ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
சிங்கள அரசின் இனப்படுகொலை குறித்தத பன்னாட்டு விசாரணையின் அவசியத்தை அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் அவர்களைச் சந்திக்கும்போது தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைவர் செந்தமிழன் சீமான் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள்.
ஹில்லாரி கிளிண்டனிடம் ஈழத் தமிழர் துயரத்தை முதல்வர் எடுத்துரைக்க வேண்டும்: நாம் தமிழர் கட்சி வேண்டுகோள்
இந்தியாவிற்கு 3 நாள் பயணமாக வந்துள்ள அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன் நாளை (புதன் கிழமை) சென்னைக்கு வரவுள்ளார் என்றும் அப்போது அவர் தமிழக முதல்வரைச் சந்திப்பார் என்றும் செய்தி வந்துள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்கான பயண விவரம் இதுவரை வெளியிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.
ஹில்லாரி கிளிண்டனின் வருகையும், தமிழக முதல்வருடனான அவருடைய சந்திப்பும் ஈழத் தமிழினத்தின் துயரை நேரடியாக நன்கு எடுத்துரைக்கூடிய ஒரு வாய்ப்பாகவே நாம் தமிழர் கட்சி கருதுகிறது. ஈழத்தில் நடந்த போரில் சிறிலங்க அரச படைகள் நிகழ்த்திய திட்டமிட்ட தமிழினப் படுகொலையை உலகின் பார்வைக்கு கொண்டு வர வேண்டுமெனில், ஐ.நா.நிபுணர் குழு பரிந்துரைத்ததற்கு இணங்க, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும், அதற்கு அமெரிக்க அரசு முன்னின்று முயற்சியெடுக்க வேண்டும் என்பது உலகளாவிய தமிழினத்தின் விருப்பமாகும். பன்னாட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும் என்கிற தமிழினத்தின் விருப்பம்தான் தமிழக சட்டப் பேரவையில் தமிழக முதல்வரால் முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களாகும்.
ஐ.நா.நிபுணர் குழு அளித்த பரிந்துரையின்படி, சுதந்திரமான எந்த விசாரணைக்கும் சிங்கள அரசு இதுவரை ஒப்புக்கொள்ளாத நிலையில், அங்கு நடந்த தமிழினப் படுகொலை குறித்து விசாரிக்க பன்னாட்டு குழுவை நியமிப்பதன் அவசியத்தை ஹில்லாரி கிளிண்டனிடம் மாண்புமிகு தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மையார் வலியுறுத்த வேண்டும். ஏனெனில், சுதந்திரமான பன்னாட்டு விசாரணைக்கு ஐ.நா.வின் பாதுகாப்புப் பேரவையின் ஒப்புதல் வேண்டும். பாதுகாப்புப் பேரவையில் ஈழத் தமிழர் படுகொலை பற்றி விவாதிக்க முற்பட்ட போதெல்லாம் அதனை சீனாவும், இரஷ்யாவும் தங்களுடைய வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்த வந்துள்ளன. ஆகவே, பாதுகாப்புப் பேரவையி்ன் மற்ற நிரந்தர உறுப்பினர்களான இங்கிலாந்து, பிரான்ஸ் ஆகியவற்றின் துணையுடன் இதற்கான முயற்சியை அமெரிக்கா முன்னெடுக்க வேண்டும் என்பதே தமிழினத்தின் விருப்பமாகும். அதனை ஹில்லாரி கிளிண்டனிடம் தமிழக முதல்வர் வற்புறுத்த வேண்டும்.
அதுமட்டுமின்றி, ஈழத்தில் போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்த பின்னரும், அங்கே தமிழர்களின் வாழ்வு பெரும் அவலத்தில் உள்ளது. தமிழர்கள் வாழ்ந்து இடங்களில் சிங்கள குடியேற்றங்கள் நடந்த வருகிறது; தமிழரின் நகரப் பகுதிகள் சிறிலங்க இராணுவப் பகுதிகளாக (கண்டோண்மெண்ட்) மாற்றப்படுகின்றன; தமிழர்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு சிங்களர்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன; தமிழீழத்தின் கடலோரப் பகுதிகளில் சிங்கள மீனவர்கள் குடியேற்றப்பட்டு, அவர்களுக்கு மட்டுமே மீன் பிடி உரிமை வழங்கப்படுகிறது. இந்த உண்மைகள் யாவற்றையும் இலங்கை நாடாளுமன்றத்தில் தமிழ் மக்களின் பிரதிநிதியாகிய எம்.ஏ.சுமந்திரன் ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியுள்ளார். எனவே, உழைக்க காணியின்றியும், உணவிற்கு வழியின்றியும், வாழ்ந்திட வீடின்றியும் ஈழத் தமிழினம் அவலத்தில் உள்ளது. வாழ வழியற்ற நிலையில் அபாயகரமான கண்ணி வெடி அகற்றல் பணிகளில் தமிழ்ப் பெண்களில் பலர் ஈடுபட்டுள்ளனர்.
இந்த அவலத்தை போக்க வேண்டுமெனில், பன்னாட்டுத் தலையீடு அவசியம், அதனை அமெரிக்காவே முன்னின்று செய்ய வேண்டும். ஏனெனில் மீள் குடியமர்த்தப்படும் தமிழர்களுக்கு உணவளிக்கத் தேவையான நிதியை அமெரிக்காதான் ஒரளவிற்காவது வழங்கி வருகிறது. நிதியுதவி வழங்கிய மற்ற பன்னாட்டு அமைப்புகள் அனைத்தையும் சிறிலங்க பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச வெளியேற்றிவிட்டார்.
எனவே, இந்த உண்மைகளையெல்லாம் அமெரிக்க அயலுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டனிடம் ஆணித்தரமாக எடுத்துரைக்க தமிழக முதல்வரால் மட்டுமே முடியும். எனவேதான் நாம் தமிழர் கட்சி மிக அவசியமான இந்த வேண்டுகோளை விடுக்கிறது.
இலங்கைப் பிரச்சனை இந்தியாவின் அயலுறவுப் பிரச்சனை, அதனை இந்திய அரசுதான் பேச வேண்டும், தமிழக அரசோ அல்லது முதல்வரோ பேசக் கூடாது என்பது போல் ஒரு பிரச்சாரம் நடந்து வருகிறது. இது உண்மைக்கும் அரச நெறிப்பாடுகளுக்கும் முற்றிலும் முரணானது ஆகும். அயல் நாட்டு நிறுவனங்கள் தமிழகத்தில் தொழில் வளர்ச்சிக்காகவும், வணிகத்திற்காகவும் முதலீடு செய்ய தமிழக முதல்வரை அயல் நாட்டு அமைச்சர்களும், தூதர்களும் சந்திக்கும் போது, மனிதாபிமான பிரச்சனை பற்றிப் பேச மட்டும் அயலுறவுக்கொள்கை இடம் தராதா என்ன? எனவே இப்படிப்பட்ட திசை திருப்பும், உள்ளீடற்ற பிரச்சாரங்களை கண்டுகொள்ளாமல், ஹில்லாரி கிளிண்டனைச் சந்திக்கும் வாய்ப்பை தமிழக முதல்வர் தமிழினத்தின் துயரைப் போக்க பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.
No comments:
Post a Comment