Translate

Tuesday, 1 November 2011

தமிழ்வாணி போல், மீனா போல் எங்கள் தேசத்தின் விடிவிற்காய் நாம் ஒன்றாக எழுவோம்!


newsஇறுதி யுத்த களத்தில் விடுதலைப் புலிகளது உயிர்கள் பறிக்கப்பட்டிருக்கலாம், ஆனால் அவர்களது ஆன்மாக்கள் திசை எங்கும் சிதறிச் சென்று உலக நாடுகள் எங்கும் ஈழத் தமிழினத்தின் மேல் சிங்கள அரசு நடாத்திய இன அழிப்புப் போருக்காக நீதி கோரியபடியே உள்ளன.
ஒவ்வொரு விடுதலைப் புலி வீழும்போதும் தன் இலட்சிய வேட்கையை இறுகப் பற்றிக்கொள்கின்றான். இறுதிக் கணத்திலும் அவனது உதடுகள் 'புலிகளின் தாகம், தமிழீழத் தாயகம்' என்றே உச்சரிக்கின்றது. தேசியத் தலைவர் அவர்களை நெஞ்சில் சுமந்தபடியே அவன் காற்றில் கரைகிறான். ஆதலால்தான், அவர்கள் புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகின்றார்கள் என்று ஈழத் தமிழர்கள் நம்புகின்றார்கள். ஆம், அவர்கள் விதைக்கப்படுகின்றார்கள்!

'விழ, விழ எழுவோம்;! விழ, விழ எழுவோம்! ஒன்று விழ நாங்கள் ஒன்பதாய் எழுவோம்!' என்ற அவர்களது வேதம் பொய்த்துப் போகப்போவதில்லை என்பதைப் புலம்பெயர் தேசங்களின் ஒவ்வொரு நிகழ்வும் அறைந்து சொல்கின்றது.

சிங்கள தேசத்தின் சதி வலைக்குள் சிக்கிய சில பொய் முகங்கள், புலம்பெயர் போர்க் களங்களின் முகவரிகளுக்குக் குறி வைத்தாலும், புலம்பெயர் தமிழர்கள் பலம் சிதறாது, 'தமிழீழத் தாயகம்' என்ற மாவீரர்களின் இலட்சியத்துடனேயே பயணிக்கின்றார்கள். அதனால்தான் சிங்கள தேசம் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியான செய்திகளுக்குள் மிரட்சி கண்டு வருகின்றது.

இறுதி யுத்தத்தின்போது, அங்கு களத்தில் பணியாற்றிக்கொண்டிருந்த பல புலம்பெயர் தமிழர்கள், அங்கு நடைபெற்ற கொடூரங்களுக்கான சாட்சிகளாகத் தம்மை வெளிப்படுத்தி வருகின்றனர். லண்டனிலிருந்து, தமிழீழ மண்ணில் தனது பணிகளை வழங்கச் சென்ற தமிழ்வாணியின் சாட்சியம் பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் 4' இன் 'இலங்கையின் கொலைக்களங்கள்' என்ற ஆவணக் காட்சிப் பதிவுக்கு ஆதாரமாகியது. தற்போது, அதே வகையில், ஈழத்து மண்ணின் இறுதிக் களத்தில் பணியாற்றிய அவுஸ்திரேலியா வாழ் தமிழ்ப் பெண்ணான திருமதி மீனா கிறிஷ்ணமூர்த்தி அங்கு நடந்தேறிய போர்க் குற்றங்களின் சாட்சியாகத் தன்னை முன்நிறுத்தியுள்ளார். அவரது கண்ணீர் கசியும் சாட்சியத்தை அவுஸ்திரேலியாவின் முன்னணித் தொலைக்காட்சியான ஏ.பி.சி. ஒளிபரப்புச் செய்துள்ளது.

சிங்கள தேசம் நடாத்திய தமிழின அழிப்புக்கான சாட்சிகளாக இன்னமும் பலர் புலம்பெயர் தேசங்களில், அந்த நாட்டுக் குடியுரிமையுடன் வெளிவரத் துணிவற்று இருக்கத்தான் செய்கின்றார்கள். அந்தக் கோழைத் தனம் ஈழத் தமிழினத்தைக் கொன்று குவித்த மகிந்த ராஜபக்ஷவை விடவும் கொடூரமானது. ஒரு இனத்துக்கான நீதி கிடைப்பதைத் தடுப்பது போன்ற கொடுமையானது. இதனைப் புரிந்துகொண்டு, தமிழ்வாணி போன்று, மீனா போன்று உலக நாடுகளிடம் உண்மையைச் சொல்ல முன்வரவேண்டும்.

விடுதலைப் புலிகள் வெற்றியைக் குவித்தபோதெல்லாம், கைதட்டி ஆரவாரம் செய்து, பிரமுகர்களாக வலம் வந்தவர்கள், அவர்கள் அந்த யுத்த களத்தை இழந்ததும், மறு அணி சேர்வதோ, மவுனம் காப்பதோ வரலாற்றுத் துரோகமாகவே பதிவாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். எங்களது வாழ்வின் அர்த்தத்தைப் புரிந்து கொண்டு, எங்களுக்கான கடமைகளை நிறைவேற்றும்போது மட்டுமே நாங்கள் முழுமையானவர்களாக ஆகின்றோம்.

விடுதலைப் புலிகள் அந்த யுத்த களத்தை மட்டுமே இழந்துள்ளார்கள். அந்த யுத்த களம் இன்னொரு வடிவமாகப் புலம்பெயர் தேசங்கள் எங்கும் விஸ்வரூபம் கொள்கின்றது. அங்கே வீழ்ந்தவர்கள் கனவுகளுடன் புலம்பெயர்ந்த தமிழர்களாகிய நாங்கள் எழுந்து நிற்கின்றோம் என்பது மட்டுமே காலமும், கடவுள்களும் எமக்கிட்ட கட்டளைகள். நாங்கள் ஒன்றாக நிற்பதும், ஒன்றாக எழுவதும் மட்டுமே அந்தத் தேசிய மாவீரர்களுக்கு நாம் வழங்கும் கவுரவமாக அமையும்.

தமிழ்வாணி போல், மீனா போல் எங்கள் தேசத்தின் விடிவிற்காய் நாம் ஒன்றாக எழுவோம்!

- இசைப்பிரியா

No comments:

Post a Comment