யாழ் பல்கலைக்கழக மாணவனான 27 அகவையுடைய வேதாரணியம் லதீஸ் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்களால் கடத்திச் செல்லப்பட்டுள்ளதால், பல்கலைச் சூழலில் பாரிய பதற்றம் நிலவி வருகின்றது.
நேற்று (27-11-2011) திருநெல்வேலியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் கல்வி கற்கும் தனது நண்பனைப் பார்வையிடச் சென்ற இவர், அங்கு நடைபெற்ற மாவீரர் வணக்க நிகழ்வில் கலந்துகொண்டார் என்ற சந்தேகத்தில் கடத்திச் செல்லப்பட்டிருக்கலாம் என மாணவர்கள் கருதுகின்றனர்.
கைதடியிலுள்ள பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவம் கற்றுவரும் இந்த மாணவன், வடமராட்சி கிழக்கு உடுத்துறை (ஆழியவளை) பிரதேசத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர் எனவும், முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் பின்னர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த இவர் நீதிமன்றத்தினால் முறையாக விடுதலை செய்யப்பட்டவர் என்றும் மாணவர்கள் கூறினர்.
லதீசின் வீடு போரில் முற்றாக அழிவடைந்துள்ள பின்புலத்தில் கைதடியில் தங்கி கல்வி கற்றுவந்த இவர், திருநெல்வேலி பாலசிங்கம் விடுதிக்குச் சென்றுவிட்டு திரும்பும்போதே கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார்.
பல்கலைக்கழகத்தைச் சூழ படையினர் நின்றதாலும், அங்கு பதற்றம் நிலவியதாலும் இவர் புறப்பட முன்னர் ஏனைய மாவணர்களை வெளியே செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்துவிட்டே புறப்பட்டுச் சென்றதுடன், தொலைபேசியில் இந்த எச்சரிக்கையை ஏனைய மாணவர்களுக்கும் வழங்கியிருக்கின்றார்.
புறப்பட முன்னர் அறிவித்ததுபோன்று லதீஸ் உரிய இடத்திற்கு வந்து சேரவில்லை என அறிந்த மாணவர்கள் அவரது கைத்தொலைபேசிக்கு அழைப்பை மேற்கொண்டபோது, ‘கௌத’ (யார்) என சிங்களத்தில் பேசிவிட்டு, பின்னர் தொலைபேசி அணைத்து வைக்கப்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
லதீஸ் காணாமல் போயிருப்பது பற்றி அவரது தாயாரும், மாமனாரும் யாழ்ப்பாணத்தில் நிலைகொண்டுள்ள காவல்துறையில் இன்று மாலை முறைப்பாடு செய்ததைத் தொடர்ந்து, மாலை 4:00 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்திற்குச் சென்ற காவல்துறையினர் மாணவர்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிறீலங்கா ஆக்கிரமிப்புப் படைப் புலனாய்வாளர்களின் இந்தக் கடத்தல் நடவடிக்கை தொடர்பாக கொழும்பிலுள்ள வெளிநாட்டு தூதரகங்களிற்கும், மனித உரிமை அமைப்புக்களிற்கும் மாணவர்கள் தெரியப்படுத்தி இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த மக்களும், அமைப்புக்களும் தமது நாடுகளிலுள்ள மனித உரிமை அமைப்புக்கள் ஊடாக லதீசின் விடுதலைக்காகக் குரல்கொடுக்க வேண்டும் எனவும், இவ்வாறான சம்பவம் இனிவரும் நாட்களில் நடைபெறாத வகையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும், யாழ் பல்கலைக்கழக மாணவர் சமூகம் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
No comments:
Post a Comment