள்ள, சிந்தனைமையங்கள் (THINK TANK) தேவையில்லை.
தனியார் போக்குவரத்துத்துறை அமைச்சர் சீ.பி.இரத்நாயக்க தலைமையில், 10 இலட்சம் கையெழுத்துக்களைப் பெறும் வேட்டை ஆரம்பமாகிவிட்டது. நாடு தழுவிய ரீதியில் நடைபெறவுள்ள போராட்டமொன்றின் ஆரம்பப் புள்ளியாக இக்கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகின்றது. பௌத்த சிங்களப் பேரினவாதிகள் மற்றும் கத்தோலிக்க மதத் தலைவர்களோடு, இணைந்து சிவப்பு உடை தரித்த சோசலிசவாதிகளும், நிபுணர் குழுவின் அறிக்கைக்கு எதிராகக் களத்தில் குதித்துள்ளனர்.
இவர்களெல்லோரும் அறிக்கையைப் பார்வையிடாமல் கண்டனங்களை வெளியிடுகின்றார்கள் என்று எண்ணுவது மடமைத்தனமாகும். கத்தோலிக்க மதகுரு மல்கம் ரஞ்சித் ஆண்டகையும், நிபுணர் குழுவின் அறிக்கையைக் காண்பிக்கின்றார். அரசு முன்னெடுத்த மனிதாபிமானப் போரில், மனித உரிமை மீறல்கள் நடைபெறவில்லையென்று அடித்தக் கூறுகின்றார் அஸ்கிரிய பிடாதிபதி உடகம புத்தரகித்த தேரர். இவைதவிர இலங்கையிலுள்ள சோசலிச சித்தாந்திகள் வெளிப்படுத்தும் கருத்துக்கள், தோசை மசாலாவடைக் காலத்தை நினைவூட்டுகின்றது.
பௌத்தத்தை அரச மதமாக முன்மொழிந்து, சிங்கள இறையாண்மையை முதன்மைப்படுத்தும் இலங்கையின் ஜனநாயக சோசலிசக் குடியரசு யாப்பினை வரைந்த, கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வாவின் வழிவந்த, செந்தோழர் வாசுதேவ நாணயக்கார, வெளியிட்ட செய்தி மிகவும் அதிர்ச்சி தரக்கூடியது. ஐ.நா.பொதுச் செயலாளரின் சட்ட விரோதமான நடவடிக்கையை இலகுவில் முறியடித்து விட முடியுமென்று கூறும் தேசிய மொழிகள் மற்றும் சமூக விவகார (விரோத) அமைச்சர், ஐ.நா.சபையின் இந்த நடவடிக்கைக்கு எந்த நாடும் ஆதரவளிக்க முன்வராதென்று நம்புகின்றார்.
இனப் படுகொலையாளனின் அரசவையில் வீற்றிருக்கும், இவரிடமிருந்து வேறெதையும் தமிழ் மக்கள் எதிர்பார்க்க முடியாது. அடுத்ததாக, ஈழத் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக மாவீரர் தின நிகழ்வு மண்டபத்தில் உரத்துக் குரல் கொடுத்த தோழர் விக்கிரமபாகு கருணாரெட்ண அவர்கள் இவ்வறிக்கை குறித்து என்ன கூறுகின்றார் என்று பார்ப்போம்.
உலக வல்லரசுகளின் பொறிக்குள் அகப்பட்டுள்ள சிறீலங்கா அரசு, அமெரிக்கா, இந்தியா, இஸ்ரேல் போன்ற நாடுகளின் ஆலோசனைப் படியே யுத்தம் புரிந்ததால், போர்க் குற்றங்கள் இடம்பெற்றதென்கிறார். ஆனால், எறிகணைகளை, டாங்கிகளை, முப்பரிமாண ராடர்களை அள்ளிக் கொடுத்த சீனாவை இப்பட்டியலில் உள்ளடக்காமல் தவிர்த்த விவகாரம் கவனிக்கப்படவேண்டியது.
மிக் போர் விமானங்களைக் கொடுத்த ரஷ்யாவையோ அல்லது பல்குழல் எறிகணைச் செலுத்திகளைத் தாராளமாக வழங்கிய பாகிஸ்தானையோ, புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரெட்ன வேண்டுமென்றே தவிர்த்துவிட்டார் போ£லிருக்கிறது.
இடதுசாரிச் சிந்தனையாளர் என்கிற வகையில், மேற்குலகையும் இந்தியாவையும் அவர் சாடுவது, ஏகாதிபத்திய எதிர்ப்புக் கோணத்தில், நகர்வுகளை எடைபோடுவது புதிதான விடயமல்ல.
இருப்பினும் 56ம் ஆண்டிலிருந்து வல்லரசுகளின் ஆலோசனையின்படியா பேரினவா அரசுகள் தமிழின அழிப்பினை மேற்கொண்டு வருகிறது. வெறுமனே மேற்குலகின் எதிர்ப்பு என்பதன் மீது கட்டப்படும் சிந்தனை வடிவம், இன அழிப்பினை நியாயப்படுத்த முடியாது என்பதனை சிவப்புச் சித்தாந்திகள் புரிந்கொள்ளவேண்டும். தமிழினப் படுகொலை புரிந்த அரசிற்கு எதிராக சுயாதீன சர்வதேச விசாரணைக் குழுவொன்று அமைக்கப்பட வேண்டுமென்பதை விக்கிரமபாகு ஏற்றுக்கொள்கிறாரா இல்லையா என்பதனைத் தெளிவுபடுத்தினால் நல்லது.
இவைதவிர, பேரினவாதிகளும் ஏகாதிபத்திய எதிர்ப்பு முகமூடிகளை அணியத் தொடங்கியுள்ளனர். இவர்களின் ஏகாதிபத்தியக் கணக்குகள் வேறுவிதமானவை. சீனா, ரஷ்யா போன்ற நாடுகளை ஏகாதிபத்தியங்களாக ஏற்றுக்கொள்வதில்லை இந்த சிங்கள ஆட்சியாளர்கள். அமெரிக்கா, பிரித்தானியா போன்ற நாடுகளுடன் நேரடியான முரண் நிலையைத் தோற்றுவிக்கக்கூடிய வகையிலும், சில அமைச்சர்கள் கருத்துக்கூற ஆரம்பித்துள்ளனர்.
ராஜீவ், பிரேமதாசாவைப் படுகொலை செய்யுமாறு புலிகளைத் தூண்டியவர்கள் இவர்களென, அமெரிக்காவையும் பிரித்தானியாவையும் நேரடியாகச் சாடுகின்றார் ஜாதிக ஹெல உறுமயவின் பொதுச்செயலாளரும், அமைச்சருமான சம்பிக்க ரணவக்க. புலம்பெயர்ந்த நாடுகளில் வாழும் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களிடமிருந்து நிபுணர் குழு கோடிக் கணக்கில் இலஞ்சம் பெற்றுள்ளதாக பிதற்றுகின்றார் மகிந்தரின் இன்னொரு மந்திரியான விமல் வீரவன்ச.
வாய்க்குள் வந்தபடி, சகலரையும் திட்ட ஆரம்பித்துள்ளது சிங்களம். அதேவேளை அறிக்கைக்கு எதிரான முதல் இராஜதந்திர நகர்வொன்றினை, கோத்தபாய இந்த வாரம் ஆரம்
பித்துள்ள விடயம் குறிப்பிடத்தக்கது. சிறீலங்காவிற்கான ரஷ்யத் தூதுவர் விளாடிமிர் மிகேய் லொவ் அவர்களை, தனது பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் சந்தித்து கோத்தபாய, அவரின் ஆதரவினை வேண்டியுள்ளார்.
ஆகவே, சிங்களமானது தனத செயற்பாடுகளை, அறிக்கைக்கு எதிராக முடுக்கிவிட்டுள்ள நிலையில் தமது எதிர்ப்பரசியலை மிகவும் திட்டமிட்ட வகையில் முன்னெடுக்க வேண்டிய கடப்பாடு புலம்பெயர் தமிழ்மக்களுக்கு உண்டு. சர்வதேச உறவுகளிலும் (INTERNATIONAL RELATIONS) அரசியலிலும் நிபுணத்துவமுடையவர்களும், அனைத்துலக சட்ட நுணுக்கங்களை கற்றறிந்தவர்களும் இதில் பங்காற்ற முன்வரவேண்டும்
No comments:
Post a Comment