
ஒன்று, ஆயுதம் ஏந்திய இன்னொரு விடுதலைப் போராட்டம் சாத்தியமில்லை. இரண்டாவது, வெளிப்படைத் தன்iமையுடனான ஜனநாயகப் போராட்டம். இந்த இரண்டுக்குமே நெருங்கிய தொடர்பு இருப்பதைப் புரிந்து கொள்ளலாம்.
ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தை தமிழ் மக்கள் விரும்பித் தெரிவு செய்யவில்லை. மாறாக, பல பத்து வருடங்களாக சிங்கள ஆட்சியாளர்களுடன் சமாதன வழிகளில் உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கான ஜனநாயக முறைமைப் பொராட்டங்கள் எல்லாம் தோல்வியைத் தழுவியதுடன், அந்தப் போராட்டத்திற்கெதிரான சிங்கள ஆட்சியாளர்களின் ஆயுத வன்முறையும், அடக்குமுறையுமே தமிழ் மக்களை ஆயுதப் போராட்டத்திற்குள் வலிந்து தள்ளியது.
2009 மே மாதத்தில் விடுதலைப் புலிகளது இராணுவக் கட்டமைப்புக்கள் சிங்களப் படைகளால் நிர்மூலமாக்கப்பட்டதன் பின்னர், இலங்கைத் தீவில ஆயுத மோதல்களுக்கான சாத்தியம் அற்றதான நிலையை உருவாக்கியுள்ளது. சிங்கள ஆட்சியாளர்களது கொரூரமான இன அழிப்புப் போர் அத்தகையதொரு அசாத்திய சூழ்நிலையை உருவாக்கியுள்ள போதும், ஆயுத போராட்டத்திற்கான அடிப்படைக் காரணங்களை இந்தப் போரும், போரின் முடிவும் அதிகரிக்கவே செய்துள்ளன.
மேலாதிக்க இனவாத சிங்கள ஆட்சியாளர்கள் தமிழ் மக்களை அடக்கி வைத்திருப்பதன் மூலம் அவர்களது அரசியல் அபிலாசைகள் வெளிக்கிளம்பாமல் பார்த்துக் கொள்ளலாம் என்று நம்புகின்றார்கள். யுத்தம் முடிந்த பின்னரான இரண்டரை வருட காலங்கள் இதனைத் தெளிவாகவே புரிய வைத்துள்ளது. இலட்சக்கணக்கான படைகளை தமிழர் பகுதிகளில் நிலை கொள்ள வைப்பதனூடாகவும், சிங்களக் குடியேற்றங்களை மேற்கொள்வதனூடாகவும் தமிழ் மக்களது இறைமை குறித்த சிந்தனைகளை அகற்றுவதற்கு சிங்கள அரசு முயற்சி செய்கின்றது.
சிங்கள அரசின் இந்த அடக்கு முறைகளும், சிங்களக் குடிபரம்பல் உத்தியும் இன்னொரு எதிர்வினையை உருவாக்கி வருவதை சிங்கள ஆட்சியாளாகள் புரிந்து கொள்ளவில்லை. இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமாக இருக்கும் சிங்களவாகளால் அங்குள்ள சிறுபான்மை இனமான தமிழ் மக்கள் அடக்கப்பட்டு, அச்சுறுத்தப்பட்டு, அடிமைப்படுத்தப்படும் நிலை, இலங்கைத் தீவை அண்மித்த தமிழகத்தில் பலத்த எதிர்வினைகளை உருவாக்கி வருகின்றதை நாம் அவதானிக்கலாம்.
ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான அமைப்புக்கள் அங்கு பெருகி வருகின்றன. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான தீர்மானங்கள் தமிழக சட்ட சபையிலும் நிறைவேற்றப்படுகின்றன. மாவீரர் தினங்கள் பிரமாண்டமாக நடாத்தப்படுகின்றன. விடுதலைப் புலிகளுக்கான ஆதரவுத் தளம் விரிவு படுகின்றன. இது, சிங்கள ஆட்சியாளாகளது தமிழின எதிர்ப்பு நடவடிக்கைகளால் விரிவு பட்டுச் செல்லப் போகின்றது. குறிப்பாகச் சொல்லப்போனால், தற்போது தமிழக அரசியல் களத்தில் தமிழீழ மக்களது அவலங்களின் பிதிபலிப்புக்கள் பெருமளவில் ஆளுமை செலுத்துகின்றன. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி வேரோடு சாய்க்கப்பட்டு வருவதற்கு இதுவே முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
சிங்கள ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் இதே பாதையில் பயணிக்க முற்படுவார்களானால், தமிழகம் மீண்டும் தமிழீழ விடுதலைப் போருக்கான பின்தளமாக மாற்றம் பெறுவது தவிர்க்க முடியாததாக ஆகிவிடும். அதனைத் தடுக்க முடியாத நிலை இந்திய மத்திய அரசுக்கும் ஏற்பட்டுவிடும். எனவே, இன்னொரு ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கான அவசியத்தையும், அவசியம் இன்மையையும் தீர்மானிக்கும் பொறுப்பில் சிங்கள ஆட்சியாளர்களே உள்ளனர். ஆகவே, இன்னொரு ஆயுதப் போராட்டம் சாத்தியமே இல்லை என்ற சிங்கள ஆட்சியாளர்களது கருத்துருவாக்கத்திற்குள் நாம் புதைந்து கொள்வதில் அர்த்தமே இல்லை.
இரண்டாவது, வெளிப்படைத் தன்மையுடனான ஜனநாயகப் போராட்டம் என்ற வாதம். விடுதலை கோரும் இனம் ஒன்றின் போராட்ட வடிவங்கள் வெறும் ஜனநாயக வழிமுறைமைகளால் வென்றெடுக்கப்பட முடியாதது. ஜனநாயக முறைமை தோற்றுப் போனதன் காரணமாகவே ஆயுதப் போராட்டம் உருவானது என்ற யதார்த்தத்திலிருந்து இது புரிந்து கொள்ளப்பட வேண்டியது. முள்ளிவாய்க்காலில் தங்களால் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்கள் மீதான எந்த வகையான தார்மீகப் பொறுப்புக்களுமின்றி, அதனைச் சிங்கள தேசத்திற்கான வெற்றி தினமாகக் கொண்டாடப்பட்டதிலிருந்து, மாவீரர் நினைவாக ஆயலயங்களில் மணி கூட ஒலிக்கக் கூடாது என்ற சிங்கள அட்ககுமுறை வரை, ஜனநாயக முறைமைப் போராட்டம் என்பது சிங்கள இனவாதத்திற்குள் அரங்கேற்றப்பட முடியாதது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
புலம்பெயர் நாடுகளில், விடுதலைப் புலிகள் எப்போதுமே ஜனநாயக முறைமைப் போராட்டங்களையே நடாத்தி வந்துள்ளனர். ஆயுத போராட்ட காலங்களில் மேற்கொள்ளப்பட்ட பணச் சேகரிப்பு விவகாரம், சட்டத்தை மீறிய செயலாக நடவடிக்கைகளுக்குட்படுத்தப்பட்டதைத் தவிர்த்து, விடுதலைப் புலிகளது புலம்பெயர் கட்டமைப்புக்கள் மீது வேறு எந்தக் குற்றச்சாட்டுக்களும் சுமத்தப்படவில்லை. எனவே, புலம்பெயர் தமிழ் மக்களது ஜனநாயக முறைமைப் போராட்டம் என்பது முள்ளிவாய்க்காலுக்குப் பின்னரானது அல்ல.
இங்கே, வெளிப்படைத் தன்மை என்ற கருத்து, சிங்கள தேசத்தின் பாதுகாப்பு அரணாகவே முன்நிலைப்படுத்தப்படுகின்றது. மிகக் கொடூரமான இனம் ஒன்றின் அடக்குமுறையிலிருந்து தமிழ் மக்களை விடுவிப்பது என்பது ஜனநாயக முறைமையில் சாத்தியமற்றது என்ற நிலையில், வெளிப்படைத் தன்மை என்பது தமிழீழ விடுதலைக்கான புலம்பெயர் தளங்களது அத்தனை செயற்பாடுகளையும் எதிரிக்கு முன்னறிவித்தல் செய்வதான அணுகுமுறையாகவே இருக்கும். அந்த முன்னறிவித்தல், எதிரியை நிரந்தரமாகத் தப்பிக்க வைக்கவே உதவும்.
உதாரணமாக, வெளிப்படைத் தன்மையுடன் ‘சனல் 4′ இலங்கையின் கொலைக்களம் என்ற ஆவணத்தைத் தயாரிப்பதும், காட்சிப்படுத்தவதும் சாத்தியம்தானா? என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.
வெளிப்படைத் தன்மையுடனான ஜனநாயகப் போராட்டம் என்ற சிங்களக் கருத்தியலை இறுதி யுத்த களத்திலிருந்து தப்பி வந்ததாகத் தெரிவிக்கும் முன்னாள் விடுதலைப் புலிப் போராளிகள் சிலரும் நீட்டி முளங்குகின்றனர். அண்மையில், பிரான்சிலிருந்து ஒலிபரப்பாகும் தமிழ் வானொலி ஒன்றில், தலைமைச் செயலகம் சார்பாகக் கலந்துகொண்ட ஒரு முன்னாள் போராளியும் இந்தக் கருத்தையே வலியுறுத்தினார். புலம்பெயர் தமிழ் மக்கள் வெளிப்படைத் தன்மையுடனான ஜனநாயகப் போராட்டம்தான் நடாத்த வேண்டும் என்றால், அதற்கு தலைமைச் செயலகம் எதற்கு, அதன் பிரஞ்சுப் பணிப்பாளராக ஒருவர் எதற்கு? என்ற கேள்விக்கு அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை.
ஆக மொத்தத்தில், புலம்பெயர் தமிழ் மக்களைக் குழப்புவதற்கும், பிளவு படுத்துவதற்கும், அவர்களது ஒன்றுபட்ட பலத்தைச் சிதைப்பதற்கு மட்டுமல்லாமல், தமிழீழ மக்களுக்கான இன்னொரு விடுதலைப் போராட்டத்தின் பங்குதாரர்களாக அவர்கள் இருந்துவிடக் கூடாது என்ற சிங்கள தேசியவாதத்தின் உளவியல் போரின் ஒரு வடிவமாகவே இதனை நாம் பார்க்கவேண்டும்.
- இசைப்பிரியா
URL simplifié: http://www.eelanadu.info/?p=1493
No comments:
Post a Comment