ரஜீவ் காந்தி கொலை வழக்கில் சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை இரத்துச் செய்யவேண்டும் என்ற கோரிக்கை தமிழகம் எங்கும் ஓங்கி ஒலிக்கின்றது. இவர்களுக்கான தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்குமாறு தமிழக சட்டப் பேரவையில் தீர்மானமொன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மனித நாகரிக வளர்ச்சி காரணமாக, உலகம் முழுவதும் மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் ஓங்கி ஒலித்து வரும் நிலையில், காந்தி தேசம் தமிழினத்தின்மீதான நரபலி வேட்டையில் உள்ள தனது ஆசையை இன்னமும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் தமிழர்கள் என்பதனால் அவர்களுக்கான நீதி இதுவரை கானல் நீராகவே உள்ளது.
ஆரிய – திராவிடர் யுத்தம் இன்னமும் முடியவில்லை என்பதையே இந்திய ஆட்சியாளர்களின் தமிழின எதிர் நடவடிக்கையும், ஆரிய எச்சங்களான தமிழகத்துப் பார்ப்பன சக்திகளின் ஆர்ப்பரிப்புமாக உள்ளது. இறுதி யுத்தத்தில் அழிக்கப்பட்டவர்கள் தமிழர்கள் என்பதாலேயே பார்ப்பன ஆதிக்கத்திற்குட்பட்ட இந்து மத பீடங்களும், பீடாதிபதிகளும் யுத்தத்தினைத் தடுத்து நிறுத்த முயலவில்லை. தமிழர்களுக்காகக் குரல் எழுப்பவில்லை. அதற்கும் அப்பால், தமிழகத்துப் பார்ப்பனிய சக்திகளான சோவும், சுப்பிரமணியசாமியும், இந்து ராமும் சிங்கள தேசத்தின் கொடூரங்களுக்கு இப்போதும் நியாயம் கற்பித்து வருகின்றார்கள்.
இந்த நிலையில், சோனியா காந்தியின் இறுதி ஆசையை நிறைவேற்றும் பணிக்காக காங்கிரஸ் எச்சங்களான தங்கபாலும், ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் ஆரிய தாசர்களாக நின்று அந்தத் தமிழர்கள் மூவருக்கும் உடனடியாகத் தூக்குத் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று கொக்கரித்து வருகின்றார்கள். ஏற்கனவே, தங்களது தமிழர் விரோத செயற்பாடுகள் காரணமாகத் தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்டு, தமிழகத்தின் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்ட பின்னரும் இவர்கள் தங்களது ஆரிய விசுவாசத்தை மூர்க்கமாகக் காட்ட முயற்சிக்கின்றார்கள்.
அதற்கும் மேலாக, சாந்தன், முருகன், பேரறிவாளன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உடனடியாக நிறைவேற்றக் கோரி தமிழக காங்கிரஸ் சேவா தளம் சார்பில் உண்ணாவிரதம் நடைபெறுகிறது. வியாழக்கிழமை நடைபெறும் இந்த உண்ணாவிரதத்தை தமிழக காங்கிரஸ் தலைவரான தங்கபாலு துவக்கி வைக்கிறார். முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ். இளங்கோவன் உண்ணாவிரதத்தை முடித்து வைக்கிறார்.
ரஜீவ் காந்தியின் படுகொலைக்கு தமிழர்கள் வருந்த முடியாத அளவுக்கு ரஜீவ் காந்தி அனுப்பி வைத்த இந்தியப் படைகள் தமிழீழ மண்ணில் பேரழிவுகளை நிகழ்த்தியது. சிங்களக் கொடூரங்களுக்கு முன்னுதாரணமாகவே இந்தியப் படைகளின் கோரங்கள் இருந்தன. கொலைகளும், கடத்தல்களும், கற்பழிப்புக்களுமாகத் தமிழீழ மண் இந்தியப் படைகளின் கொடூரங்களால் அவலப்பட்டதைத் தமிழர்கள் எவரும் மறக்கமாட்டார்கள்.
தங்கபாலுவும், இளங்கோவும் தமிழீழ மண்ணில் வாழ்ந்திருந்தால், அவர்களுக்கும் அங்கு குடும்பங்கள் இருந்திருந்தால், அவர்கள் கண்முன்னாலேயே அவர்களது தாய்மாரும், மனைவிமாரும், மகள்களும் இந்தியப் படையினரால் கற்பழிக்கப்பட்டிருந்தால், அவர்களது கண் முன்னாலேயே அவர்களது மகன்கள் கொடூரமாகக் கொல்லப்பட்டிருந்தால் அந்த வலி அவர்களுக்குப் புரிந்திருக்கும். ரஜீவ் காந்தியின் அவலமான மரணம் ஏன் தமிழர்களுக்கு வலியை ஏற்படுத்தவில்லை என்பது புரிந்திருக்கும். குறைந்த பட்சம், இவர்கள் மனிதர்களாக இருந்தாலாவது சக மனிதர்களது அவலங்கள் மனதைத் தொட்டிருக்கும்.
பதவிக்காக ஜால்ரா அடிப்பதையும், பணத்திற்காக அத்தனை கொடுமைகளையும் ஏற்றுக்கொள்ளவும் தங்கபாலுவுக்கும், இளங்கோவிற்கும் முடிந்திருக்கும் அளவிற்குத் தமிழர்கள் உணர்வற்று, மனிதாபிமானமற்று இருந்துவிட முடியாது.
கொடூரமான நிகழ்ச்சி நிரலுடன் உறக்கத்தில் ஆழ்த்தப்பட்டிருந்த தமிழகத்தைத் தட்டி எழுப்ப முத்துக்குமாரன் என்ற தமிழன் தன்னையே எரியூட்டினான். எழுச்சி பெற்ற தமிழகத்தில் தங்கபாலுவும், இளங்கோவும் பிறந்திருக்காமல் இருந்திருந்தால், எங்கள் செங்கொடி தன்னை எரித்திருக்கமாட்டாள். உணர்ச்சிப் பிழம்பான தமிழ்த் தீபங்கள் என்றுமே எரிந்துதான் போவார்கள் என்ற தவறான புரிதல்கள் நீண்ட காலத்திற்கு நீடிக்கமாட்டாது. எரியத் துணிந்தவர்கள் எரிக்கத் துணிந்துவிட்டால் தங்கபாலுகளுக்கும், இளங்கோவன்களுக்கும் தமிழகத்தில் இடம் இருக்காது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
சாந்தனும், முருகனும், பேரறிவாளனும் சோனியாவின் விருப்பத்திற்காகத் தூக்கில் தொங்குவதே நியாயம் என்று இந்திய ஆட்சியாளர்கள் முடிவு செய்வார்களாக இருந்தால், பகவத் சிங்கை மீண்டும் தோண்டி எடுத்து தூக்கில் போட்ட பின்னரே அதனை நிறைவேற்ற வேண்டும். காலங்கள் மாறியது தவிர, இரு காட்சிகளும் ஒன்றே. அதற்கான நியாயங்களும் ஒன்றே!
- அகத்தியன்
No comments:
Post a Comment