கொழும்பு, ஜன.9 விடுதலைப் புலிகளின் முத்திரைகளைக் கொண்ட கடிதங்கள் மற்றும் சரக்குகளை கையாளும் போது, சர்வதேச தபால் ஒன்றியத்தின் சில விதிகளை புறக்கணித்துச் செயல்படப் போவதாக இலங்கை தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளின் சின்னங்கள் கொண்ட முத்திரைகள் பிரான்ஸ், கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் புலம் பெயர்ந்த தமிழர் அமைப்புகளால் வெளியிடப்பட்டுள்ளன.
சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளின்படி எந்தவொரு முத்திரையும் அங்கத்துவ நாடொன்றினால் அங்கீகரிக்கப்பட்டால் அது சர்வதேச நாடுகளின் தபால் சேவைகளின்போது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அதாவது, அங்கத்துவ நாடொன்றின் தபால் முத்திரை ஒட்டப்பட்ட தபால்கள் எந்த நாட்டுக்கும் அனுப்ப முடியும்.
இதன் காரணமாக, சர்வதேச தபால் ஒன்றியத்தில் உள்ள சில விதிகளை புறக்கணித்து நடக்கத் தீர்மானித்துள்ளதாக இலங்கை தபால் அதிகாரிகள் தெரிவித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் முத்திரை ஒட்டப்பட்ட தபால்களை இலங்கைக்கு அனுப்ப வேண்டாம் என பிரான்ஸ் தபால்துறைக்கு கூறியுள்ளதாக தபால்துறைத் தலைவர் எம்.கே.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும், உள்நாட்டு சட்டங்கள், விதிகளின்படியே செயல்படப் போவதாகவும் சர்வதேச தபால் ஒன்றியத்தின் விதிகளுக்கு ஒருபோதும் இணங்கப் போதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment