Translate

Tuesday, 22 November 2011

திரு. பரமேஸ்வரன் அவர்களுக்கு என்றும் அன்புடன், அண்ணன், ஜெயசங்கர் முருகையா.!!!!!!


மிகவும் துரதிஷ்டவசமாக, புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் தங்களுக்குள்ளே நிலவுகின்ற கருத்துவேறுபாடுகளின் காரணமாக, ஒற்றுமையில்லாமல், பிரிவுபட்டு, ஒன்றின் மேல் ஒன்று சேற்றினை அள்ளி வாரி இறைத்துக் கொண்டிருப்பதும், ஒருவரை மற்றொருவர் "துரோகி" என்று முத்திரை குத்துவதும், இவை இன்று பூதாகரமாக உருவெடுத்து, ஒட்டு மொத்த தமிழினமே ஒன்றுபட்டு பூஜிக்க வேண்டிய மாவீரர் நாளைக் கூடப் பிரித்து வைத்து, கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பதானது, ஈழத்தமிழினம் அனுபவித்து வருகின்ற அனைத்து வேதனைகளிலும் மிகவும் வேதனையான ஒரு சம்பவமாகும்............. 


என்றும் என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய என்னுடைய அன்புத் தம்பி     திரு. பரமேஸ்வரன் அவர்களுக்கு,
என்னுடைய நேசத்திற்குரிய நண்பர்களில் ஒருவரும்,  உலகத் தமிழர்களினால் இன்று போற்றி வணங்கப்படுகின்றவருமாகிய எங்கள் தியாக தீபம் தீலிபனுக்கு அடுத்த படியாக, உங்களை ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து இன்றும் நேசித்து வருகின்ற ஒரு அண்ணனிடமிருந்து உங்களுக்காக வரையப்படுகின்ற ஒரு அன்பான திறந்த மடல் இது.

என்னுடைய பெயர் ஜெயசங்கர் முருகையா. நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மக்கள் பிரதிநிதிகளுள் ஒருவனாக நான் இருக்கின்றேன். அரசாங்கத்தின் உறுப்பினராக நான் உங்களுக்கு இம்மடலினை வரையவில்லை என்பதனையும், நான் இங்கே முன்வைக்கவிருக்கின்ற கருத்துக்கள் யாவும் எனது தனிப்பட்ட கருத்துக்களே என்பதனையும் நான் இங்கே உங்களுக்குக் குறிப்பிட்டுக் கூறிக்கொள்வதற்குக் கடமைப்பட்டுள்ளேன். நீங்கள் என்னைவிட வயதில் சிறியவர் என்ற ஒரே காரணத்தினால் மட்டுமே உங்களை அன்புடன் "தம்பி" என்று குறிப்பிட்டு இம்மடலினை உங்களுக்காக நான் வரைகின்றேன்.

"தேசியத்திற்கு எதிராக செயற்படுவோர்களது செயற்பாடுகள் உடைத்தெறியப்படும்" எனும் தலைப்பில் நீங்கள் சமீபத்தில் வெளியிட்டிருந்த அறிக்கையினைப் பார்த்து, அது தந்த மனவேதனையின் காரணமாக நான் உங்களுக்கு இம்மடலினை வரைவதற்கு முடிவெடுத்தேன்.

கடந்த சுமார் இரு வருடங்களுக்கு மேலாக, முள்ளிவாய்க்காலில் வைத்து விடுதலைப் புலிகளின் முப்பது வருடகால ஆயுதப்போராட்டமானது மௌனிக்கப் பட்ட பின்னர், எங்கள் தேசியத்தலைவனது ஆணைப்படி, அவரின் ஆசீர்வாதங்களுடன், புலம்பெயர் தேசங்களிலுள்ள ஈழத்தமிழ் மக்களினால் தமிழீழ சுதந்திரப் போராட்டமானது, சர்வதேச சட்டங்களுக்குட்பட்டு, ஜனநாயக வழிகளில் முன்னெடுக்கப்பட்டு வருவது தாங்களும் அறிந்த ஒரு யாதார்த்தமான உண்மை நிகழ்வாகும்.

ஆனாலும், மிகவும் துரதிஷ்டவசமாக, புலம்பெயர் தேசங்களிலுள்ள தமிழ்த் தேசியக் கட்டமைப்புக்கள் தங்களுக்குள்ளே நிலவுகின்ற கருத்துவேறுபாடுகளின் காரணமாக, ஒற்றுமையில்லாமல், பிரிவுபட்டு, ஒன்றின் மேல் ஒன்று சேற்றினை அள்ளி வாரி இறைத்துக் கொண்டிருப்பதும், ஒருவரை மற்றொருவர் "துரோகி" என்று முத்திரை குத்துவதும், இவை இன்று பூதாகரமாக உருவெடுத்து, ஒட்டு மொத்த தமிழினமே ஒன்றுபட்டு பூஜிக்க வேண்டிய மாவீரர் நாளைக் கூடப் பிரித்து வைத்து, கொச்சைப்படுத்திக் கொண்டிருப்பதானது, ஈழத்தமிழினம் அனுபவித்து வருகின்ற அனைத்து வேதனைகளிலும் மிகவும் வேதனையான ஒரு சம்பவமாகும்.

இத்துயரங்களுக்கும் வேதனைகளுக்கும் மத்தியிலும் கூட, எங்கள் மாவீரர்களினது புனித ஆத்மாக்களினது ஆசீர்வாதங்களின் துணை கொண்டு, ஈழத்தமிழினமானது முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற இன்றைய, இந்தச் சோதனைகளை எல்லாம் தாண்டி, இந்த வேதனைகளிலிருந்து விரைவில் மீண்டு, எங்கள் தாய் மண்ணின் சுதந்திரத்தை நோக்கி உலகத் தமிழினமானது மீண்டும் வீறு நடை போடும் காலம் வெகு தொலைவில் இல்லை என்று என் உள்மனம் என்னுள்ளே உறுதியுடன் மீண்டும் மீண்டும் உரத்துக் கூறிக்கொண்டே இருக்கின்றது. என்னுள்ளே இருக்கின்ற இந்த அசையாத நம்பிக்கையும், என் மனஉறுதியும் ஒன்று சேர்ந்து, என்னையும் கூட இன்று "துரோகி" எனும் "பட்டம்" சூட்டி, "கருப்பு" முத்திரை குத்திக் கொள்வதற்கு பெரும் பிரயத்தனம் எடுத்து தளராது முயற்சித்துக் கொண்டிருக்கின்றவர்களைப் பற்றி சிறிதும் பொருட்படுத்தாது, என் தாய் மண்ணினதும், என் மக்களினதும் சுதந்திரத்தை நோக்கி, எப்போதும் என்னை உந்தித் தள்ளிக் கொண்டே இருக்கின்றன.

உங்கள் மீது தனி மதிப்பும், அன்பும் வைத்திருக்கும் உங்கள் அண்ணனிடமிருந்து உங்களிடம் வைக்கப்படும் ஒரே ஒரு கேள்வி, "எப்படித் தம்பி நீங்களும் கூட இவர்களின் "பாதக வலையில்" வீழ்ந்து சிக்கிக் கொண்டீர்கள்?" என்பதே அன்றி வேறேதும் இல்லை. நீங்கள் கூறியிருப்பது போன்று, இது வெறும் "பணமோசடிகளை" மட்டுமே மையமாகக் கொண்ட பிரச்சனை இல்லை - அதை விட மிகவும் ஆழமானது, ஆபத்தானதும் கூட. ஏனெனில், எதிர்கால தமிழ் இளைய சமுதாயத்தின் மனவளர்ச்சியின் மீதும், கலாச்சாரத்தின் மீதும், பண்பாட்டின் மீதும், நாகரிக வளர்ச்சியின் மீதும் கூட இவர்களால் மிக மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்த முடியும், ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

பழைய கொள்கைகளிலும், உளுத்துப் போன சிந்தனைகளிலும் சிறைப்பட்டுள்ள இவர்கள் ஒரு தேங்கிய “நீர்க் குட்டை” போன்றவர்கள். இக்குட்டை விரைவில் வற்றி வறண்டு விடும். இதில் தற்காலிகமாக குளிர்காய்ந்து கொண்டிருப்பவர்கள் விரைவில் மாண்டு மறைந்து விடுவர். இங்கே புதியவர்களுக்கு இடமில்லை. புதிய சிந்தனைகளுக்கும், ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும், சிந்தனைகளைத் தூண்டுகின்ற பகுத்தறிவுக் கேள்விகளுக்கும் கூட இங்கே இடமில்லை. "மாற்றம் உண்டு என்பதில் மாற்றம் இல்லை" எனும் கார்ல் மார்க்சின் தத்துவம் இவர்களுக்குப் புரியவில்லை. முள்ளிவாய்க்கால் பேரவலங்களில் இருந்து இவர்கள் இன்னமும் கூடப் பாடங்களைச் சரியாகக் கற்றுக்கொள்ளவில்லை. "நான்", "நான் மட்டும்தான் சரியானவன்", "எனக்கு மட்டும்தான் எல்லாம் தெரியும்", "நான் சொல்வதே சட்டம்", "நான் சொல்வதனை மட்டும் நீ செய் - வேறு கேள்விகள் எதுவும் என்னைக் கேட்காதே", "கேட்கக் கூடாத கேள்விகள் கேட்டால், நீயும் ஒரு துரோகி ஆவாய்." ஆமாம், இவைதாம் இவர்கள். இவர்கள்தாம் இவை. "ஆணவம், அகங்காரம், அதிகாரம்" இவற்றின் உறைவிடம் இவர்கள்தாம்.

இதுவரை காலமும் தாங்கள் மட்டும்தான் விடுதலைப் புலிகளின் உண்மையான வாரிசுகள் என்று கூறி வந்த இவர்கள், இன்றோ "விடுதலைப் புலிகளே" தாங்கள்தான் என்று கூறும் அளவிற்குத் துணிந்து விட்டார்கள். தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை தங்களது “முப்பாட்டன் சொத்து” என்று உரிமை கொண்டாடுபவர்கள் இவர்கள். இவர்களைத் தவிர்த்து வேறெவரும் தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை முன்னெடுக்கக் கூடாது. அப்படி ஒருவேளை தேசப்பற்றும், நேர்மையும் உள்ள ஒரு சிலர் துணிவுடன் முன்னெடுத்தாலும் கூட, அவர்களும் இவர்களின் அதிகாரத்திற்குள்ளும், கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்கித்தான் போகவேண்டும். இல்லையேல், அவர்களும் கூட இவர்களால் "துரோகிகள்" ஆக்கப்பட்டு விடுவார்கள்.

எங்கள் மக்களின் சுயமான சிந்தனை வளர்ச்சிக்கும், சுதந்திரமான செயற்பாடுகளுக்கும் இன்றும் கூட, புலம்பெயர் நாடுகளில் கூட, தங்களிடமுள்ள பணத்தினாலும், அதிகாரத்தினாலும் தடை போட்டுக் கொண்டிருக்கும் இவர்கள்தானா, புலத்தில் எங்கள் மக்களுக்கும், எங்கள் தாய் மண்ணுக்கும் விடுதலையைப் பெற்றுத் தரப் போகின்றார்கள்? இங்கே எங்கள் சுதந்திரத்தை மறுக்கும் இவர்களா, அங்கே சுதந்திரத்திற்காகப் போராடப் புறப்பட்டிருக்கின்றார்கள்? எங்கள் தேசத் தலைவனையும், தேசத்தின் புதல்வர்-களையும், சுதந்திரப் போராட்டத்தையும் முதலாக்கி, வியாபாரமாக்கி, இன்று விற்றுப் பிழைத்துக் கொண்டிருக்கும் இவர்களை வரலாறு என்றென்றைக்குமே மன்னிக்காது என்பதனை, என் அருமைச் சகோதரா, இங்கே நான் உனக்கு உரத்துக் கூறி வைக்கக் கடமைப்பட்டுள்ளேன்.
சுதந்திரப் போராட்டம் என்பது ஒரு ஜீவ நதியினைப் போன்றது. இது என்றென்றும் ஊற்றெடுத்துக் கொண்டே இருக்கும். தன்னை நம்பி நாடி வருகின்ற எல்லா உயிரினங்களையும் இது வாழ வைக்கும்.  இங்கே புதியவர்களுக்கும், புதிய சிந்தனைகளுக்கும், ஆக்கபூர்வமான விமர்சனங்களுக்கும், புதிய சிந்தனைகளைத் தூண்டுகின்ற பகுத்தறிவுக் கேள்விகளுக்கும் எப்போதும் இடமிருக்கும். இங்கே ஆணவம் தலைவிரித்து ஆடாது, மாறாக அன்பு அளவற்று ஊற்றெடுக்கும். இங்கே அகங்காரம் இருக்காது, மாறாக, அளவற்ற நேசம் இருக்கும். இங்கே அதிகாரம் தனது வாலைக் கூடக் காட்டாது, மாறாக இங்கே அடக்கமும், புதியவர்களை வரவேற்கும் பண்பும், செய்நன்றி மறவாத  நட்புணர்வும், நெஞ்சங்களிலே உள்ள மாசற்ற நேர்மையால் உதடுகளில் தோன்றுகின்ற மாறாத புன்சிரிப்புமாக  முகங்கள் எப்போதும் மலர்ந்து இருக்கும்.

"மேலும் பல ஆதாரங்களுடன் உங்கள் முன் விரைவில் வருவேன்." என்று நீங்கள் உங்கள் அறிக்கையினை முடித்து இருக்கின்றீர்கள். அன்புத் தம்பி, முதலில் ஆதாரங்களை வைத்துக் கொண்டல்லவா நீங்கள் “புதியவர்களின்” மீது அப்பட்டமாக, அபாண்டமாக பழியைப் போடுவதற்கு முனைந்திருக்க வேண்டும்?வர்கள், உங்களுக்கு மட்டும்தான் புதியவர்கள், ஆனால், எங்கள் தேசத்திற்கும், எங்கள் தேசத்தலைவனுக்கும், எங்கள் தேசத்தின் புதல்வர்களுக்கும் இவர்கள் நன்கு பரிச்சயமான, பழக்கப்பட்ட முன்னாள் போராளிகள்தாம் என்பது உங்களது மனச்சாட்சிக்குக் கூடத் தெரியாமல் போனது, ஏன் எனதருமை பரமேஸ்வரா?

மக்களைப் பிரித்து, மாவீரர் நாளைக் குழப்பும் நோக்கோடு, திரைமறைவில் இருந்து கொண்டு “வேலைகள்” செய்து கொண்டிருப்பவர்களுக்கல்லவா நீங்களும் அறிந்தோ அறியாமலோ உங்கள் அறிக்கையின் மூலமாக உடந்தையாக இருந்துள்ளீர்கள் என்பது இன்னமும் கூட, உங்களின் உண்மையான, மாசற்ற, தேசப்பற்றுள்ள இதயத்திற்குப் புரியவில்லையா, தம்பி பரமேஸ்வரா? உன் களங்கமில்லா தேசப்பற்றை எம் உறவுகள் அறிவார்கள். உன் இதயமும் அது போன்று நேர்மையானது என்பதனை எம் உறவுகளுக்கு நிரூபித்துக் காட்டுவதற்கு நீ தவறி விட்டாயே, என் அன்புச் சகோதரா?

தமிழீழ சுதந்திரப் போராட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லும்படி, ஏன் எங்கள் தேசத்தலைவன் புலம்பெயர் ஈழத்தமிழ் மக்களை மீண்டும் மீண்டும் பணித்தான் என்று நன்கு சிந்தித்துப் பார் சகோதரா!!! தானே கட்டியெழுப்பிய "புலம்பெயர் கட்டமைப்பு" தன்னையே ஒருநாள் தூக்கி எறிந்து விட்டு, பணத்தாசை பிடித்து, அதிகாரவெறி கொண்டு, மதம் பிடித்த யானை போன்று, தறிகெட்டு, வழிதவறி, தமிழீழ சுதந்திரப் போராட்டத்தை அதுவே சிதைக்கத் துணிந்திடும் என்ற எங்கள் தலைவனின் தீர்க்க தரிசனத்தினால், அல்லவா???

முன்னர் ஒருதடவை எனது அன்புக்குரிய அண்ணன் திரு. ஜெயானந்தமூர்த்தி அவர்களுக்கு நான் ஞாகப்படுத்தியிருந்த இயேசு மகானின் அர்த்தம் நிறைந்த வார்த்தைகளை இங்கே மீண்டும் ஒருதடவை நான் உங்களுக்கு ஞாகப்படுத்திக் கொண்டு உங்களிடமிருந்து அன்புடன் விடை பெற்றுக்கொள்கின்றேன்: “நீ உனது சுட்டு விரலினால் ஒருவனைக் குற்றமுள்ளவன் என்று சுட்டிக் காட்டும் அதே சமயம், உனது மீதி நான்கு விரல்களும் உனது நெஞ்சினையே நோக்கி, நீயே குற்றமுள்ளவன் என்று உலகத்திற்கு சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன!
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் !!!
நன்றி.
என்றும் அன்புடன்,
அண்ணன், ஜெயசங்கர் முருகையா.

No comments:

Post a Comment