Translate

Thursday 22 September 2011

பொதுச் சபையில் போர்க்குற்றவாளி உரையாற்றுவதை தடுக்குமாறு ஐக்கிய நாடுகளுக்கு வேண்டுகோள்


போர்க்குற்றவாளி என்று சந்தேகிகக்கப்படும் மஹிந்த ராஜபக்சவை ஐ நா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றுவதற்கு அனுமதிக்கக் கூடாது. இந்த வேண்டுகோளை நாடு கடந்த தமிழீழ
அரசாங்கத்தின் பிரதமர் திரு. வி. ருத்ரகுமாரன் அவர்கள், ஐ நா பொதுச்சபைத் தலைவர் நாசீர் அப்துல் அசீஸ் அல்-நாசர் அவர்களுக்கு அனுப்பியுள்ள செய்தி மூலம் கோரியுள்ளார்.
பிரதமரின் இந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:


அண்மையில் வெளியான ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கையில் ஜனாதிபதி ராஜபக்சவின் கீழ் இயங்கும் பாதுகாப்புப் படையினர் இழைத்துள்ள போர்க்குற்றங்களையும் மனித உரிமை மீறல்களையும் அவர் தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார். அத்துடன், அதில் உள்ள இன அழிப்பு அம்சங்களையும் அவர் குறிப்பிட்டுளார்.
ஐ நா நிபுணர் குழுவின் அறிக்கையில் இன் படி 40,000 தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள்; பெண்கள் பாலியல் கொடுமைகளுக்குள்ளாக்கப்பட்டுள்ளார்கள். 140,000 தமிழ் மக்களுக்கு என்ன நடந்ததென்றே தெரியாத நிலை தொடர்கின்றது.
கடந்த வாரம் இவ் ஐக்கிய நாடுகள் குழுவின் அறிக்கையை உரிய நடவடிக்கைக்கென ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆலோசனைக் குழுவிற்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளருக்கும்; ஐ நா செயலாளர் நாயகம் திரு. பான் கி மூன் அவர்கள் அனுப்பி வைத்துள்ளார்.
பாரதூரமான முறைகேடுகளுக்குக் காரணமாக இருந்தவர்களைத் தண்டனைக்குட்படுத்த வேண்டிய இக்கட்டான இவ்வேளையில் இச்சர்வதேச குற்றச்செயல்களைப் புரிந்துள்ளார் எனக் கருதப்படும் பிரதான சந்தேக நபரான சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவிற்கு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உரையாற்ற நீங்கள் நேரம் ஒதுக்கியுள்ளீர்கள். என இக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஐ நா பொதுச்சபையில் அவரை உரையாற்ற அனுமதிப்பதனால் அவர் இழைத்ததாகக் கருதப்படும் குற்றங்களுக்கு அவரைப் பொறுப்பாளியாக்கும் முயற்சி பாதிக்கப்படலாம் என அக் கடிதம் எச்சரித்துள்ளது.
ஐ நாவின் ஒரு முக்கிய அங்கமாகிய மனித உரிமைப் பேரவையானது நிபுணர் குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்கள் தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயும் வேளையில், ஐ நா பொதுச் சபையானது இக் குற்றங்களின் முக்கிய சூத்திரதாரி ஒருவருக்கு, மதிப்புக்குரிய ஏனைய உலகத் தலைவர்களுடன் சமமாக சபையில் உரையாற்ற நேரம் ஒதுக்கியுள்ளது. எனவும் கடிதம் மேலும் விளக்கியுள்ளது.
ஐ நா சபையில் ராஜபக்சவை உரையாற்ற அனுமதிக்கும் முடிவினை மீளாய்வு செய்யுமாறும் பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜபக்சவை உரையாற்ற அனுமதிக்கும் செயலானது ஐ நா சபைக்கு இழுக்கை தருவது மட்டுமன்றி , அதன் தனித்துவத்தையும் பெருமளவில் பாதிக்கும்.
போர்க்குற்றவாளி எனவும், இன அழிப்பைச் செய்தவர் எனவும், மானுடத்துக்கு எதிரான குற்றங்களைப் புரிந்தவர் எனவும் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு சந்தேக நபரை பெருமைக்குரிய ஐ நா போன்றதொரு சபையில் உரையாற்ற அனுமதித்தல் முறையல்ல.' எனக் விளக்கி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் திரு. விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் தனது வேண்டுகோளை தெரிவித்துள்ளார்.
பிரதமர் அலுவலகம்
நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

No comments:

Post a Comment