உலகெங்கு கடந்த சில நாட்களாக அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் இலங்கை அரசிற்கு பல பாடங்களை உணர்த்தியிருக்க வேண்டும் என்று நாம் கருதுகின்றோம்.
மாவீர்கள் என்ற உயிர்க் கொடை வள்ளல்களை எத்தனை ஆண்டுகள் சென்றாலும் நாங்கள் மறவோம் என்பதையும் அவ்வாறு மறக்கப்பட முடியாத அவர்கள் போல் அவர்கள் தங்கள் மனங்களில் உறுதியாகக் கொண்டிருந்த விடுதலை உணர்வும் எமது தமிழ் மக்கள் மனங்களிலிருந்து அகற்றப்பட முடியாதது என்பதும் புலம் பெயர்ந்த தமிழ் மக்களும் தாயகம் வாழ் தமிழ் மக்களும் இலங்கை அரசாங்கத்திற்கு புகட்டியுள்ள பாடமே ஆகும்.
எந்தளவிற்கு எமது மக்கள் மனங்களில் விடுதலை உணர்வு உள்ளதோ அந்தளவிற்கு அது இலங்கை அரசிற்கும் அந்த நாட்டிற்கும் மிகவும் ஆபத்தான விடயம் என்பதை அரசாங்கமும் உலக நாடுகளும் உணர்ந்திருக்க வேண்டும்.
ஆகவே பேச்சுவார்த்தைகள் மூலம் ஈழத்தமிழ் மக்களுக்க சரியானதும் நியாயமானதுமான தீர்வு வழங்கப்பட்டால் அது அனைவருக்கும் நன்மைகளைத் தரக்கூடிய விடயம் என்பதே யதார்த்தமானதாகும். காரணம் கடந்த காலங்களில்; பேச்சுவார்த்தை என்று சாதனம் சரியான முறையில் கையாளப்படாத காரணத்தால் தான் போராட்டமும் அதனால் பல உயிர்களும் உடமைகளும் அழிவதற்கும் காரணமாக அமைந்தது. ஆனால் தற்போது “பேச்சுவார்த்தை மூலம் தீர்வு” என்ற பந்து இலங்கை அரசாங்கத்தின் பக்கமே உள்ளது. தனது கடந்த கால தவறுகளை தவிர்க்க அரசாங்கம் தமிழ் மக்களின் உணர்வுகளை மதித்து தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்போடு மேற்கொண்டு வரும் பேச்சவார்த்தைகளை நேர்மையாக நடத்தி அதன் மூலம் தீர்வை வழங்க வேண்டும்”
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கம் சர்வதேச செயலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக உலகெங்கும் அனுஸ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வுகள் தொடர்பாகவும் அதன் தாக்கங்கள் தொடர்பாகவும் தமது இயக்கத்தின் கருத்துக்களை தெரிவிக்கும் முகமான இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஜேர்மனி வாழ் திரு துரை கணேசலிங்கமும் இயக்கத்தின் சர்வதேச ஊடகப் பொறுப்பாளர் கனடா வாழ் திரு ஆர். என். லோகேந்திரலிங்கமும் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டாவறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்படி அறிக்கையில் உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் பின்வருமாறு கூறியுள்ளது.
“இந்த ஆண்டு மாவீரர் நாள் நிகழ்வுகள் இவ்வளவு நேர்த்தியாகவும் இதய சுத்தியுடனும் உலகெங்கும் அனுஸ்டிக்கப்படும் என்பதை இலங்கை அரசோ அன்றி தமிழ்த் தேசியத்தை எதிர்ப்பவர்களோ எதிர்பார்த்திருக்க மாட்டார்கள்.
பல்வேறு பிரிவுகளாக உடைந்து கிடைக்கும் புலம் பெயர்ந்த மக்கள் தங்களுக்குள் உள்ள முரண்பாடுகளால் மாவீரர்களையே மறந்து விடுவார்கள் என்ற எண்ணமே இலங்கை அரசாங்கத்திற்கு இருந்திருக்க வேண்டும். அதனால்தான் யாழ்ப்பாணத்தில் எந்த ஒரு இடத்திலும் மாவீரர் என்று சொல் தமிழ் மக்களது வாய்களிலிருந்து உச்சரிக்கப்படக் கூடாது என்பதில் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் இருந்தது. ஆனால் நடந்தது என்ன? எமது மக்களின் மனங்களிலிருந்து அந்த மாவீரர்களின் நினைவுகளை அழிக்க முடியாது என்பதை உலகத் தமிழர்கள் உணர்த்தியுள்ளார்கள்.
இவ்வாறான அற்புதமான பணியை ஆற்றிய உலகெங்கும் உள்ள சம்பந்தப்பட்ட அமைப்புக்களையும் நிறுவனங்;களையும் எமது இயக்கம் பாராட்டுகின்றது. ஆனால் எமது இந்த அறிக்கையின் நோக்கம் இலங்கை அரசாங்கம் இனி என்ன செய்ய வேண்டும் என்பதை அதற்கு உணர்த்துவதற்காகவும் தயாரிக்கப்பட்டது என்பதை இலங்கையில் உள்ள அரசியல்வாதிகளும் உலக நாடுகளின் பிரதிநிதிகளும் உணர வேண்டும் என்பதை பணிவுடன் அறியத் தருகின்றோம்.
மாவீரர்களின் தியாகத்தை நமது தமிழ் மக்கள் என்றும் மறந்துவிடப்போவதில்லை. மாவீரர்கள் எமது மக்களால் நிராகரிக்கப்பட முடியாதவர்கள் என்ற இரண்டு கருத்துகளுமே கடந்த சில நாட்களாக உலகெங்கும் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நினைவுகள் அனைவருக்கும் உணர்த்தியுள்ளன. எனவே இலங்கை அரசாங்கம் தனது நிலைப்பாட்டிலிருந்து பல மாற்றங்களை கொண்டு வர வேண்டிய அவசியம் தற்போது தோன்றியுள்ளது என்றே நாம் கருதுகின்றோம்.
தமிழ் மக்களின் பிரச்சனைகளை சாதாரண மொழிப்பிரச்சனை என்று எண்ணக் கூடாது. அது அவர்களின் வாழ்வு மற்றும் உரிமைப் பிரச்சனைகள் என்ற பார்வை அரசாங்கத்திற்கு ஏற்பட வேண்டும். அவர்களும் அந்த மாங்கனித் தீவில் மரியாதையுடன் வாழ வேண்டும் என்ற எண்ணக் கருத்து இலங்கை அரசிடம் ஏற்படவேண்டும். அதாவது பாரிய மன மாற்றம் இலங்கை அரசின் பக்கம் ஏற்படவேண்டும்.
இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மக்களும் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டு ஈழத் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக “உண்மையாக” குரல் கொடுக்கும் தலைவர்களும் திருப்தியடையக் கூடிய அரசியல் தீர்வை உடனடியாக இலங்கை அரசு அறிவிக்க வேண்டும் என்றும் தற்போது தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளை நாட்களை கடத்து போக்கு கொண்டதாக இல்லாமல் முக்கியமானதாக கருதி நேர்மையாக நடத்தி அதை நகர்த்திச் செல்லவேண்டும். இதையே எமது இயக்கம் வலியுறுத்துகின்றது.
அத்தோடு தேவையேற்படும் நேரத்தில் புலம்பெயர்ந்த தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் மற்றும் சமூக நிறுவனங்களின் கருத்துக்களையும் இலங்கை அரசாங்கம் செவிமடுத்து தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்கும் விடயத்தில் “இதய சுத்தியுடன்” செயற்படவேண்டும். இதன் மூலம் இலங்கையில் மட்டுமன்றி உலகெங்கினும் அமைதியை கொண்டு வந்து இலங்கையில் ஒவ்வொரு இனத்திற்கும் உரிய தனித்தன்;மையுடன் அவர்தம் சமூக கலை மற்றும் கலாச்சார செய்ற்பாடுகளை அமைதியான முறையில் மேற்கொள்ளலாம்.
நாம் முன்னர் குறிப்பிட்டபடி இலங்கை அரசின் பக்கமே தீர்வுப் பொதி என்ற பந்து உள்ளது. நியாயமான தீர்வை அறிவிப்பதன் மூலம் பல நெருக்கடிகளை அது தவிர்க்கலாம்;. தமிழ் மக்களின் தீவிரவாத சிந்தனைகளை சற்றும் மென்மைப் போக்கு கொண்டவைகளாக மாற்றலாம். தற்போது இலங்கை அரசிற்கு எதிரான வகையில் சர்வதேசத்தில் செயற்படுத்தப்பட்டு வரும் பிரச்சாரங்களை சற்று தணிக்க வாய்ப்பு ஏற்படும். எனவே தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை கடந்த காலங்களைப் போல புறக்கணிக்கின்ற போக்கிலிருந்து இலங்கை அரசும் அதன் தலைவர்களும் விடுபட வேண்டும்”
இவ்வாறு உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைச் செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment