Translate

Sunday, 13 November 2011

மாவீரர் நாள் - அஞ்சலி நிகழ்வுக்கு அப்பால் ஒரு அரசியல் பலமாக பார்க்கப்படவேண்டும்!



மாவீரர் நாள் - அஞ்சலி நிகழ்வுக்கு அப்பால் ஒரு அரசியல் பலமாக பார்க்கப்படவேண்டும்

எச்செல் மாவீரர் நாள் நிகழ்வு என்றால் பிரித்தானிய தமிழர்களுக்கு ஒரு முக்கிய நாள். டியுப் எனப்படும் புகையிரதவண்டி எல்லாம் அன்று தமிழர் முகத்தை நிறையவே காணலாம். டி எல் ஆர் எனப்படும் இலகு புகையிரதவண்டி நிறைந்து செல்லும். அதிக மக்கள் நிறைந்து வருவதனால் பிரித்தானிய புகையிரத திணைக்களத்தின் அதிகாரிகள் ஒலிபெருக்கியுடன் கடமையில் இருப்பார்கள். அவ்வளவு பெரும் தமிழின எழுச்சியாக அந்த நிகழ்வு நடைபெறும். பிரித்தானியாவின் மிக பெரும் உள்ளக அரங்குக்கே சவாலாக மக்கள் நிறைந்து காணப்படுவர்.

அவ்வளவு மக்கள் தோகையை பார்த்து பிரித்தானிய அரசும் பொலிசாரும் தமிழ் தேசியத்தின் பலத்தை புரிந்து கொள்வர். பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் நான் நீ என முண்டியடித்து சொற்பொழிவு ஆற்றுவர். இலங்கை அரசின் புலி முத்திரைக்கு எல்லாம் அஞ்சாமல் பங்கேடுபார்கள். இலங்கை அரசும் எத்தனையோ முறை இதை தடை செய்யும்படி கேட்டாகி விட்டது. ஆனால் பிரித்தானிய அரசு காதில் இது செவிடன் காதில் ஊதிய சங்காகி விடும். அவ்வளவுக்கு இந்த நிகழ்வுக்கு பலம்.

இளையோர் முதல் முதியோர் வரை நிறைந்து காணப்படும் இந்த நிகழ்வு வெறுமனே அஞ்சலி செலுத்தும் நிகழ்வுதானா? இல்லை இதற்கு அப்பாலும் ஒரு பெரும் பலம், மக்கள் பலம் எடுத்து காட்டப்படும் நிகழ்வாக இது அமைகிறது. மக்கள் பெருமளவில் திரள்வதுவும், விடுதலை புலிகள், மக்கள் அமைப்பு என்று வெளிப்படையாக காட்டும் நிகழ்வாகவும், அந்த மக்கள் தொகை பிரித்தானிய அரசியல் வாதிகளை கவர்வதுவும், அந்த மாவீரரை தொழுவதையும் தாண்டி அவர்களின் கனவை அடையும் நிகழ்வாக அமைகிறது. இதை தடுக்க சிறீ லங்கா அரசு பெரும் பரப்புரை செய்தாலும் அதையும் தாண்டி அந்த மக்கள் பலம் உண்மையை உலகுக்கு எடுத்து காட்டி நிற்கிறது.
இந்த நிகழ்வின் பலத்தை உணர்ந்த சகலரும் இதை ஒரு இடத்தில் நடாத்த வேண்டும் என்கின்ற தேவையை உணர்ந்திருத்தல் அவசியம். இந்த நிகழ்வு தமிழீழம் கிடைத்த பிறகும் தொடர்தல் மிக அவசியம். இந்த பலத்தை நாம் எப்படி கட்டி எழுப்பி உள்ளோம், கடைசி வருடம் வரை எவ்வாறு கட்டி எழுப்பினோம் என்கின்ற உண்மையையும் உழைப்பையும் உணர்ந்தவர்கள் இம்முறை எக்காரணம் கொண்டு பிரிக்க முற்படமாட்டார்கள் .
இந்த நிகழ்வுக்கு அடிப்படை வேலை செய்த தொண்டர்கள் பலர். அந்த தொண்டர்கள் சேவையால் வளர்தெடுக்கப்பட்ட மாவீரர் தினத்தை தடுக்க சிங்கள அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறது. இதில் முக்கியமாக ஒரு இலக்கு அதன் மக்கள் பலத்தை குறைத்தல். அடுத்த வழிமுறை விடுதலை புலிகளை பிரித்தானியாவில் தடை செய்துள்ளதை காட்டி, இந்த நிகழ்வை விடுதலைப் புலிகளின் நிகழ்வு என நிரூபித்து நிறுத்துதல். முன்றாவதாக இதில் சேரும் பணத்தை எப்படி உபயோகிகிரார்கள் என உளவறிந்து அதை பிரித்தானிய பொலிசாரிடம் கொடுத்து விசாரிக்க சொல்லுதல். சென்றமுறை நடந்த மாவீரர் நிகழ்வு பற்றிய சிறீ லங்காவின் உளவறிக்கை ஏற்கனவே வழங்க பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று சென்ற வருடம் தெரிவித்ததை சிலர் வாசித்து இருப்பீர்கள்.
சிங்கள அரசின் முதல் இலக்கான மாவீரர் நாளில் மக்கள் பலத்தை குறைதல் எனும் திட்டத்துக்கு, இம்முறை சிங்கள அரசு எதிர்பாராத வகையில் தமிழர்களின் பிரிவு தாமாகவே ஆதரவு வழங்கி உள்ளது. அதைத்தான் அனைத்துலக கட்டமைப்பு என்ற ஒரு விடுதலைப் இயக்க புலத்து பிரிவொன்று, தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC ) என்ற பெயரில் ஐந்து இடங்களில் நடாத்துவதாக அறிவித்தமை தெளிவாக உணர்த்தி நிற்கிறது. சென்ற வருடம் வரை மாவீரர் நினைவேந்தல் அகவத்தின் பின்னால் நின்று சக்தி வழங்கிய அதே பிரிவினர் இன்று அந்த மாவீரர் நிகழ்வுக்காக அமைக்கப்பட்ட தமிழ்த் தேசிய நினைவேந்தல் அகவத்தின் இருக்கும் பழைய உறுபினர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில் அதே நபர்களை சிங்கள உளவாளிகள் என திரிபு படுத்தி தெரிவித்து வருகின்றமை தவறானது.
பிரித்தானியாவில் பல காலம் இந்த அனைத்துலக தொடர்பகம் இயங்கி வந்ததனாலும் அவர்களிடம் பெரும் பண பலம் இருபதாக கருதப்படுவதனாலும் பல தமிழீழ செயற்பாட்டாளர்கள் இவர்களுடைய தயவிலேயே இயங்கி வந்தனர்.
அதனால் இன்று பல செயல்பாட்டாளர்கள் இந்த உடைவுக்கு துணைபோய் நிற்பது கவலைக்குரிய விடயமே. இங்கே குழுவாதத்தை தாண்டி, சிங்கள அரசு நினைத்தது போலவே, ஓரிடத்தில் சேரவேண்டிய பலத்தை சிதைத்தமை, ஒட்டு மொத்த போராட்டத்தின் வீழ்ச்சிக்கு வழி கோலும் என்பதே உண்மை. யார் சரி, யார் பிழை என்பதை மக்கள் தீர்மானிக்கட்டும், ஆனால் ஓரிடத்தில் நடாத்த படவேண்டும் என்பதில், இதே அனைத்துலக தொடர்பகத்தொடு இயங்கிய பல செயல்பாட்டாளர்கள் உறுதியாக உள்ளனர் என்பதையே மாவீரர் நினைவேந்தல் அகவதில் அவார்கள் இன்னமும் செயல்படுதல் குறித்து நிற்கிறது. அனைத்துலக தொடர்பகத்தின் செயற்பாடுகளில் ஈடுபட்ட பலர் இன்று அவர்களை விட்டு விலகுதல் என்பது அனைத்துலகத்தின் பிழையான அணுகுமுறை காரணமாகவே என்பதை இன்னமும் உணராதவர்களாக இருபது கவலைக்கிடமான விடயமே.
இரண்டாவதாக சிங்கள அரசு திட்டம் போடுவது விடுதலைப் புலிகளை நேரடியாக தொடர்புபட்டு இருப்பதை நிருபித்து மாவீரர் தினத்தை நிறுத்துதல். இந்த வகை திட்டமே, பிரித்தானிய தமிழர் அமைப்பு (BTA ) எனும் அமைப்பு தடை செய்யப்பட்டமைக்கு காரணம். இதன் பின்னரே வெளிப்படையான செய்லபாடுகளுக்கான பொறுப்பை மக்களிடம் தலைமைச் செயலகம் கொடுத்து இருந்தது.
அதற்கு அமைவாகவே தமிழ் செயற்பாட்டாளர்கள் கையில் விழா நடத்தும் அமைப்புகள் கொடுக்கப்பட்டன. பிரித்தானிய தமிழர் பேரவை தொடங்கப்பட்ட நாளில் தமிழின செயல்பாட்டாளர்கள் வைத்து தொடங்கபட்டமை அதனை சிறீலங்கா அரசால் தடை செய்ய வைக்க முடியாமல் போனதற்கு முக்கிய காரணம். ஆனால் பிற்காலத்தில் முன்னாள் விடுதலைப் புலிகளின் அமைப்பில் இருத்து விளக்கப் பட்டவர்கள் தம்மை நேரடியாக தொடர்பு படுத்துவது இந்த அமைப்பின் இருக்கையை கேள்வி குறியாக்கும். அதை போலவே மாவீரர் நாளை மக்கள் தலைவர்கள் பொறுப்பெடுத்து, தமிழர் கட்டமைப்பின் ஆதரவோடு செயல்படுத்தலே இந்த நாளின் நெடுங்கால தொடர்ச்சிக்கு வழிவகுக்கும். சிங்கள புலனாய்வினால் புலிகள் என நிரூபிக்கமுடியாத தமிழின செயல்பாட்டாளர்கள், கல்வி மான்கள் பெரியோரை வைத்து மாவீரர் நாளை முன்னெடுக்க வேண்டும். இதற்கு தற்போதைய மாவீரர் நினைவேந்தல் அகவம் ஒரு சிறந்த உதாரணம்.
மூன்றாவதாக இதில் சேரும் பணம் பற்றிய சிங்கள அரசின் குற்றச்சாட்டு. இந்த பணம் திரைமறைவிலேயே இதுவரை கையாடப்பட்டு வந்ததை சகலரும் அறிவோம். இந்த முறைமை ஆயுதபோராட்டம் நடைபெற்ற காலத்தில் ஒரு தேவையான நிலைமையாக காணபட்டாலும் இன்று அது தேவை அற்றது. மாவீரர் குடும்பங்கள், மண்ணில் களமாடி கால் கைகளை இழந்து தவிக்கும் போராளிகளின் குடும்பங்கள், சமூகத்தால் அச்சத்தோடு நோக்கப்படும் முன்னாள் போராளிகளும் அவர்தம் குடும்பங்கள், என்று போராட்டத்தில் நேரடி பங்களிப்பு செய்தவர்கள் ஒரு நேர சாப்பாட்டுக்கு அதே எதிரியிடம் பிச்சை எடுக்கும் நிலைமை காணபடுகிறது. இந்த நேரத்தில் புலத்தில் மாவீரர் நாள் நிகழ்வுகளில் சேர்க்கப்படும் பணம் இந்த குடும்பங்களின் துயர் தீர்க்க பயன்படுத்தபடலே சரியான தர்மம் ஆகும். இன்றைய காலகட்டத்தில் இவர்களை தெருவில் விட்டு விட்டு, நாம் போராடுகிறோம் என கூறுவது போலியான போராட்டமே அன்றி வேறு ஒன்றும் அல்ல.
அதனால் மாவீரர் நாளில் சேரும் பணத்தை மேலுள்ள குடும்பகளுக்கு கொடுக்கபோகிறோம் என்றால், அதை சட்டப்படி கையாடலுக்கு எந்த தடையும் பிரித்தானியாவில் இருக்க முடியாது. அதனை விட இன்று பணம் கொள்ளையிட்டனர் என்று பல செயல்பாட்டாளர்கள் மேல் போடப்படும் பழிச்சொல் கூட இனி வரும் காலங்களில் கூறப்படாமல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு பற்று சீட்டு, வெளிப்படையான கணக்கு வழக்கு என்பன அவசியம். பிரித்தானிய புலம் பெயர் மக்கள் இப்படியான நடைமுறையை பின்பற்ற அமைப்புகளை தூண்டுதல் அவசியம். விடுதலைப் புலிகள் மக்களிடம் வாங்கிய பணம், மற்றும் தங்க நகைகளுக்கும் பற்று சீட்டு வழங்கியமையை உதாரணமாக காட்டலாம். இப்படி சிங்கள அரசுக்கு பிடி கொடுக்காமல் இருக்கவும் மக்களிற்கு பணம் சரியான முறையில் கையாடப்படுகிறது என உறுதிபடுத்தவும் மாவீரர் நினைவேந்தல் அகவம் அன்பளிப்புக்கு பற்று சீட்டு கொடுக்க இம்முறை முன்வந்தமை பாராட்டப்பாடல் வேண்டும்!

இதனால் இன்னமும் இணையத்திலும் தொலைகாட்சியில் உளறும் தலைவர்கள், பெறுமதியற்ற அறிக்கை விட்டு சகலரையும் மிரட்டும் செயற்பாட்டாளர்கள் என்று பலர் இன்று மக்களை தொடர்ந்தும் ஒரு இழுபறிக்குள் வைத்திருக்க முயற்சி செய்தல் தவறே. மாவீரர் நாளை பிரதானிய தமிழர் பேரவை இம்முறை நடுநிலைமையோடு நடாத்தி வைக்க முயன்ற வேளை அதையும் TCC ஏற்க மறுத்து ஆறு இடங்களில் மக்கள் பலத்தை சிதைப்போம் என கங்கணம் கட்டி நிற்கும் சிலர். தமிழீழமே பெரிது என உணர்ந்து குழுவாதத்தை விடுத்து இணையவேண்டும். மேலே கூறியவாறு அதை ஓரிடத்தில் நடாத்துவதனால் என்றைக்கும் போல எமது பலத்தை மீண்டும் ஒரு முறை நிரூபிக்கலாம் என்பது வெளிப்படை. அந்த பலமே எமது ஒற்றைக் கனவான தமிழீழத்தை அடையும் பாதையை பலபடுத்தி பயணத்தை விரைவாக்கும் என்பது சகலரும் அறிந்த ஒரு விடயமே. அதனைவிட இந்த நிகழ்வையும் பிரித்தானிய அரசு தடை செய்யாமல் இருக்க வேண்டும் என்றால் அதனை இனி வரும் காலங்களில் மேலுள்ள மூன்று அடிப்படைக்& காரணங்களை தெளிவாக்கி முன்னேறுதல் அவசியம். இனி போராட்டம் புலம் பெயர் மக்களின் போராட்டம் என்பதனால் அதனை விடுதலை அமைப்பின் தலைமைகள் தாமே என கூறும் சிலர் மக்களிடம் கையளிக்க முன்வரவேண்டும் .

முன்னாள் விடுதலை அமைப்பின் செயற்பாட்டாளர் ஒலிவாங்கி முன்னாள் நின்று பேச்சு வீரர்களாக வேண்டும் என கனவு காணாமல் பின் புலத்தில் நின்று சக்தி தரவேண்டும். விடுதலை அமைப்பின் உறுப்பினர்கள் பெரிதாக மேடைகளில் பேசியது கிடையாது, அவர்களிடத்தில் செயற்பாடுகள் தான் அதிகமாக இருக்கும். அதனால்தான் அவர்கள் பற்றி மக்களுக்கு பெரும் மதிப்பு இருந்தது. இன்றோ மேடை மேல் ஏற துடிக்கும் முன்னாள் போராளிகள் என்று தம்மை அடையாளப்டுத்திக்கொண்டு, மக்கள் அமைப்பின் தலைமை பதவிகளில் மோகம் கொண்ட விடுதலை அமைப்பில் இருந்த மனிதர்கள் என்று பல விதமானோர் அந்த மதிப்பை சிதைப்பதை பார்க்கிறோம்.
அதனால் இன்று போராட "உரியவர்" மக்களே அன்றி வேறு யாரும் அல்லர். மாவீரர் நினைவை சட்ட திட்டப்படி நடாத்த மக்கள் தலைவர்களுக்கு முழு பலமும் உரிமையும் வேண்டும் . மக்களிடம் போராட்டம் தரப்படும் போது சிங்கள அரசின் "புலி முத்திரை" இனியும் குத்த முடியாமல் போகும் எனபதே உண்மை. அது எமது போராட்டத்தின் சக்தியை பலபடுத்தி புலிகள் யாரும் அல்ல நாம் தான் என்று உலகுக்கு ஒவ்வொரு தமிழனும் கூறும் நிலைமைக்கு இட்டு செல்லும். அதன் பின்னர் சிங்களத்தின் போலி பிரசாரங்கள் எடுபடாமல் போகும்.
மக்களே வாருங்கள்! ஒன்றாக எக்செல் சென்று எம் மாவீரருக்கு அஞ்சலி செலுத்துவதோடு நிறுத்தாமல் உலகுக்கு தமிழன் சாயவில்லை தமிழீழம் அடையப்படும் என உறுதிபடுத்துவோம்! குழுவாதத்தை பற்றி பேசிப் பேசி மக்களை பொறிக்குள் தள்ளாமல் நாமாக சென்று உண்மைகளை கண்டு கொள்வோம். பொறிக்குள் சிக்காமல் போராட்டத்தை காப்போம். தமிழரின் தாகம் அடங்காதது, அது அடையும் வரை நாம் ஓயமாட்டோம் என நிரூபிக்க எச்செல் செல்வோம்! இங்கே அறிக்கை விடுபவனும் தொலைகாட்சியில் வருபவனும் எமக்கு அறிவுரை கூறத் தேவை இல்லை ஏன் என்றால் தேசிய தலைவரை தவிர வேறு தலைவர் எமக்கு இல்லை!. மாவீர நாள் நிச்சயம் ஓரிடத்தில்தான் நடத்தபடல் வேண்டும் அது எச்செல் மண்டபத்தில் தான் நடக்க வேண்டும்!.
மக்களே இது எங்கள் போராட்டம், அச்சம் வேண்டாம், அறிவுரை வேண்டாம் நீங்களே உங்களை கேட்டு கொள்ளுங்கள்! எங்கள் போராட்டத்தை குழுவாதிகள் சிதைப்பதை பார்த்துகொண்டு புலத்தில் ஒரு முள்ளிவாய்க்கால் நாமாக நமக்கு நடாத்தி வைக்கபோகிறோமா? இல்லை எமது போராட்டத்தை நாம் கையிலெடுத்து சிங்களத்தை எதிர்க்க ஒன்றாக இணைந்து நிற்காமல் பல இடங்களில் பிரிந்து நிற்கப் போகிறோமா? வாருங்கள் எச்செல் மண்டபத்திற்கு வந்து உங்கள் பதிலை வார்த்தையில் அல்ல மாவீரர்களுக்கு அஞ்சலி செய்து செயலில் காட்டுங்கள்!
தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்!
-புலத்தான்

No comments:

Post a Comment