Translate

Thursday 15 December 2011

சர்வதேச சமூகத்திடம் சரணாகதி அடையும் நிலையில் மஹிந்த அரசு!; கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன


வெள்ளைக் கொடியுடன் சரணடைய வந்த விடுதலைப் புலி உறுப்பினர்களைச் சுட்டுக் கொன்றார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும், இறுதி யுத்தத்தின் போது பொது மக்களைப் படுகொலை செய்தார்கள் எனக் கூறப்படுபவர்களுக்கும் மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது இனப்பிரச்சினைத் தீர்வுக்கு வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகியவை உள்ளடக்கப்படாத தீர்வுத்திட்டமானது முழுமையானதொரு தீர்வுப் பொதி யாக அமையாது.” இவ்வாறு நவ சமசமாஜக் கட்சியின் பொதுச்செயலாளரும், தெஹிவளை கல்கிசை மாநகரசபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன “உதயனு’க்கு வழங்கிய விசேட செவ்வியின் போது தெரிவித்தார். 


சமகால அரசியல் விவகாரங்கள் தொடர்பில் அவர் வழங்கிய செவ்வியின் முழு விவரம் வருமாறு கேள்வி: மனித உரிமை விவகாரத்தில் முன்னேற்றம் ஏற்படாவிட்டால் 2013 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சிமாநாட்டைத் தான் புறக்கணிப்பார் எனக் கனேடியப் பிரதமர் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இவரின் கருத்தை ஏனைய சில நாடுகளின் தலைவர்களும் வரவேற்றுள்ளனர். இலங்கையில் தற்போது மனித உரிமை விவகாரம் எவ்வாறானதொரு கட்டத்தில் உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்கள்? பதில்: மாபெரும் தமிழ்த் தலைவர் தந்தைச் செல்வாவின் உருவச்சிலையின் தலைப்பகுதியை அண்மையில் காடையர்கள் உடைத்தெறிந்தனர். பாதுகாப்புத் தரப்பினர் இரவும் பகலும் உலாவித் திரியும் திருகோணமலையிலேயே இந்த அராஜகம் அரங்கேற்றப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அநுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளைச் சிறைச்சாலை அதிகாரிகள் ஆடைகளைந்து காட்டுமிராண்டித்தனமாகத் தாக்கி வெறியாட்டம் ஆடியுள்ளனர்.
சர்வதேச மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணத்தில் நாம் நடத்திய ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் இடையூறு விளைவித்து அடாவடித்தனத்தில் ஈடுபட்டனர்.
இவற்றையெல்லாம் சர்வதேசம் உன்னிப்பாக அவதானித்துக்கொண்டிருக்கின்றது.
ஜனநாயக ஆட்சியே நாட்டில் நிலவுகின்றது என அங்கும் இங்கும் பெருமை கூறித்திரிபவர்கள் இதனை நன்கு உணர்ந்து செயற்படவேண்டும்.
இவ்வாறான சம்பவங்களிலிருந்தே நாட்டில் மனித உரிமைகள் எவ்வாறு மதிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ளமுடியும். இதை நான் கூறித்தான் புரியவேண்டும் என்றில்லை.
கே: ஆசியப் பிராந்தியத்திற்கான அமெரிக்க இராணுவ தலைமையகத்தின் நிதியுதவியுடன் வடக்கில் நான்கு வைத்தியசாலைகளை நிர்மாணிப்பதற்கு அரசு தீர்மானித்துள்ளது. அமெரிக்க இராணுவத்தின் நிதி உதவியுடன் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதால் தேசியப் பாதுகாப்புக்குப் பாரிய அச்சுறுத்தல் ஏற்படும் எனக்கூறி அமைச்சர்கள் சிலர் இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?
ப: யுத்தகாலத்தில் அழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்காவிடம் இருந்து அரசு பெருமளவு எண்ணிக்ககையான ஆயுதங்களை கொள்வனவு செய்தது. இராணுவ ஆலோசனைகளைப் பெற்றுக்கொண்டது. ஆலோசகர்கள்கூட இங்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
யுத்தத்தை முன்னெடுத்து மக்களை அழிப்பதற்கு மட்டும் அமெரிக்காவின் உதவியை விரும்பும் இனவாதிகள் மக்கள் நலனைக்காக்கும் திட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்காதது ஏன்?
நாட்டின் வளங்களை அரசு அமெரிக்காவுக்கு தாரைவார்த்துக் கொடுத்துள்ளது. இவற்றையெல்லாம் பார்த்துக்கொண்டு தலையாட்டிப் பொம்மையாகச் செயற்பட்ட அமைச்சர்கள், தமிழர் பிரதேசங்களில் அமெரிக்க இராணுவத்தின் நிதியுதவியுடன் வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அப்படியானால் கோதுமை மா இறக்குமதிக்கும் எதிர்ப்புத் தெரிவிக்கலாம் அல்லவா?
வைத்தியசாலைகள் அமைக்கப்படுவது மிகவும் அருமையானதொரு விடயம். அதனை நாம் வரவேற்க வேண்டும். சாத்தான் கூட இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கமாட்டாது.
ஆனால், காரணமில்லாமல் அமெரிக்கா களத்தில் இறங்காது என்பதும் எமக்குத் தெரியும். அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களைப் பகிரங்கப்படுத்துமாறு இதனால் தான் நாம் அரசை கோருகின்றோம்.
கே: வடக்கு கிழக்கு இணைப்பு, பொலிஸ், காணி அதிகாரங்கள் ஆகிய விடயங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொங்கியிருக்காது, தமிழர்களின் ஏனையப் பிரச்சினைகள் குறித்து பேச வேண்டும் என அரசு தரப்பினர் கூறுகின்றனர். மேற்கூறப்பட்ட விடயங்கள் உள்ளடங்காத ஒரு தீர்வுப்பொதி இனப்பிரச்சினைத் தீர்வுக்கு முழுமை பெறுமா?
ப: இனப்பிரச்சினை விவகாரத்தில், வடக்கு கிழக்கு இணைப்பு, காணி அதிகாரம், சட்ட ஒழுங்கு ஆகியவை இன்றியமையாத விடயங்களாகும். எனவே, அது குறித்துக் கட்டாயம் அரசு பேசியே ஆக வேண்டும்.
இந்த விடயங்களை உள்ளடக்காமல் ஒரு தீர்வு வழங்கப்பட்டால் அது முழுமைபெறாது. அதனை தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்றே நான் கருதுகின்றேன். சுயநிர்ணய ஆட்சிக்கு இந்த மூன்று விடயங்களும் அத்தியாவசியம். இவற்றைப் பற்றி பரிசீலிக்காவிட்டால் சுயநிர்ணய ஆட்சி குறித்து பேசுவதில் எதுவிதப் பயனும் இல்லை.
தமிழர் பிரச்சினை குறித்து வெளிநாடுகளில் உள்ள அமைப்புகள், இடதுசாரிகள், தொழிற்சங்கங்கள் ஆகியன மிகுந்த அவதானத்துடனும், அக்கறையுடனும் அவதானித்து வருகின்றன.
தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப் பொதியொன்றை முன்வைக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும் என இந்த அமைப்புகள் தமது நாடுகளில் உள்ள மத்திய அரசுகளை வலியுறுத்தினால் ஆட்சி பீடத்திலுள்ளவர்கள் கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.
தமிழர் பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப் பொதியொன்றை அரசு உடன் வழங்க வேண்டும். இல்லையேல் சர்வதேச அழுத்தங்கள் நாலாபுறமும் அரசை வாட்டிவதைக்கும். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கே: சரத் பொன்சேகாவின் விடுதலையை வலியுறுத்தி பிரதான எதிர்க்கட்சி தேசிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளது. இதில் உங்கள் கட்சியும் கலந்துகொள்ளும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டங்களின் போது தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரங்களும் உள்வாங்கப்படுமா? ப: சரத் பொன்காசேவை அடித்தளமாகப் பயன்படுத்தி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காகவும் நாம் பாடுபடுவோம். எதிர்க்கட்சித் தலைவர் அதற்கு இணங்கியுள்ளார். சரத் பொன்சேகாவின் விவகாரம் உலகளாவிய ரீதியில் பேசப்படுவதால் அவரை வைத்தே நாம் எமது நகர்வுகளை முன்னெடுக்கவேண்டும். சரத் பொன்சேகாவின் விடுதலைக்கான போராட்டம் ஏனைய அரசியல் கைதிகளுக்கும் நன்மை கிடைக்கும் வகையில் இருக்க வேண்டும். சரத் பொன்சேகாவை இராணுவ வீரர் எனக் கூறி நாம் கொச்சைப்படுத்தக் கூடாது. அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சிறைச்சாலை வீரர். நான் ஏன் அப்படிக் கூறுகின்றேனென்றால், வெள்ளைக் கொடியுடன் சரணடைவதற்கு வந்த புலி உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களும் கொல்லப்பட்டனர். இவற்றையெல்லாம் வெற்றிகரமாக செய்து முடித்தவர்களுக்கு மஹிந்த அரசு வெளிநாட்டுத் தூதுவர் பதவிகளை வழங்கி அழகுபடுத்திப் பார்க்கின்றது. அவர்களும் கோட்சூட்டை மாட்டிக்கொண்டு சுகபோகம் அனுபவிக்கின்றனர். இவ்வாறானவர்களையே அரசு இராணுவ வீரர்கள் என்று கூறிப் பெருமையடைகின்றது. எனவே, அந்தபட்டியலில் சரத் பொன்சேகாவையும் சேர்க்கக்கூடாது. ஒரு கைதியாகவே அவரை நாம் பார்க்கின்றோம். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார் என்ற ஒரே காரணத்திற்காகச் சரத் பொன்சேகா இன்று அரசியல் ரீதியில் பழிவாங்கப்படுகின்றார். எனவே, அரசின் அராஜகத்துக்கு எதிராக மக்கள் குரல் கொடுக்கவேண்டும். ஜனாதிபதியிடம் சரத் பொன்சேகா மண்டியிட்டு மன்னிப்பு கோரினால் அவரை 24 மணித்தியாலங்களுக்குள் விடுதலை செய்துவிடுவர். ஆனால், பொன்சேகா மண்டியிட்டு மஹிந்த அரசிடம் ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார். சரத் பொன்சேகாவின் விடுதலைக்காக எமது கட்சி போராடினாலும், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையையே நாம் பிரதானமாகக் கையாள்வோம். இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. கே: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் பல்வேறு கோணங்களில் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை சர்வதேசம் ஏற்றுக் கொள்ளுமா?
ப: நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்துமாறே தற்போது சர்வதேச நாடுகள் கூறிவருகின்றன. அரசு குறித்த அறிக்கையை வெளியிட்ட பின்னரே அது குறித்து உலக நாடுகள் தனது நிலைப்பாட்டை அறிவிக்கும். அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகள் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை வைத்துக் கொண்டே இலங்கை விவகாரம் குறித்து அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்கும். ஏதாவது பிரச்சினை என்றால் ஆணைக்குழு அமைப்பதும், அந்தக் குழு விசாரணைகளை நடத்திய பின்னர் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதும் அதன் பின்னர் ஆட்சியாளர்கள் அந்த அறிக்கையை கிடப்பில் போடுவதும் நாட்டில் வழமையாகிவிட்டது. எனவே, நல்லிணக்க ஆணைக்குழுவின் விவகாரத்தில் அரசு தனது பழைய பாணியை பாவிக்க முடியாது. நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டில் இருக்க வேண்டும். இலங்கை அரசே ஒரு சுயாதீன ஆணைக்குழுவை நியமித்து அறிக்கை தயாரித்துள்ளதால் ஒரு சில நாடுகள் அறிக்கையை நிராகரிக்கவும் கூடும். கே: மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் அகழ்வு நடவடிக்கைக்கு இந்தியாவும், சீனாவும் ஏட்டிக்குப் போட்டியாக களமிறங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதே இது குறித்து உங்கள் கருத்து என்ன? ப: இலங்கையில் எண்ணெய்வளம் இருக்கின்றது என தெரிந்திருந்ததாலேயே இந்தியாவும், சீனாவும் இலங்கை அரசுக்கு உதவிகளை வாரி வாரி வழங்கின. உலக நாடுகள் அரசுக்கு ஆயுதங்களை வழங்க மறுத்தபோது சீன அரசு அள்ளிக்கொடுத்தது. இந்தியாவும் இலங்கையைத் தலைக்கு மேல் தூக்கிவைத்து ஆடியது. மஹிந்த அரசு எவ்வளவு கரக்கமுடியுமோ அவை அனைத்தையும் இந்த இரண்டு நாடுகளிடம் இருந்து கறந்துவிட்டது. தற்போதுதான் அதன் பின்விளைவுகளை அனுபவிக்கவேண்டிய நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. யுத்தத்தின் போது நாங்கள் உங்களுடன் தான் இருந்தோம் என இந்தியாவும், இல்லை… இல்லை நாங்கள்தான் ஆயுதங்களை வாரி வழங்கினோம் என சீனாவும் அரசுக்கு ஏதோவொருவிதத்தில் அழுத்தம் கொடுக்க ஆரம்பித்துவிட்டன. இந்த இரண்டு நாடுகளையும் பகைத்துக் கொண்டால் அரசுக்குச் சர்வதேச ரீதியில் வேறு பல சிக்கல்கள் ஏற்படும். எனவே, அரசியல் ரீதியாக சரணாகதி அடைய வேண்டியதொரு நிலை மஹிந்த அரசுக்கு ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் அதிக வட்டிக்குக் கடன்களை வாங்கும் அரசு அந்தச் சுமையையும் மக்கள் மீது சுமத்துவதற்கு முயற்சிக்கின்றது. விவசாயத்தில் சிறந்துவிளங்கிய எமது நாடு இன்று இறக்குமதியை நம்பியிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. உலக நாடுகளிடம் பிச்சைப்பாத்திரம் ஏந்தும் நிலையிலேயே எமது நாட்டின் பொருளாதாரம் உள்ளது. இந்நிலையில் சர்வதேசத்தின் தலையீட்டை இலங்கை அரசால் தட்டிக்கழிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. கே: வரவுசெலவுத்திட்டம் குறித்து உங்கள் கருத்து என்ன? ப: தனியார்துறை ஊழியர்களை மஹிந்த அரசு அடியோடு புறக்கணித்துள்ளது. அத்துடன் தோட்டத் தொழிலாளர்களின் வயிற்றிலும் அது அடித்துள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கு எவ்வித நன்மைகளும் இந்த வரவுசெலவுத் திட்டத்தில் இல்லை. மக்கள் நலன்களைப் புறக்கணித்துள்ள அரசு, பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக நிதியை ஒதுக்கியுள்ளது. அரசு இன்று அதிவேக வீதிகளை அமைக்கின்றது; துறைமுகங்களை அமைக்கின்றது; விமானநிலையங்களை அமைக்கின்றது. செல்வந்தர்களை கருத்திற்கொண்டே அரசு இவற்றையெல்லாம் செய்கின்றது. அடிப்படை வசதிகள்கூட இன்றித் தோட்டத் தொழிலாளர்கள் இன்று சொல்லொணாத் துன்பங்களை அனுபவிக்கின்றனர். இவர்களுக்கு ஒழுங்கான வீடுகள் இல்லை. “லயன்’ அறைகளிலேயே இன்றும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். அதிவேக வீதிகளை அமைத்து சாதனை படைக்கும் அரசுக்கு இவர்களின் சோகங்கள் புரியவில்லையா! உலக நாகரிகம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. ஆனால், தோட்டப்புற மக்களின் வாழ்க்கை இன்று படுபாதாளத்தை நோக்கி பயணிக்கின்றது. ஆசியாவின் ஆச்சரியமாக இலங்கை மாறவேண்டுமானால் இவர்களின் பிரச்சினைகளையும் அரசு கவனத்தில் எடுக்கவேண்டும். கே: நுவரெலியா மாவட்டத்தில் வட்டகொட ஜொக்ஸ்டன் தோட்டத்தில் இராணுவ முகாமொன்றை அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. மலையகத்தையும் இராணுவமயப்படுத்துவதற்கு அரசு முயற்சிக்கின்றது எனக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இது பற்றி உங்கள் கருத்து என்ன? ப: மலையகத்தில் மட்டுமல்ல, மாவட்ட ரீதியில் அரசு இராணுவ பலத்தை ஏற்படுத்தி வருகின்றது. அரச பயங்கரவாதத்தை நாடு பூராகவும் விஸ்தரித்து எதுவித தங்குதடையும் இன்றி கொடுங்கோல் ஆட்சியை முன்னெடுப்பதற்கே அரசு இந்த அத்திவாரத்தை இட்டு வருகின்றது. வடக்கு, கிழக்கு மாகாணத்தை வாட்டிவதைத்த இந்த இராணுவப் பிரச்சினை மலையகத்திலும் தொற்றிக் கொண்டால் நிலைமை மோசமாகிவிடும். மக்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தெழ வேண்டும்.இடதுசாரிகளுக்கு ஆட்சிபீட மேறக்கூடிய சக்தியை மக்கள் வழங்குவார்களாயின் சுபீட்சமான எதிர்காலத்தை நோக்கி நாம் அனைவரும் சுதந்திரமாக நகர முடியும். Share

No comments:

Post a Comment