சிங்கள அரசோடு இணைந்து ஈழத்தமிழ் இனத்தை இல்லாதொழிக்கும் யு.என்.எச்.சி.ஆர்!
தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ஏமாற்றி இலங்கைக்கு அனுப்பி ஈழத் தமிழினத்தை இல்லாதொழிக்கும்; யு.என்.எச்.சி.ஆர் அமைப்பின் நடவடிக்கையை உடனடியாக தடுத்து நிறுத்தும் படி இந்திய அரசையும் தமிழக அரசையும் வேண்டிக்கொள்கிறோம்.இலங்கைத் தமிழருக்கு ஒரு நியாயமான தீர்வு ஏற்படுத்திக் கொடுக்கும் சர்வதேசத்தின் முயற்சியை சீர்குலைக்கும் முயற்சியாக யு.என்.எச்.சி.ஆர் இலங்கை அரசுடன் இணைந்து தமிழகத்தில் உள்ள இலங்கை அகதிகளை ஏமாற்றி ஆசைவார்த்தைகள் கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்ற செய்தி கேட்டு நாம் பேரதிர்ச்சி அடைந்துள்ளோம்.
இலங்கையில் எம் சொந்த மண்ணில் இன்னும் இரண்டு லட்சம் (200000) தமிழ் மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் நிலையில் இங்குள்ள அகதிகளுக்கு பாயும், சமையல் உகரணங்களையும் இலவசமாக கொடுத்து விமானக்கட்டணத்தையும் அவர்களே வழங்கி கடந்த 5ம் திகதி செவ்வாய்கிழமை தமிழகத்திலிருந்து 1000 அகதிகளை யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு அழைத்துச் சென்று இலங்கை அரசிடம் ஒப்படைத்துள்ளது.
2009ம் ஆண்டு போரின் போது அந்த மக்கள் கொல்லப்படப் போகிறார்கள் என்று தெரிந்தும் யு.என். அமைப்பு வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலிருந்து வெளியேறியது. இலங்கை அரசாங்கம் தமிழ் இனத்தவர்களை சாட்சியம் இல்லாமல் அழிக்கும் நடவடிக்கைக்கு வழிசமைத்துக் கொடுத்ததும் இதே யு.என்.எச்.சி.ஆர். தான். உண்மையில் யு.என். அமைப்பு மக்களுக்கான அமைப்பாக இருந்திருந்தால் அந்த மக்களைக் காப்பாற்ற முயற்சி செய்திருப்பார்கள். அதை விடுத்து, அந்த மக்களை இலங்கை அரசு அழிப்பதை வேடிக்கைப் பார்த்துகொண்டிருந்துவிட்டு இன்று இறுதி யுத்தத்தில் 40,000 மக்கள் கொல்லப்பட்டதாக மரணச் சான்றிதழ் வழங்கிக் கொண்டிருக்கிறது.
இறுதி நேர யுத்தத்தில் காயமடைந்த மக்களைக் காப்பாற்ற இந்திய மருத்துவக் குழு திருகோணமலையிலுள்ள 'புல்மோட்டை" என்ற இடத்தில் மருத்துவமணை அமைத்து காயமடைந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அழித்து வந்தது. யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்த பகுதிகளில் இருந்த அதாவது முல்லைத்தீவு கடல் மார்க்கமாக காயப்பட்ட மக்களை இதே யு.என்.எச்.சி.ஆர். என்ற அமைப்பு கப்பல் மூலமாக அழைத்து வந்து இந்திய மருத்துவக் குழுவிடம் ஒப்படைக்காமல் இலங்கை இராணுவத்திடம் ஒப்படைத்தது. இவர்கள் மூலமாக இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட மக்களின் விபரங்கள் எதையும் இவர்கள் பதிவு செய்து வைக்கவில்லை. அல்லது அப்பதிவுகளை வேண்டுமென்றே மறைத்துவிட்டனர்.
இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட, காயமடைந்த தமிழ் மக்களில் எத்தனை பேர் சித்திரவதைச் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டு கடலில் வீசப்பட்டனர் என்பது அந்த நேரத்தில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பில் செயல்பட்டவர்களுக்கு நிச்சயமாக தெரியும். பல ஆயிரம் காயப்பட்ட மக்களை சிகிச்சை அளிக்கிறோம் என்று கூறி சிங்கள இராணுவத்திடம் ஒப்படைத்தததையும், அவர்கள் எப்படியான கொடுமைகளைச் செய்து அவர்களின் உடைமைகளைப் பறித்துக் கொண்டு அவர்களை கொலை செய்தார்கள் என்பதையும் ஈழ மக்கள் இன்றுவரை மறக்கவில்லை. இந்த அழிப்பு நடவடிக்கைக்கு யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு உடந்தையாக இருந்ததையும் எம்மக்கள் மறக்கவில்லை.
யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு அன்று செய்த அதே வேலையைத்தான் இன்றும் செய்துகொண்டிருக்கிறது. இலங்கையில் தமிழர்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் போது, இந்தியாவில் உள்ள அகதிகளை எந்த அடிப்படையில் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்கிறது? வடகிழக்கு தமிழர் பிரதேசங்களில் தமிழர்கள் பலியாவது தொடர்ந்துகொண்டிருக்கிறது. கடத்தல், காணாமல் போதல், கற்பழிப்பு, கொலை, சமூக சீரழிப்பு போன்ற சம்பவங்கள் தினந்தோறும் அரங்கேறிகொண்டிருக்கும் இவ்வேளையில், ஏன், தமிழ் மக்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகளுக்குக் கூட பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் எந்த உத்தரவாதத்துடன் யு.என்.எச்.சி.ஆர். எம் மக்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்துச் செல்கிறது? அதிலும் ராஜபக்சேயின் வலதுகரமாக மாறிய கருணாவிடம் எம் மக்களை ஒப்படைக்கின்றனர். தமிழ் யுவதிகளை சிங்களவருக்கு இரையாக்கும் கருணா போன்றவர்களின் வழிகாட்டலில்தான் இந்த யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு எம் மக்களை ஏமாற்றுகின்றனர்.
ஆகவே தமிழக அரசும் இந்திய மத்திய அரசும் இவ்விடயத்தில் தலையிட்டு இந்த யு.என்.எச்.சி.ஆர். அமைப்பின் தமிழர் விரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நிரந்தரமான ஓர் அரசியல் தீர்வு கிடைக்கும் வரைக்கும், பாதுகாப்பும், சுதந்திரமும் உறுதி செய்யப்படும் வரை தமிழகத்தில் வாழும் ஈழத்து அகதிகள் யாரையும் யு.என்.எச்.சி.ஆர். அமைப்பு அழைத்துச் செல்ல அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசையும், மத்திய அரசையும் ஈழத் தமிழ் மக்கள் சார்பாக, ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணியினராகிய (ஈ.என்.டி.எல்.எப்.) நாங்கள் மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வண்ணம்,
ஈழ தேசிய ஜனநாயக விடுதலை முன்னணி
(ஈ.என்.டி.எல்.எப்.)
06-07-2011
No comments:
Post a Comment