Translate

Thursday 15 December 2011

யாழ்ப்பாணத்தில் ஊடக அடக்கு முறை உண்மைகளை வெளியிட்டால் ஆபத்து; இதுதான் அரசு வழங்கிய சுதந்திரம் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில்


யாழ்ப்பாணத்தில் இன்று ஊடக அடக்கு முறை அதிகரித்துள்ளது. சுதந்திரமாக ஒரு பத்திரிகை தனது கருத்தை வெளியிடமுடியாது. ஊடகவியலாளர்கள் சுதந்திரமாக நடமாடவும் முடியாத நிலை. இது தான் இந்த அரசு ஏற்படுத்திய ஊடக ஜனநாயகம். இன்று யாழ்ப்பாணத்தின் உண்மை நிலையை அறிய முடியாது.

 ஒரு பத்திரிகை உண்மைகளை வெளியிட்டால், அந்த ஊடகம் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டு கொலை செய்யப்படுகின்றனர். எந்தவிதமான பாதுகாப்பும் இல்லை. இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரம சிங்க நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். வெகுஜன தொடர்பு அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் தொடர்ந்து கூறியதாவது: ஊடகவியலாளர்கள் கடத்தப்படுகின்றனர்; தாக்கப்படுகின்றனர்; கொலை செய்யப்படுகின்றனர்.
 ஆனால், அவர்களுடன் தொடர்புடையவர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்படவும் இல்லை. பிரதீப் எக்னெலிகொட எங்கே? லசந்த விக்கிரமதுங்கவை கொலை செய்தவர்கள் எங்கே? இன்று ஊடகவியலாளர்களுக்கும் பாதுகாப்பு இல்லை. ஓர் அரசின் குறைபாடுகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது ஊடகங்களின் கடமை. ஆனால், இங்கு பல இணையதளங்கள் மூடப்பட்டுள்ளன. ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கின்றோம்; கௌரவிக்கின்றோம் என்று கூறிக்கொண்டே மறுபுறம் ஊடக அடக்கு முறைக்குத் தூபம் போடுகின்றது அரசு.
 25 வருடங்களுக்கு மேல் பணிபுரியும் ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்குவதாகக் கூறப்பட்டுள்ளது. 25 வருடங்களாகப் பணிபுரிந்த ஊடகவியலாளர்கள் இப்போது எங்கே இருக்கிறார்கள்? தலைமறைவாகி விட்டனர்; கடத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எப்படி கடன் வழங்கப் போகின்றீர்கள்? எனவே, பத்து வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர்களுக்கு வட்டியில்லாக் கடன் வழங்கவேண்டும் என்றார் ரணில்.

No comments:

Post a Comment