Translate

Friday 11 November 2011

போட்டி மாவீரர் தினத்தைக் கைவிடும்படி நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வேண்டுகோள்!


அன்பான புலம்பெயர் தமிழ் மக்களே!
நாங்கள் இப்போது எங்களது வரலாற்றுத் திருப்பு முனையின் முக்கிய பங்குதாரராக இருக்கின்றோம். விடுதலை வேண்டி நிற்கும் எங்கள் தேசம் எங்களது தொடர் போராட்டங்களை யாசித்து நிற்கின்றது.

சிங்களப் படைகளால் பேச்சு, மூச்சிழந்து தவிக்கும் தமிழீழ மக்களது உணர்வுகளைப் பிரதிபலிக்கவும், அவர்களுக்காகப் பேசவும், அவர்களுக்காகப் போராடவும் வேண்டிய தருணத்தில் நாம் இருக்கின்றோம்.

அந்நிய மண்ணில் வாழ்ந்தாலும், எங்கள் நேசிப்பும், எங்கள் சுவாசிப்பும் தமிழீழ மண்ணை நோக்கியே இருக்கின்றது. தமிழீழ மக்களது விடுதலையே எங்களையும் அனைத்துத் தளங்களிலும், அனைத்துத் தளைகளிலிருந்தும் விடுவிக்கும்.
தமிழீழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீரர்களது கனவும், அந்த மண்ணுக்கே விலையாகிப்போன தமிழ் மக்களது விருப்பமும் திசை எங்கும் நிறைந்துபோய், எங்கள் சுவாசத்தினுள் இறங்கி எங்களைப் போர்க் களத்திற்கு அழைக்கின்றது. எங்களுக்கான ஜனநாயகப் போர்க் களம் விரிந்து செல்கின்றது.
எனது அன்பான தமிழ் மக்களே!
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில், எனக்கு இந்த பரந்த உலகில் பெரும் கடமைகள் சுமையாக உள்ளன. எனது தவிர்க்க முடியாத கடமைகளின் பங்குதாரர்களாகவே நான் உங்களைப் பார்க்கின்றேன். கடந்த காலங்களின் கசப்புக்களும் என் மனதை அழுத்துகின்றன. தவறுகள் திருத்தப்பட வேண்டும் என்பதில் நான் உறுதியாகவே உள்ளேன். தவறானவர்களது வழிகாட்டல்கள் உங்களுக்கும் எனக்கும் பாரிய இடைவெளிகளை உருவாக்கியுள்ளதை நான் அறிவேன்.
விடுதலை நோக்கிய போர்க் களத்தில் நாங்கள் ஒவ்வொருவரும் போராளிகளே. அந்தப் பொர்க் களத்தில் எங்கள் ஒவ்வொருவருக்குமான பணிகள் வௌ;வேறானதாக இருப்பதனால், வேறுபாடுகள் போன்று தெரிந்தாலும் எங்களது இலக்கு ஒன்றாகவே இருக்கும். அது சுதந்திரத் தமிழீழத் தாயகமாகவே இருக்கும். அதில் எந்த வகையான சமரசத்திற்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் உட்படாது. அதனாலேயே, சமரச அரசியல் நடாத்த முற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அமெரிக்க வருகையையும் நாங்கள் கருத்தில் கொள்ளவில்லை.
எமது மண்ணின் விடுதலைக்காக 40,000 இற்கும் அதிகமான விடுதலைப் புலிகள் தமது உயிர்களைத் தியாகம் செய்துள்ளார்கள். இரண்டு இலட்சத்திற்கும் குறையாத தமிழ் மக்கள் சிங்கள, இந்தியப் படைகளால் கொல்லப்பட்டுள்ளார்கள். இத்தகையதொரு உச்ச விலையைச் செலுத்திய நாம், விடுதலைப் போராட்டத்தை சமரச அரசியலினுள் தொலைத்துவிட முடியாது.
எனது அன்பான தமிழ் மக்களே!
நாங்கள் எங்களது தாயகத்தை விடுவிக்கும் இலட்சியத்தில் தொடர்ந்தும் பயணிப்பதாக இருந்தால், நாம் புலம்பெயர் தேசங்களில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். விடுதலைப் புலிகளது புலம்பெயர் தளங்களைச் சிதைப்பது என்பது, நாம் எங்களை அழித்துக்கொள்வதற்கு ஒப்பானது. விடுதலைப் புலிகளின் ஒப்பற்ற தியாகங்களினாலும், போர்க் கள வெற்றிகளாலும், தேசியத் தலைவர் அவர்களது இலட்சியப் பற்றினாலுமே நாங்கள் புலம்பெயர் தேசங்களில் பலமான சக்தியாக உள்ளோம். அதனால்தான், எதிரி எங்களுக்குள் பிளவுகளையும், போட்டிகளையும் உருவாக்கி எங்களது புலம்பெயர் தளத்தின் பலத்தைத் தகர்க்க முற்படுகின்றான். இதனை நாம் புரிந்து கொண்டு, எதிரியின் சூழ்ச்சிகளை முறியடிக்க வேண்டும்.
புலம்பெயர் தேசங்களில் விடுதலைப் புலிகளது தேசியக் கட்டமைப்புக்கள் நடாத்தும் மாவீரர் தினத்தைச் சிதைப்பதற்கு எதிரி பலமான சதி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றான். இதற்கு நம்மிலும் பலர் விலையாகிப் போயுள்ளனர். புலம்பெயர் நாடுகளில் இதுவரை காலமும் நடாத்தப்பட்டு வந்ததுபோலவே, இந்த வருடமும் மாவீரர் தினம் நிகழ்த்தப்படுவதே முறையானது. அதனை நாம் அனைவரும் ஒன்றிணைந்து நடாத்துவதே அந்த மாவீரர்களுக்கு நாம் செய்யும் உண்மையான அஞ்சலியாக இருக்கும்.
நம்மில் சிலர் மாவீரர் தின நிகழ்வுகளது அர்த்தத்தையே கேள்விக்குறியாக்கும் வகையில் போட்டி மாவீரர் தின நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்வதை மனவருத்தத்துடனும், வேதனையுடனும் பார்க்கிறேன். தனிப்பட்டவர்களது விருப்பு வெறுப்புக்களுக்காக தேசிய ஆன்மாக்கள் காயப்படுத்தப்படுவதை என்னால் அனுமதிக்க முடியாது.
அன்பான தமிழ் மக்களே!
எங்கள் தாய்த்திரு நாடும், தமிழீழ மக்களும் எங்களது ஒன்றுபட்ட பலம் சிதறிப் போவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புலம்பெயர் தமிழர்களாகிய நீங்களும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்பதை நான் அறிவேன். எனவே, மாவீரர் தினம் என்ற மகத்தான நாள் குறித்து நாம் பிளவு பட்டு நிற்க முடியாது. அது தேசிய விடுதலைப் போராட்டத்தைச் சிதைவுப் பாதைக்கே கொண்டு சென்றுவிடும். எங்களுக்குள் போட்டியும் வேண்டாம், போட்டி மாவீரர் தினமும் வேண்டாம்.
நாங்கள் ஒரே தலைவனின் பின்னே அணிவகுத்து நிற்பவர்கள். விடுதலைப் புலிகள் என்ற குறியீட்டுடன் நிமிர்பவர்கள். நாம் எதிரிகளின் சூழ்ச்சிக்கு இரையாகிவிடக் கூடாது. ஒற்றுமை மட்டுமே எங்களது பலம் என்பதை நாம் மீண்டும் மீண்டும் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும். நான் பெரிது என்பதை மறந்து, நாட்டுக்காக நாம் எதையும் இழக்கச் சித்தமாக இருக்க வேண்டும்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற வகையில், நான் எனது மக்களது பெரும்பான்மைக் கருத்துக்களுக்கு இசைவாகவே நடக்கக் கடமைப் பட்டவன். எனவே, தமிழ் மக்களாகிய உங்களது விருப்பங்களே எனது முடிவாக இருக்கும். நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் மாவீரர் தினத்தை மையப்படுத்தி மக்கள் பிளவு படுவதை ஏற்றுக்கொள்ளாது. இரண்டவது என்ற பேச்சுக்கே இடமற்று, போட்டி மாவீரர் தின நிகழ்வு ஏற்பாடுகளைக் கைவிடும்படி அதனை ஏற்பாடு செய்பவர்களைக் கேட்டுக்கொள்கின்றேன். மீறி, தமிழ்த் தேசிய தளச் சிதைவை நோக்கமாகக் கொண்டு எந்த நாட்டிலாவது போட்டி மாவீரர் தின நிகழ்வு நடாத்தப்பட்டால், அதனைப் புறக்கணிக்கும்படி தமிழ் மக்களாகிய உங்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
தமிழரின் தாகம், தமிழீழத் தாயகம்!
விசுவநாதன் ருத்திரகுமாரன்
பிரதமர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்
- நாதம் ஊடக சேவை

No comments:

Post a Comment