Translate

Monday, 5 December 2011

நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை வைத்துக் காமெடிக்குத் தயாராகும் சிங்கள ஆட்சியாளர்கள்!


இறுதி யுத்தத்தின் பின்னர் சிங்கள ஆட்சியாளாகளால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு தனது அறிக்கையை, கடந்த 20-11-2011 அன்று சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவிடம் கையளித்துள்ளது.

தமிழ் மக்களது இனப் பிரச்சினை விவகாரத்தில் காலம் கடத்துவது, தப்பித்துக்கொள்வது என்ற சிங்கள சித்தாந்தத்தில் இந்த அறிக்கையும் புதைந்து போகாத வகையில் அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் அழுத்தங்களைப் பிரயோகித்த காரணத்தால், சிங்கள ஆட்சியாளர்களால் இதனைத் தவிர்க்க முடியாமல் போய்விட்டது.
இனப்பிரச்சினை விவகாரத்தில் இதுவரை காலமும் அமைக்கப்பட்ட ஆணைக்குழு அறிக்கைகள் போன்று, இந்த அறிக்கையை இருட்டு அறைக்குள் புதைத்து விடுவதற்கு அனைத்துலக சமூகம் அனுமதிக்கப் போவதில்லை என்பதனால், இந்த அறிக்கை மீது உருப்படியான நடவடிக்கை எதையாவது எடுத்தே ஆகவேண்டிய கட்டாயமும் உருவாகியுள்ளது.
நல்லிணக்க ஆணைக் குழுவில் தமக்கு நம்பிக்கை இல்லை என்ற கருத்தினையே அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் வெளிப்படுத்தி வரும் நிலையில், உருவாகக்கூடிய அனைத்துலக விசாரணையிலிருந்து தப்பிக் கொள்ளும் ஒரே மார்க்கமாக நல்லிணக்க ஆணைக் குழு அறிக்கையே இருப்பதால், அதை வைத்தே தங்கள் மீதான போர்க் குற்றச்சாட்டிலிருந்து தப்பித்துக்கொள்ள மகிந்த சகோதரர்கள் முயற்சி செய்கின்றனர்.
இறுதிப் போரின்போது தமிழ் மக்கள்மீது போர்க் குற்றங்கள், மனிதத்திற்கு எதிரான குற்றங்கள் எதுவும் நடைபெறவில்லை. விடுதலைப் புலிப் பயங்கரவாதிகளது பிடியில் தமிழ் மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கைகள் மட்டுமே அரச படைகளால் மேற்கொள்ளப்பட்டது. அந்த மனிதாபிமான மீட்புப் போரின்போது தமிழர் ஒருவரேனும் கொல்லப்படவில்லை என்று தொடர்ந்தும் தெரிவித்துவந்த சிங்கள ஆட்சியாளர்கள், வெளிவந்த போர்க் குற்ற ஆதாரங்களையும் போலியானது என்று நிராகரித்தும் வந்தனர்.
தற்போது, சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் எத்தனை வீதம் உண்மையும், நேர்மையும் பதிவாகியுள்ளதோ என்ற சந்தேகமே தமிழர் தரப்புக்கு உள்ளது. அதே வேளை, இறுதி யுத்த காலத்தில் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட போர்க் குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் கடமையை ஒரு சில இராணுவ அதிகாரிகள், சிப்பாய்களின் தலையில் போட்டுத் தாம் தப்பிக்கொள்ளும் தந்திரோபாயத்தை மகிந்த சகோதரர்கள் மேற்கொள்வதற்கு முயற்சிக்கின்றாhகள் என்பது தற்போதைய அவாகளது வாய் மொழிகள் உறுதிப்படுத்துகின்றது.
அண்மையில், சிறிலங்காவின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும், அவரது சகோதரரும், சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலருமான கோத்தபாய ராஜபக்ஷவும் போர்க் குற்றங்கள் புரிந்ததாக அடையாளப்படுத்தப்படும் இராணுவத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவும், தண்டனை வழங்கவும் தாம் தயங்கப் போவதில்லை என்று சூழுரைத்துள்ளனர். குற்றவாளிகளே குற்றவாளிகளைத் தேடுவதும், அவர்களுக்குத் தண்டனை வழங்க எத்தனிப்பதுமான ‘தாம் தப்பித்துக்கொள்ளல்’ சமன்பாட்டுக்குள் தமிழர்களுக்கான நீதியைப் புதைக்க முயற்சிக்கின்றனர்.
எனினும், மகிந்த சகோதரர்களின் தப்பித்தல் சமன்பாடுகள் சிங்கள கடும்போக்காளர்களின் கோபத்தைக் கிளப்பியுள்ளது. இரண்டு இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்து, சிங்கள ஆட்சியை வன்னிக்கும் விஸ்த்தரித்த சிங்கள தேசப் புதல்வர்களான இராணுவத்தினர் ஒருவர் தண்டிக்கப்பட்டாலும் அதற்கு எதிராகத் திரண்டு போராடுவோம் என்று சிங்களக் கடும்போக்காளர்கள் எச்சரித்துள்ளனர்.
தமிழீழ மக்களுக்கு எதிரான போரை நடாத்திய இராணுவத்தினரை தேசப் புதல்வர்களாகக் கொண்டர்டும் சிங்கள மக்கள் மத்தியில், சிங்களக் கடும்போக்காளர்களது இந்த எச்சரிக்கை வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆக, ‘நான் அடிப்பது போல அடிக்கிறேன், நீ பிடிப்பது போலப் பிடி’ என்ற காமெடி ஒன்றை நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை சிங்கள தேசத்தில் உருவாக்கப் போகின்றது.
தமிழர்களுக்கெதிரான போரில் சிங்கள தேசம் வெற்றியடைவதற்குக் காரணமான அரச படையினரி பெற்றுக்கொள்ளும் மூன்றாவது பிள்ளைக்கு ஒரு இலட்சம் ரூபாய் என இனவாத சன்மானம் வழங்கும் மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களுக்கு குறைந்த பட்ச நீதியையாவது பெற்றுக்கொடுக்க முயலும் மேற்குலகுக்கு சிங்கள தேசம் இன்னொரு பாடத்தைப் புகட்டப் போகின்றது.
URL simplifié: http://www.eelanadu.info/?p=1460

No comments:

Post a Comment